செங்குட்டுவன் காலத்து இரண்டு சரித நிகழ்ச்சிகள்

bookmark

செங்குட்டுவனது நீடித்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த விசேடங்களுள்ளே, இரண்டு சரிதங்கள் முக்கியமானவை. அவை, கோவலன் கண்ணகிகளைப் பற்றியதும், கோவலனுடைய கணிகைமகள் மணிமேகலையைப் பற்றியதுமாம். இவ்விருவர் சரிதங்களில், முன்னதைச் செங்குட்டுவன் சகோதரரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரமென்ற காவியத்தாலும், பின்னதை அவ்வடிகள் காலத்துப் புலவராகிய மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் மணிமேகலையென்ற காவியத்தாலும் மிக வழகாகப் பாடியிருக்கின்றனர். இவ்விரண்டு நூல்களும் அகவற்பாவில் தனித்தனி முப்பது காதைகளுடையனவாக அமைந்துள்ளன. இவற்றிற்கண்ட அவ்விருவர் சரித்திரச் சுருக்கங்களும் அடியில் வருமாறு:-

I. கோவலன் கண்ணகிகள் வரலாறு
சோணாட்டில், காவிரி கடலொடு கலக்குமிடத்தமைந்ததும் சோழரது பழைய இராஜதானியுமாகிய புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில்,வணிகர் தலைவனாகிய மாசாத்துவான் என்பவன் தன்மகன் கோவலனுக்கு, மாநாய்கன் என்ற வணிகன் மகள் கண்ணகியை மணம்புரிவித்துத் தனிமாளிகையில் அவர்களை வாழ்ந்து வரும்படி செய்ய, அவர்களும் அறவோர்க்களித்தல் அநதணரோம்பல் முதலிய தருமங்களைச் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர்.

இங்ஙனம் நிகழ்ந்துவருங்கால், மிக்க அழகும் ஆடல் பாடல்களிற் றேர்ச்சியுமுடைய மாதவி என்னும் நாடகக் கணிகையைக் கோவலன் காதலுற்று, தன்பாலுள்ள பொருள்களை நாளும் அவள் பொருட்டுச் செலவிட்டு அவளுடன் மகிழ்ந்து வருவானாயினன். கண்ணகி தன் கணவனது பிரிவுக்கு வருந்தினளாயினும், அதனை வெளிக்காட்டாதிருந்தாள். இங்ஙனம் நிகழ, சோழர்கள் இந்திரன் பொருட்டு ஆண்டுதோறும் நடத்தும் இந்திர விழாவானது அக்காலத்து நடைபெற்றது. அதன்முடிவில் நகரத்துள்ளார், வழக்கம்போலத் தத்தம் பரிவாரங்களுடன் கடலாடுதற்குச் சென்றனர். கோவலனும் மாதவியுடன் கடற்கரையடைந்து ஓரிடத்திருந்து பலவகைப் பாடல்ளைப் பாடிக்கொண்டு வீணையை எடுத்து வாசித்தான். அவன் பாடியவை,வெவ்வேறு அகப்பொருட்சுவை தழுவியிருந்தமையால், மாதவி, " இவன் வேறு மகளிர்பால் விருப்புடையன் போலும்" என்றெண்ணிப்புலந்து,அவன் கையாழை வாங்கித், தான் வேறுகுறிப்பில்லாதவளாயினும், அக் குறிப்புக்கொண்ட அகப்பொருட்சுவை தழுவிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வீணையை வாசித்தனள். அவள் பாடியவற்றைக் கேட்டிருந்த கோவலன் " வேறொருவன்மேற் காதல்கொண்டு இவள் பாடினள்" என்றெண்ணி, ஊழ்வசத்தால் அவளைத் துறந்து தன் மனையடைந்து கண்ணகியைக் கண்டு, " பொய்யை மெய்யாகக் காட்டியொழுகும் பரத்தையை மருவி வறுமையுற்றுக் கெட்டேன்; அஃது எனக்கு மிகவும் நாணைத்தருகின்றது" என்றான்.

கண்ணகி, "மாதவிக்கு மேலுங்கொடுக்கப் பொருளின்மையால் இங்ஙனம் கவல்கின்றான்" என்று கருதி," அடியேனிடத்து இரண்டு சிலம்புகள் உள்ளன: அவற்றைக் கொண்டருள்க" என்றாள். இதுகேட்ட கோவலன், " ஆயின் மதுரையடைந்து அச்சிலம்பையே முதலாகக்கொண்டு வாணிகஞ்செய்து பொருள்தேட எண்ணுகின்றேன்; நீயும் உடன்வருக" என்றான்.இதற்குக் கண்ணகியும் சம்மதிக்க,அவ்விரவின் கடையாமத்தே ஒருவருமறியாவகை அவ்விருவரும் புறப்பட்டுக் காவிரியின் வடகரை வழியே சென்று,ஆங்கொரு சோலையில் மதுரைக்குப் புறப்படச் சித்தமாயிருந்த கௌந்தியடிகள் என்ற ஜைநசந்யாஸிநியுடன் கூடிப்பிரயாணஞ் செய்துகொண்டு உறையூர் வந்து சேர்ந்தார்கள்.

இங்ஙனம் வந்தவர்கள், மறுநாள் அவ்வூரினின்று புறப்பட்டு இடைவழியிலெதிர்ப்பட்ட அந்தணனொருவனால் மதுரைக்கு மார்க்கந் தெரிந்துகொண்டு அப்பாற் சென்றனர். செல்கையில், காலைக்கடன் கழிப்பதற்காகக் கோவலன் ஒரு பொய்கைக்கரையை அடைந்துநிற்க,ஆங்குத் தன் நாடகக் கணிகையால் விடுக்கப்பட்டுத் தன்னைத் தேடிவந்த கௌசிகன் என்ற பார்ப்பனனைக்கண்டு, தன் தந்தைதாயரின் துயரங்களையும் மாதவியின் பிரிவாற்றாமையையும் அவன் சொல்லக்கேட்டு வருந்தி, தான் புறப்பட்ட காரணத்தைத் தன் பெற்றோர்க்குக்கூறித் தன் வந்தனங்களையும் தெரிவிக்கும்படி சொல்லி, அவனை யனுப்பிவிட்டு, முன் போலவே கௌந்தியடிகளுடன் பிரயாணமாகி மதுரையை நெருங்கி, வையையாற்றைத் தொழுது படகேறி, அந்நகரின் மதிற்புறத்துள்ள ஜைனமுனிவரிருக்கையில் அவ்வடிகளுடன் தங்கினான்.

மறுநாட்காலையில், கோவலன் கௌந்தியடிகளை வணங்கித் தன் துன்பங்களைக்கூறி வருத்தமடைய, அவளால் தேற்றப்பட்டு,கண்ணகியை அவ்வடிகள் பார்வையில் வைத்துப்பின்,வாணிகஞ்செய்தற்குரிய இடமறிந்து வரும்பொருட்டு மதுரையினுள்ளே பிரவேசித்து அந் நகரவளங்களைக்கண்டு மகிழ்ந்து திரும்பிக் கௌந்தியிடம் வந்து சேர்ந்து, தன்பழைய நட்பாளனும் தலைச்செங்கானம் என்னும் ஊரிலுள்ளவனுமாகிய மாடலனென்னும் அந்தணனை அவ்விடத்துக்கண்டு அளவளாவிக் கொண்டிருந்தான். அப்போது கௌந்தியடிகள்,தம்மிடம்வந்த இடைச்சியர் தலைவியாகிய மாதரி என்பவளது உத்தமகுணங்களை நோக்கி, அவள்பாற் கண்ணகியை அடைக்கலமாக ஒப்பிக்க, அவள் மகிழ்ச்சியுடனேற்றுக் கண்ணகியைக் கோவலனுடன் அழைத்துக்கொண்டு ஆயர்பாடியிலுள்ள தன் மனையொன்றில் அவர்களையமர்த்தி, சமைத்துண்ணுதற்கு வேண்டிய பண்டங்களுமளித்துத் தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குத் துணையாகவைத்துப் பெரிதும் உபசரித்தனள். கண்ணகியும் தான் பெற்றவற்றைப் பக்குவமாகச் சமைத்துத் தன் கணவனுக்கு முறைப்படி பரிமாறக்,கோவலன் இனிதாக உண்டு, பின் தன் மனைவியை அருகிலழைத்துத் தான் அவட்குச்செய்த தவறுகளையும் தன் கூடாவொழுக்கங்களையும் கூறி முன் புரிந்தவற்றுக்கு இரங்கி அவளை யருமைபாராட்டி விட்டு, "இனி உன் சிலம்புகளில் ஒன்றைக்கொண்டு நகரத்துள்ளே சென்று விற்று விரைவில் வருவன்; அதுவரையில் நீ ஆற்றியிரு;" என்றுசொல்லி,அவளது சிலம்புகளிலொன்றை வாங்கிக்கொண்டு சென்று,எதிர்ப்பட்ட துன்னிமித்தங்களையும் அறியாதவனாய் மதுரையின் ஆவணவீதியினுள்ளே புகுந்தனன்.

இங்ஙனம் புகுதலும், பொற்கொல்லர்நூற்றுவர் தன் பின் வர மிக்க ஆடம்பரத்துடன் வருகின்ற பொற்கொல்லர் தலைவனைக் கோவலன் கண்டு, "இவன் அரசனாற் பெயர்பெற்றவன்போலும்" என்றெண்ணி அவனருகிற்சென்று, "அரசன்தேவி அணிதற்குத் தகுதியான சிலம்பொன்றை விலை மதித்தற்கு நீ தகுதியுடையையோ" என்று அவனை யுசாவ,அக்கொல்லனும் மிக்கபணிவுடன் தான் வல்லனாதலைக் குறிப்பிக்க கோவலன் தான்கொணர்ந்த சிலம்பினை அவனிடங் காட்டினான். அவன் பார்த்து, "இதனை அரசனுக்கு நான் தெரிவித்து வருமளவும் இவ்விடத்தே நீவிர் இரும்" என்று ஓரிடத்தைக் கோவலனுக்குக் காட்டிச் சென்றான். சென்ற பொற்கொல்லன், முன்பு அரசன்மனையுள் சிலம்பொன்றை வஞ்சித்துத் திருடிக்கொண்டவனாதலால், "யான் கவர்ந்த சிலம்பு என்னிடத்தேயுள்ளது என்று அரசன் அறிதற்குமுன்னே அதனோடொத்த சிலம்பைக் கொணர்ந்த இப்புதியவனால் என்மீதுண்டாகும் ஐயத்தைப் போக்கிக்கொள்வேன்"என்று தனக்குள்ளே சூழ்ந்து, அரண்மனையை-யடைந்து, காமபரவசனாய் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாண்டியனைக்கண்டு வணங்கி - "அரசே! கன்னக்கோல் முதலியவையில்லாமலே அரண்மனையுள்ளிருந்த சிலம்பைத் திருடியகள்வன் அடியேனுடையமனையில் வந்திருக்கிறான்."என்று சொல்ல, பாண்டியன் உடனே காவலாளரை அழைத்து,"என் மனைவியின் சிலம்பு இவன்கூறிய கள்வன் கையிடத்ததாயின் அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணருதிர்" என்று ஆராய்ச்சியின்றியே கட்டளையிட்டனன். பொற்கொல்லன் தனதெண்ணம் பலித்ததென்று அகமகிழ்ந்து அக்காவலாளர்களுடன் சென்று கோவலனையடைந்து அவனை நோக்கி, "இவர்கள் அரசன் கட்டளைப்படி சிலம்புகாண வந்தவர்கள்" என்று கூறவும், கோவலன் முகக்குறி முதலியவற்றைக் கண்டு "இவன் கள்வனல்லன்" என்று கூறிய காவலாளர்க்கு "இவன் கள்வனே" என்பதை வற்புறுத்திப் பக்கத்தில் நின்றான். அப்போது, அவர்களிற் கொலையஞ் சாதானொருவன் விரைந்து சென்று தன் கைவாளாற் கோவலனை வெட்டி வீழ்த்தினன்.

இப்பால், கண்ணகியிருந்த இடைச்சேரியிலே பலவித உற்பாதங்கள் உண்டாயின. அவற்றைக்கண்ட மாதரி முதலியோரால் உற்பாத சாந்தியாகத் திருமாலைக்குறித்துக் குரவைக் கூத்தொன்று நிகழ்த்தப்பட்டது. அதன் முடிவில் மாதரி நீராடுதற் பொருட்டு வையையாற்றுக்குச் சென்றாள்.அப்பொழுது, சிலம்பு திருடியவனென்று கோவலனைக் காவலாளர் கொன்ற செய்தியை மதுரையுள்ளிருந்துவந்த ஒருத்தி சொல்லக்கேட்ட கண்ணகி, பதைபதைத்து மூர்ச்சித்துப் பலவாறு புலம்பித் தானும் அவனுடன் இறக்கத் துணிந்து, இடைச்சியர்மத்தியில் நின்று, சூரியனை நோக்கி "செங்கதிர்ச் செல்வனே! நீ யறிய என் கணவன் கள்வனோ?"என்றாள். அவன், "நின் கணவன் கள்வனல்லன்; அவனை அவ்வாறுசொன்ன இவ்வூரை விரைவில் தீயுண்ணும்" என்று அசரீரியாகக் கூறினன். அதனைக்கேட்ட கண்ணகி மிகுந்த சீற்றத்தோடும் தன்னிடமுள்ள மற்றொருசிலம்புடனே புறப்பட்டுக் கண்டார்நடுநடுங்கும்படி வீதிவழியேசென்று அங்கு நின்ற மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக்கண்டு அளவுகடந்த துன்பத்திலாழ்ந்து அவனை முன்னிலைப்படுத்திப் பலவாறு பிரலாபித்து அவனுடம்பைத் தழுவிக் கொள்ளவும், அவ்வளவில் அவன் உயிர்பெற்றெழுந்து "மதிபோன்ற முகம் வாடியதே" என்று சொல்லித் தன் கையாலே அவள் கண்ணீரை மாற்ற, கண்ணகி அவன் பாதங்களைப் பணிந்தனள். உடனே, அவன் "நீ இங்கிரு"என்று சொல்லி அவ்வுடம்பை ஒழித்துவிட்டுத் தேவருலகம் புகுந்தான்.

இங்கே இவ்வாறு நிகழப், பாண்டியன் மனைவி தான் கண்ட தீச்சகுனங்களைத் தன் கணவனுடன் பேசிக்கொண்டிருக்கு நிலையிலே, கண்ணகி கோபமிக்கவளாய் அரண்மனை யடைந்து, வாயில்காவலனால் தன் வரவை அரசனுக்கறிவித்து, அநுமதிபெற்று அரசன்முன்சென்று,அவன்கேட்பத் தன் ஊர் பெயர் முதலியவற்றையும், ஆராயாது கோவலனைக் கொல்வித்த அவனது கொடுங்கோன்மையையும் மிகுந்த
துணிவுடன் எடுத்து மொழிந்தனள். இதனைக்கேட்ட பாண்டியன்"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று – வேள்வேற் கொற்றங்காண்"என்று கூற, கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதைக் காட்டும் பொருட்டுத் "தன் சிலம்பினுள்ளேயிருக்கும் பரல் மாணிக்கமாம்"என்றாள். இதுகேட்ட அரசன் "நன்று; தேவிசிலம்பின் பரல் முத்து"என்றான். உடனே, அவற்றின் உண்மையைச் சோதிப்பதற்காகக் கோவலனிடமிருந்த சிலம்பு வருவிக்கப்பட்டது. அதனைக் கண்ணகி வாங்கித் தன்கையால் உடைக்கலானாள். உடைக்கவும் அதனுள்ளிருந்த மாணிக்கப்பரல் பாண்டியனது
வாயடியிற்சென்று தெறித்தது. அதுகண்டு அரசன் பதை பதைத்து - "இழிந்த பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட கொடுங்கோலனாகிய யானோ அரசன்; யானே கள்வன்; அந்தோ! மிகப் புகழ்படைத்த இவ்வருமந்த குலம் என்னாற் பெரும் பழியடைந்ததே; என் ஆயுள் இப்போதே அழியக்கடவதாக" என்றுகூறிப் புலம்பி மனமுடைந்து தானிருந்த ஆசனத்தே வீழ்ந்து உயிர்விட்டனன். தன் கணவனிறந்தசெய்தி யறிந்த சிலநேரத்துக்குள், அத்துக்க மாற்றாது அவன் கோப்பெருந்தேவியும் உயிர் நீங்கினள்.

இங்ஙனம், கண்ணகி, தன் கணவன் கள்வனல்லன் என்பதைப் பாண்டியன்முன் வழக்காடி மெய்ப்பித்து, முன்கொண்ட கோபஞ் சிறிதுந் தணியாளாய், "நான் பத்தினியாயிருப்பது உண்மையாயின் இவ்வூரை அழிப்பேன்" என்று சபதஞ் செய்து கொண்டு அரண்மனையைவிட்டுப் புறப்பட்டாள். புறப்பட்டு, மதுரையினுள்ளே பிரவேசித்துத் தன் இடக்கொங்கையைத் திருகி யெடுத்து அதனை அந்நகரின் மீதெறிய, அவள் சொல்லியவண்ணமே, அந்நகருள் தீப்பற்றிக் கொண்டு பலவிடங்களையும் எரித்தது. அதன் வெம்மையை ஆற்றாத மதுரையின் அதிதேவதையானவள் கண்ணகிமுன் வந்து நின்று, அவளை நோக்கி, "யான் இந்நகரின் தெய்வம்; உனக்குச் சிலவுண்மை கூற வந்தேன்;அவற்றைக் கேட்பாயாக; இந்நகரத்தில் முன்பிருந்த பாண்டியர்களுள் ஒருவரேனுஞ் சிறிதுங் கொடுங்கோன்மை யுடையவரல்லர். இந்நெடுஞ்செழியனும் அத் தன்மையனேயாவன்; ஆயினும் இத்துன்பம் உனக்கு வந்தவரலாற்றைக் கூறுவேன்; முன்பு கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தரசனாகிய வசு என்பவனும், கபில புரத்தரசனாகிய குமானெனபவனும் தம்முட் பகைகொண்டு ஒருவரையொருவர் வெல்லக் கருதியிருந்தனர்.

அப்போது சிங்கபுரத்துக் கடைவீதியிற் பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமனென்னும் வணிகனை, அந் நகரத்தரசனிடம் தொழில் செய்துகொண்டிருந்த பரதனென்பவன், இவன் பகைவனது ஒற்றனென்றுபிடித்து அரசனுக்குக்காட்டி அவனைக் கொலை செய்துவிட்டான். அப்போது அச் சங்கமன் மனைவியாகிய நீலியென்பவள் மிகுந்த துயரமுற்று பதினான்குநாள் பலவிடத்தும் அலைந்து, பின்பு ஒருமலையின்மீதேறிக் கணவனைச் சேர்தற்பொருட்டுத் தன்னுயிரை விட நினைந்தவள்,"எமக்குத் துன்பம்விளைத்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக" என்று சாபமிட்டிறந்தனள். அப் பரதனே கோவலனாகப் பிறந்தான். ஆதலால் நீங்கள் இத் துன்பம் அடைந்தீர்கள். இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்ற பின்பு, நீ உன் கணவனைக்கண்டு சேர்வாய்" என்று சொல்லி அவளைத்தேற்றி மதுராபதியாகிய அத்தெய்வஞ் சென்றது. பின்பு கண்ணகி மதுரையை விட்டு நீங்கி, வையைக் கரைவழியே மேற்றிசை நோக்கிச் சென்று மலைநாடடைந்து செங்குன்றென்னும் மலையின்மேலேறி ஒரு வேங்கைமரத்து நிழலில்நிற்க,பதினான்காந்தினத்துப் பகல்சென்றபின்பு, அங்கே தெய்வவடிவோடு வந்த கோவலனைக் கண்டு களித்து அவனுடன் விமானமேறித் தேவர்கள் போற்றும்படி விண்ணுலகடைந்தாள்.

இவ்வளவே, சிலப்பதிகாரத்தின் மதுரைப்புகார்க் காண்டங்களிற் சிறப்பித்துக் கூறப்படுவது. மூன்றாவதான வஞ்சிக்காண்டமென்னும் பகுதியில், கண்ணகி விண்ணுலகஞ் சென்றதைக் கண்ணாரக்கண்ட வேடுவர்கள் திரண்டு, அவ் விசேடத்தைத் தம்மரசனாகிய செங்குட்டுவனுக்குத் தெரிவித்தது முதலிய செய்திகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றைச் "செங்குட்டுவன் வடயாத்திரை"யிற் கூறுவோம்.
------------
II. மணிமேகலை வரலாறு
காவிரிப்பூம் பட்டினத்தே பெருங்குடிவாணிகர் மரபிலுதித்த கோவலனுக்கு, மாதவியென்னும் நாடகக்கணிகையிடம் மணிமேகலை என்பவள் பிறந்திருந்தனள். இவள் தாயாகிய மாதவி, தன் காதலனான கோவலன் மதுரையிற் கொலை-யுண்டிறந்தது கேட்டுத் தன் குலத்தொழிலை முற்றும் வெறுத்துப் பௌத்தமுனிவராகிய அறவணவடிகளைச் சரணமடைந்து அவரால் வாய்மை நான்குஞ் சீலமைந்தும் உபதேசிக்கப்பெற்றுப் பௌத்தசங்கத்தைச் சேர்ந்து பிக்ஷுணியாயினள். அவள்மகள் மணிமேகலையோ, தன் தாயுடன் பழகிவந்ததாற் சிறுபிராயத்தே பௌத்ததருமங்களை அறிதற்கேற்ற உணர்ச்சிபெற்றிருந்தாள். ஒருநாள் மணிமேகலை தாயின் கட்டளைப்படி தன்தோழியாகிய சுதமதியுடன் பூக்கொய்து வருவதற்கு உபவனஞ்செல்ல,ஆங்குத் தன்னை விரும்பிவந்த சோழன்-கிள்ளிவளவன் மகனாகிய உதயகுமரனுக்கு அஞ்சியவளாய், ஆங்கிருந்த பளிக்கறையொன்றிற் பதுங்கியிருந்து அவன் போயினபின்பு வெளியே வந்தாள்.பின்னர், அவள் குலதேவதையான மணிமேகலா தெய்வம் தோன்றி, மணிபல்லவம் என்னுந்தீவிற்கு அவளை அழைத்துக் கொண்டு போயிற்று. அத்தீவிற்சென்ற மணிமேகலை அங்குள்ள புத்தபீடிகைக்காட்சியால் தன் பழம்பிறப்பில் நிகழ்ந்த விசேடங்களை அறிந்ததோடு, அத்தெய்வம் அறிவுறுத்திய மூன்று மந்திரங்களை உணர்ந்து, முற்பிறப்பில் தன் கணவனாகவிருந்த இராகுலன் என்பவனே இப்பிறப்பில் உதயகுமரனாக வந்தான் என்பதையும் அத்தேவதையால் அறிந்தனள்.

பின்னர், அப்பீடிகையின் காவற்றெய்வமான தீவதிலகையினுதவியால் அங்கேயுள்ள கோமுகியென்னும் பொய்கையை அடைந்து, அதிலிருந்த அமுதசுரபி என்னும் அக்ஷய பாத்திரம் தன் கையில் வரப்பெற்று, அப்பாத்திரத்துடன் தன் நகராகிய புகாரையடைந்து, அறவணவடிகளிடஞ் சென்று நிகழ்ந்தது கூறி வணங்கினாள். அம்முனிவர், ஆபுத்திரன் வரலாற்றையும், அவனுக்கு மதுரையிற் சிந்தாதேவி யளித்த
அமுதசுரபியே அவள்கைப் புகுந்ததையும், அப்பாத்திரத்தாற் பசித்தவுயிர்கட்கு உணவளித்தலின் சிறப்பையும் மணிமேகலைக்கு உணர்த்தினர். அவர் கூறியவாறே, உணவளித்தற் பொருட்டு, தான்பெற்ற அமுதசுரபியைக் கையிலேந்தினவளாய் மணிமேகலை வீதியிற்செல்ல,அவளது அக்ஷய பாத்திரத்தில் உத்தம பத்தினியாகிய ஆதிரையென்பவள் வந்து முதலில் பிச்சையிட்டனள்.

பின்பு மணிமேகலை அப் பாத்திரத்தினின்று எடுத்துதவிய ஒருபிடியமுதால், காயசண்டிகை யென்னும் வித்யாதரமங்கையின் தீராப்பசியைப்போக்கி, அப்பாத்திரத்தில் மேன்மேலும் அமுது வளரப்பெற்று, அந்நகரிலுள்ள உலகவறியென்னும் அம்பலத்தையடைந்து, அங்கே வந்த எல்லாவுயிர்களின் பசியையும் போக்கி, அவ்வறஞ் செய்தலையே நித்யநியமமாகப் பூண்டிருந்தனள். அங்ஙனமிருக்கும்போது, சோழன் மகனான உதயகுமரன் தன்னை விரும்பி மறுமுறை அவ்விடம் வர, அதனையறிந்த மணிமேகலை அவன் தன்னை அறிந்துகொள்ளாவண்ணம் வித்யாதர மங்கையாகிய காயசண்டிகையின் வடிவங்கொண்டு அந்நகரத்துச் சிறைச்சாலையை யடைந்து ஆங்குப் பசித்திருப்பவர்க் கெல்லாம் உணவளித்து அதனை அறச்சாலை யாக்கினாள்.

அப்போது அவ்விடத்துந் தன்னை விடாதுதொடர்ந்த உதயகுமரன், காயசண்டிகையின் கணவனாகிய வித்யாதரனால் தன் மனைவியை விரும்பி வந்தவனென்றுகருதி, வாளால் வெட்டப்பட்டு வீழ்ந்ததுகண்டு மனங்கலங்கிப் பின்பு கந்திற்பாவையென்னுந் தெய்வந்தேற்றத் தேறி, உதயகுமரன் றந்தையாகிய சோழனால் சந்தேகத்தின்மேற் சிறை வைக்கப்பட்டு அவன்மனைவி இராசமாதேவியின் முயற்சியாலே அச்சிறையினின்றும் விடுபட்டனள். பின் மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்தினின்று சாவகநாட்டுள்ள நாகபுரத்தை யடைந்து, அதனரசனான புண்ணியராசனோடு மணிபல்லவஞ் சார்ந்து, அங்குள்ள புத்தபீடிகையை அவனுக்குக் காட்டி அதனால் அவ்வரசனது பழம்பிறப்பை அவனுக்கறிவித்தாள். அக்காலத்துக் காவிரிப்பட்டினம் கடல்கொள்ளப்பட்டதென்ற செய்தியையும், தன் தாயான மாதவியும் அறவணவடிகளும் வஞ்சிமாநகரிலிருத்தலையும் தீவதிலகையால் அறிந்து, அவ்வஞ்சி நோக்கி எழுந்தவள், முதலில், செங்குட்டுவனா லெடுப்பிக்கப்பட்ட கண்ணகிகோட்டமடைந்து தாயாகிய அப் பத்தினிக்கடவுளைத் தரிசித்துத் தன்னெதிர்காலச்செய்திகளை அக்கடவுளாலறியப்பெற்றபின், செங்குட்டுவனாளும் அந் நகரையடைந்து, அதனுள்ளே பிரவேசித்தாள்; பிரவேசித்தவள், அதன் வளங்களையெல்லாங் கண்டு மகிழ்ந்து, ஆங்கு வசித்த சமயவாதிகள் பலரோடும் அளவளாவி அவ்வச்சமயத் திறங்களை அறிந்துகொண்டனள். அதன்பின்பு, அந்நகரத்துள்ள பௌத்த விகாரத்தில் தவஞ் செய்துகொண்டிருந்த கோவலன் தந்தை மாசாத்துவானைக்கண்டு பணிய, அவன், அவள் தாயும் அறவணவடிகளும் காஞ்சிமாநகரஞ் சென்றிருத் தலையும் அவ்வடிகள் அவட்குத் தருமோபதேசஞ்செய்ய எண்ணியிருத்தலையுங் கூறியதோடு, அந்நாட்டில் மழையின்மையால் உயிர்கள் வாடுதலின், அமுதசுரபியுடன் அவள் அங்குச் செல்லவேண்டிய ஆவசியகத்தையும் மணிமேகலைக்கு வற்புறுத்தினன்.

இவற்றைத் தன் பாட்டன்வாய்க் கேட்டதும் அவள் வஞ்சியினின்றும் உடனேபுறப்பட்டுக் காஞ்சி மாநகரமடைந்து, அந்நகரிற் பசியால் வருந்திவாடிய உயிர்கட்கெல்லாமுணவளித்துத் தன்தாயுடன் அறவணவடிகளையும் ஆங்குக் கண்டு வணங்கி, அவ்வடிகளால் பௌத்தமத தருமங்களனைத்தும் உபதேசிக்கப்பெற்றுப் பின் முத்திபெறுதற்பொருட்டு அக்காஞ்சியிலேயே தவஞ்செய்து கொண்டிருந்தனள்.

மேற்காட்டிய இரண்டு சரித்திரங்களும் செங்குட்டுவன் சம்பந்தம் பெற்று அவன் வரலாறுகள் பலவற்றை அறிவிக்கக் கூடியனவாயிருக்கின்றன. இவ்விரண்டு சரித்திரநூல்களுள், சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியான வஞ்சிக்காண்ட முழுதும், செங்குட்டுவன், கண்ணகியின் படிவஞ் சமைக்கவேண்டி இமயமலையிற் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டுவதற்கும், அம்முயற்சியில் தன்னையிகழ்ந்த ஆரியவரசரை வெற்றிகொள்வதற்குமாக நிகழ்த்திய வடநாட்டு யாத்திரையையும்,அதன்பின் நிகழ்ந்த அச்சேரன் செய்திகளையும் மிகுதியாகக் கூறுவது. ஆதலின், அக்காண்டத்தே இளங்கோவடிகள் கூறியிருப்பவை பெரும்பாலும் இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் உபகாரமாயிருத்தலால்,அவ்வடிகளது செய்யுணடையை ஏற்றபெற்றி வசனநடைப்படுத்துகின்றேம்: இக்காண்டமானது (1) குன்றக்குரவை, (2) காட்சிக்காதை, (3) கால்கோட்காதை, (4) நீர்ப்படைக்காதை,(5)நடுகற்காதை,(6) வாழ்த்துக்காதை, (7) வரந்தருகாதை என இளங்கோவடிகளால் ஏழு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது.