செங்குட்டுவனது வட நாட்டியாத்திரை

bookmark

1. குன்றக்குரவை
வேடுவர் தங்கள் குறிச்சியில் கண்ணகி பொருட்டுக் குரவைக் கூத்தாடியது.

கண்ணகி தன் கணவனையிழந்த பெருந்துயரோடும் வையைக்கரை வழியே மேற்றிசைநோக்கிச் சென்று, செங்குன்று என்னும் மலையடைந்து ஆங்கு ஒரு வேங்கை மரத்தின் கீழேநிற்ப, அவ்விடத்திருந்த மலைவேடுவரிற்சிலர் அக்கண்ணகியைநெருங்கி அவளைநோக்கி, "மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க - முலையிழந்து வந்து நின்றீர் யாவிரோ?" என்று கேட்ப, அதற்கவள் சிறிதுங் கோபியாமலே, "மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்த காலைக் - கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்."இங்ஙனம் கண்ணகிகூற, மலைவாணர் கேட்டு அஞ்சி அவளை வணங்கிநின்றபோது, தேவர்குழாம் ஆங்கு வந்து மலர்மழை பொழிந்து அங்குள்ளவர் கண்முன்பே கண்ணகிக்கு அவள் கணவன் கோவலனைக்காட்டி, அவளை யுமுடனழைத்துக் கொண்டு விண்ணுலகஞ் செல்வாராயினர். இவ்வற்புத நிகழ்ச்சியை நேரிற்கண்டு களித்த அவ்வேடுவர், இங்கு வந்து நின்ற மாதராள் நம் குலத்துக்கே ஒரு பெருந் தெய்வமாவள்; இவள்பொருட்டு நாம் குரவையாடிக்கொண்டாடுவோம்"என்று, தம்மவரயெல்லாம் ஒருங்கழைத்து -
"சிறுகுடியீரே! சிறுகுடி யீரே!
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே!
நிறங்கிள ரருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே!
தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி யியக்குமுின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை யெடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை யிழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே"
என்று ஆர்ப்பரித்தெழுந்து, மலைநாட்டு முறைப்படி, குரவைக்கூத்தாடியும், அதற்குரிய பாடல்களைப்பாடியும் பெருஞ் சிறப்புச் செய்தார்கள். இங்கு இங்ஙனம் நிகழ்ந்தது.

2. காட்சிக்காதை
கண்ணகியின் வரலாறறிந்த செங்குட்டுவன், பத்தினிக்குப் படிவஞ் சமைத்தற்கு இமயத்தினின்று கல்லெடுத்துவர எண்ணியது.

இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் தோன்றலாகிய செங்குட்டுவன் வஞ்சியிலுள்ள இலவந்திகை வெள்ளிமாடம் என்ற மாளிகையில் தன்தேவி இளங்கோவேண்மாளுடன்* வசித்து வந்த காலையில், மஞ்சுசூழுஞ் சோலைகளையுடைய மலைவளத்தைக் கண்டுகளிக்க எண்ணியவனாய்.
--------
* "இளங்கோ வேண்மா ளுடனிருந் தருளி" எனவரும் மூலத்துக்கு அரும்பதவுரையாசிரியர் "இளங்கோ வேண்மாள் - பெயர்; நன்னன் வேண்மாள், உதியன் வேண்மாள் என்பதுபோல; வேண்மாளுடனிருந்து இளங்கோவை அருளப் பாடிட்டு என்றுமாம்." என்றெழுதினார். இதனால், தம்பி இளங்கோவடிகளுடனும், மனைவி வேண்மாளுடனும் செங்குட்டுவனிருந்தான் என்று அத்தொடர்க்கு உரைகூறுவதும் அவ்வுரையாசிரியர் கருத்தாதல் விளங்கும். இளங்கோவடிகள், தம் தமயனுடன் தங்கியிருந்தவ ரென்பது, பதிகத்தாலும் தெரிதலால் பிற்கூறியதும் பொருந்துவதேயாம்.

அரமகளிருடன் விளையாடலை விரும்பிய தேவேந்திரன் தன் படைகளை நூற்று நாற்பதியோசனைதூரம் பரப்பி ஐராவதத்தில் ஆரோகணித்துச் செல்வதுபோல - தன் பெரும்பரிவாரங்கள் சூழச்சென்று, திருமாலின் மார்பிடையே விளங்கும் முத்தாரம் போல், மரங்களால் அழகுமிக்க மலையினின்றிழியும் பேரியாறு என்னும் ஆற்றங்கரையின் மணல்மிக்க எக்கரிலே தங்குவானாயினன்.

அக்காலத்து, குன்றக்குரவை நிகழ்த்தும் மலைமகளிர் பாடல்களும், அம்மலையில் முருகபூசைசெய்யும் வேலவனது பாட்டும், தினைமாவிடிப் போருடைய வள்ளைப் பாட்டும், தினைப் புனங்களினின்றெழும் ஒலியும், தேனெடுக்குங் குறவர் நிகழ்த்தும் ஓசையும், பறையோசைபோன்ற அருவியின் ஒலியும், புலியோடு பொருகின்ற யானையின் முழக்கமும்,தினைப்புனங் காவலிற் பரண்மிசையிருப்போருடைய கூப்பீடுகளும்,யானை பிடிக்கும் இடங்களிலே குழியில்வீழ்ந்த வேழங்களைப் பாகர் பழக்குமு் சப்தமும், ஆங்குச்சென்ற சேனைகளது ஆரவாரத்தோடு கலந்தொலித்தன. அந்நிலையில், மலைவாணராகிய வேடுவர் பலர் ஒருங்குகூடி,
"யானைவெண் கோடு மகிலின் குப்பையும்
மான்மயிர்க் கவரியும்* மதுவின் குடங்களும்
சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணியரி தாரமும்
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நீறுங் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனுந் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமுங் கரும்பும் பூமலி கொடியும்
கொழிந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையி னிருங்கனித் தாறும்
ஆளியி னணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியும் குடாவடி யுளியமும்
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் மாசறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும்"

மான்மயிராகிய வெண்சாமரை
(படலையும்- பச்சிலைமாலை காயமுங்-வெள்ளுள்ளி அணங்கு-குட்டி வாள்வரி-புலி குடாவடியுளியும்-பிள்ளைக்கரடி காசறைக்கரு-கத்தூரிக்குட்டி.) என்ற பண்டங்களைத் தங்கள் தலைமேலே தாங்கிக்கொண்டு—வஞ்சி மாநகரில் அரசனது சமயம்பெறாது தத்தம் திறைகளுடன் வாயிலிற் காத்துநிற்கும் பகையரசர்போல, அம் மலைவாணர் செங்குட்டுவன் திருமுன்பு வந்து நின்று "ஏழ்பிறப்படியேம்,வாழ்கநின் கொற்றம்" என்று அவனடி பணிந்து," வேந்தர் வேந்தே! யாம் வாழும் மலையின்கணுள்ள காட்டு வேங்கையின் கீழே, மங்கையொருத்தி,ஒருமுலையிழந்தவளாய்ப் பெருந்துயரோடும் வந்துநிற்க, தேவர்கள் பலரும் அவளிடம்வந்து அம்மங்கைக்கு அவள் காதற் கொழுநனைக் காட்டி, அவளையும் உடனழைத்துக்கொண்டு எங்கள் கண்முன்பே விண்ணுலகஞ் சென்றனர்.

 

(இச்செய்தி சிலப்பதிகாரப் பதிகத்துக் கண்டது) அவள் எந்நாட்டாள் கொல்லோ! யாவர் மகளோ, அறியேம். இது பெரியதோர் அதிசயந்தரா நின்றது; தேவரீர் நாட்டில் நிகழ்ந்த இதனை அறிந்தருளல் வேண்டும்" என்று தாங்கள் நேரிற்கண்ட செய்திகளை அரசனுக்குக்கூறி அவனை வாழ்த்திநின்றனர்.

அப்போது அரசனது பெருஞ்சிறப்பினையும், மலைவளத்தின் மாட்சியையுங் கண்டு களிப்புற்றிருந்த மதுரைச்சாத்தனார், (கோவலன் கொலையுண்டது முதலாய செய்திகள் தம்மூரில் நிகழ்ந்தவற்றை நேரில் அறிந்தவராதலால்) செங்குட்டுவனை நோக்கி "வேந்தே! யானறிவேன், அது நிகழ்ந்தவாற்றை" என்று தொடங்கி, தன்தேவியின் சிலம்பு திருடியவனென்று கண்ணகி கணவனைப் பாண்டியன் கொலைபுரிவித்ததையும், அஃதறிந்த கண்ணகி பெருஞ்சினங்கொண்டு பாண்டியன்முன் சென்று வழக்காடி வென்றதும், பாண்டியன்தேவி முன்பு மற்றொரு சிலம்பை வீசியெறிந்துவிட்டுக் கண்ணகி வஞ்சினங்கூறித் தன் ஒருமுலையைத் திருகிவீசி, அதினின்றெழுந்த தீயால் மதுரை மூதூரைச் சுட்டெரித்ததும், சிங்காதனத்திருந்து கண்ணகியின் வழக்கைக்கேட்ட நெடுஞ்செழியன் தான்செய்த கொடுங்கோன்மைக்கு ஆற்றாது தன் ஆசனத்தே வீழ்ந்திறந்ததும், இங்ஙனம் பாண்டியன் இறக்கவும், அவன் கோப்பெருந்தேவியும் கலக்கங்கொள்ளாதே உடனுயிர் விட்டதும் விளங்கக்கூறிவிட்டுப் பின், "பாண்டியனது கொடுங்கோன்மை இத்தன்மைத்து என்பதைப் பெருவேந்தனாகிய உன்னிடத்துக் கூறவந்தவள்போலத் தனக்குரிய சோணாடு செல்லாது நின்னாடு அடைவாளாயினள் அந்நங்கை" என்று அச்சாத்தனார் சொல்லி முடித்தனர்.

இங்ஙனம் பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத்திறங்களை யெல்லாங்கேட்ட செங்குட்டுவன், வருத்தமிக்கவனாய்ச் சாத்தனாரை நோக்கி " புலவீர்! தான் செங்கோலினின்று வழுவிய செய்தி எம்மையொத்த அரசர் செவிகளிற் சென்றெட்டுவதற்கு முன்பே பாண்டியன் உயிர் நீங்கியதானது, அவனது தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே நிமிரச் செய்து செங்கோலாக்கிவிட்டது. அரசராயுள்ளார்க்கு, நாட்டில் மழை காலத்திற் பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறு செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சி மன்னுயிர்களைக் காத்தற்குரிய உயர்குடியிற்பிறத்தலிற் றுன்பமல்லது சுகமேயில்லை" என்று கூறிவிட்டுத் தன் தேவியை நோக்கி " நன்னுதால்! கணவனாகிய பாண்டியனுடன் தன்னுயிரை நீத்த அவன் தேவியும், சினத்துடன் நம் நாடுநோக்கிவந்த கண்ணகியுமாகிய இவ்விருபெரும்பத்தினிகளுள்ளே யாவர் வியக்கத் தக்கவராவர்?" என்று உசாவ, அதற்கு வேண்மாள் " தன் கணவனது துன்பத்தைக் காணாது உயிர்நீத்த பாண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தே பெருந்திருவுறக்கடவள்.அதுநிற்க; நம் நாட்டை நோக்கிவந்த பத்தினியை நாம் வழிபடுதல் இன்றியமையாதது" என்று கூறினாள். அது கேட்ட அரசன், அவள் கூறியதை விரும்பியேற்றுத் தன் அமைச்சரை நோக்கவும், அவர்கள், "நம் நாடு நோக்கிவந்த அப்பத்தினிக்கடவுட்குப் படிவஞ்சமைத்தற்குரிய சிலையைப் பொதியமலையினின்றேனும் இமயமலையினின்றேனும் எடுத்துவருதலே தக்கதாம். ஆயின், பொதியத்தினின்று கொணர்வதைக் காவிரியினும் இமயத்தினின்று கொணர்வதைக் கங்கையினும் நீராட்டித் தூய்மைசெய்வித்தல் மிகப் பொருத்த முடையதாகும்" என்று கூறினர்.

கூறக்கேட்ட செங்குட்டுவன் "பொதியமலையிற் கல்லெடுத்துக் காவிரித்துறையில் நீராட்டுதல் பெருவீரராகிய சேரவமிசத்தவர்க்குச் சிறப்பைத் தருஞ் செய்கையன்று; ஆதலால், இமயத்திலிருந்து கல்லெடுப்பித்துக் கங்கையில் நீராட்டிவருதலே நம் பெருமைக் கேற்றதாம். இமவான் நம் விருப்பத்திற் கிணங்கானாயின்(அப்பக்கத்தார் நங்கருத்துக் கிணங்காது தடுத்து நிற்பராயின் என்பது கருத்து.) இங்குநின்றும் வஞ்சிமாலை சூடிச் சேனைகளுடன் சென்று புறத்துறைக்கமைந்த நம் வீரச்செயல்கள் பலவற்றையும் ஆங்குக்காண்பிப்பேன்" என்று வீராவேசத்துடன் கூறினான்.

இங்ஙனம் செங்குட்டுவன் கூறிய வீரமொழிகளைக் கேட்ட வில்லவன் கோதை என்ற சேனாபதி அரசனை வாழ்த்திக்கொண்டு கூறுவான்:- "வேந்தர் வேந்தே! நும்மையொத்த வேந்தரான சோழபாண்டியர் நும்மோடு பகைத்துக் கொங்கர் போர்க்களத்தே தம் புலிக் கொடியையும் மீனக்கொடியையும் யுத்தகளத்திலிழந்து ஓடினராயினும், அச் செய்தி திக்கயங்களின் செவிவரை சென்று பரவலாயிற்று. கொங்கணர், கலிங்கர், கருநடர், பங்களர், கங்கர், கட்டியர் வடவாரியர் இவருடன் தமது தமிழ்ப்படை கலந்துபொருத செருக்களத்தில் தாம் யானையைவிட்டுப் பகைவரை யழித்த அரியசெய்கை இன்னும் எங்கள் கண்களைவிட்டு நீங்கவில்லை.அன்றியும் எம்கோமகளாய் விளங்கிய("எங்கோமகளென்றது செங்குட்டுவன்மாதாவை; இவளை இவன் கொண்டுபோய்த் தீர்த்தமாட்டினதொரு கதை" என்பர், அரும்பதவுரையாசிரியர். இவ்வாக்கியத்தினின்று, செங்குட்டுவன் தன் தாயின் சிலையையன்றி அவளையே உடனழைத்துச் சென்று நீராட்டுவித்தான் என்பதும் அவ்வுரையாசிரியர் கருத்தாகத் தெரிகின்றது.)

தம் தாயின்சிலையைக் கங்கையிற் றீர்த்தமாட்டியகாலத்தே எதிர்த்துவந்த ஆரிய வரசர் ஆயிரவர்முன் தாம் ஒருவராகநின்று பொருத போர்க் கோலத்தைக் கடுங்கட்கூற்றமும், கண்விழித்து நோக்கிய தன்றோ. இங்ஙனம், நீர்சூழ்ந்த இந் நிலவுலகத்தை வென்று தமிழ்நாடாகச்செய்த தாம் வடநாட்டில் யாத்திரைசெய்யக் கருதின், ஆங்கு நும்மை எதிர்ப்பவர் யாவரோ? இமயமலைக்கு எங்கோனாகிய நீவிர் செல்லக்கருதியிருப்பது பத்தினிக் கடவுளைச் சமைத்தற்குரிய சிலையின்பொருட்டே யாதலால், ஆங்குவாழும் அரசர்க்கெல்லாம்,வில்கயல் புலியிவற்றை இலச்சினையாகக் கொண்ட நும் திருமுகத்தை முன்னே விடுத்தருளல் வேண்டும்" என்று கூறினன். இதுகேட்ட அழும்பில்வேள் என்னும் அமைச்சன் "இந் நாவலந்தீவில் நம் பகைவராயுள்ளாரது ஒற்றர்கள் இவ் வஞ்சிமாநகரைவிட்டு நீங்குபவரல்லர். இவ் வொற்றுக்களே பகையரசர் செவிகளில் நம் வடநாட்டியாத்திரைபற்றிய செய்திகளை அறிவிக்கத் தக்கன. அதனால் நம் யாத்திரையைப்பற்றி, இவ்வூரிற் பறையறைந்து தெரிவித்தலொன்றே போதியது" என்று உரைக்கச் செங்குட்டுவனும் அதற்கு உடம்பட்டனன். பின்னர்ப் பேரியாற்றினின்றுசு புறப்பட்டு அரசன் தன் பெரும் பரிவாரங்களுடன் வஞ்சிமா- நகரடைந்தான். அடைந்ததும், யானைமேல் முரசேற்றப்பெற்றுச் செங்குட்டுவனது வட நாட்டியாத்திரைபற்றியும்,பகையரசர் வந்து பணியாவிடில்
அவர்க்கு நேருங் கேடுகளைப்பற்றியும்,
"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதோ றூழி யுலகங் காக்கென
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்
கற்கொண்டு பெயருமெங் காவல னாதலின்
வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம்
இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்
கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையுங்*
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோட்டுணை† துறக்குந் துறவொடு வாழுமின்
தாழ்கழன் மன்னன் தன்றிரு மேனி‡
வாழ்க சேனா முகம்."
என்று ஊரெங்கும் பறை அறையப்பட்டது.
---------
* "எதிரேற்றுக் காணீராயின், கடலுட்புக்கும் மலையினேறியும் வாழுமின் என்பார், இரண்டுவார்த்தையுங் கேட்டு வாழுமின் – என்றார்" என்பது அரும்பதவுரை.
† தோட்டுணை-மனைவியர்
‡ "திருமேனியாகிய சேனாமுகம்; சேனாமுகம் அரசனுக்குச் சிறந்தமையின், திருமேனி என்றார்" என்பது அரும்பதவுரை.

3. கால்கோட் காதை
செங்குட்டுவன் வடநாட்டிற்செய்த பெரும்போரும், இமயஞ்சென்று பத்தினிக்குக் கல்லெடுப்பித்ததும்.

இங்ஙனம் வஞ்சிமாநகரிற் பறையறையப்பட்டபின்னர், சேரன் - செங்குட்டுவன் அன்று மாலையில் ஆசான் பெருங்கணி அமைச்சர்களும் தானைத்தலைவருந் தன்னை வாழ்த்தி நிற்கச் சிங்காதனத்தே வீற்றிருந்து தன் சேனாதிபதிகளை நோக்கி அடியில் வருமாறு கூறுவானாயினான்:- "ஆரியமன்னர் பலரும் தம்நாட்டில்நிகழ்ந்த சுயம்வரமொன்றன் பொருட்டுக் குழுமியிருந்த பெருங்கூட்டத்தே - "தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து - மின்றவழு மிமய நெற்றியில் விளங்குவிற்புலி கயல்பொறித்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லைப்போலும்" என்று நகைத்திகழ்ந்எனர் எனத், தீர்த்த யாத்திரை செய்து கொண்டு இங்குவந்த இமயத்தாபதரால் அறிந்தேம். (இச் செய்தி, வாழ்த்துக் காதையின் உரைப்பாட்டு மடையிற் கண்டது.) அவ் விழிமொழி நம்பாலே தங்குமாயின், அஃது எமக்குமட்டு மன்றி எம்போன்ற சோழபாண்டியராகிய தமிழ் வேந்தர்க்கும் இகழ்ச்சி விளைக்கக் கூடியதன்றோ? ஆதலின், அங்ஙனம் இகழ்ச்சிசெய்த வடதிசை மன்னரது முடித்தலையில் பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய கல்லை ஏற்றிக்கொண்டு வருவேன். அங்ஙனஞ் செய்யாது என் கைவாள் வறிதேவருமாயின், என்னொடு முரணிய பகையரசரை நடுங்கச்செய்தடக்காமல், வளந்தங்கிய என்னாட்டுக் குடிகளை வருத்துங் கொடுங்கோலனாகக் கடவேன்" - என்று அப்பேரத்தாணியிற் சினத்துடன் வஞ்சினங்கூறினன். இங்ஙனம் அரசன் கூறியதைக் கேட்ட ஆசான் (புரோகிதன்) "இமயவரம்ப! வடவரசர், சோழ பாண்டியரையன்றி, நின்னை இகழ்ந்து கூறினவரல்லர்; நீ இங்ஙனம் வஞ்சினங்கூறுதற்கு நின்னொடு எதிர்க்கும் மன்னரும் உளரோ? ஆதலால் கோபந்தணிக." என்று அவன் சீற்றத்தைச் சமனஞ் செய்வானாயினன். உடனே, சோதிடம் வல்லானாகிய மௌத்திகன் எழுந்து நின்று "அரசே! நின் வெற்றி வாழ்வதாக; இவ் வுலகிலுள்ள பகையரசரெல்லாம் நின் அடித் தாமரைகளைச் சரணடையத் தக்க நன்முகூர்த்தம் இதுவே; நீ கருதிய வடதிசை யாத்திரைக்கு இப்போதே எழுதல் சிறந்தது" என்றான்.

இந் நிமித்திகன் வார்த்தை கேட்ட செங்குட்டுவன் மகிழ்வுற்று, உடனே தன் வாளினையுங் குடையையும் அந் நன்முகூர்த்தத்தில் வடதிசைப் பெயர்த்து நாட்கொள்ளும்படி ஆஞ்ஞாபித்தனன். ஆணை பிறந்ததும், போர்வீரரது ஆரவாரத்தோடு முரசங்கள் பூமி அதிரும்படி ஒலித்தன. பகைவர்க்கு வேதனைவிளைக்குஞ் சேனைகள், மணிவிளக்குகளுடனும் துவசங்களுடனும் முன் செல்லவும், ஐம்பெருங்குழுவும் (ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணரென்போர். எண்பேராயத்தை, "கரணத் தியலவர் கருமவிதிகள், கனகச் சுற்றங் கடைகாப்பாளர், நகர மாந்தர் நளிபடைத்தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரென்பே ராய மென்ப"என்பதனாலறிக.) எண்பேராயமும் அரசாங்கத்தை நடத்தும் கருமவினைஞரும் கணக்கியல் வினைஞரும் தருமவினைஞரும் தந்திர வினைஞரும் தம் அரசனான "செங்குட்டுவன் வாழ்க" என்று கூறவும், பட்டவர்த்தன யானையின் பிடரிமேல் ஏற்றப்பட்ட அரசவாளும் வெண்கொற்றக் கொடையும் வஞ்சிப்புறத்துள்ள கோட்டையிற் புகும்படிசெய்து செங்குட்டுவன் தன்னரசிருக்கையை யடைந்தான். அன்றிரவில் போர்விருப்பத்தாற் களிப்புற்றுத் தன்னுடன் வருதற்கிருக்கும் தானைகளுக்கும் தானைத் தலைவர்க்கும் பெருஞ்சோறளித்துபசரித்து உற்சாகப்படுத்தி, மற்றொருவேந்தனைக் கொற்றங்கொள்ளநிற்கும் தன் கொள்கைக்கேற்ப, வஞ்சிமாலையை மணிமுடியிலணிந்து மறுநாட்காலையில் யாத்திரைக்குச் சித்தமாயிருந்தனன், செங்குட்டுவன். அன்றிரவு இங்ஙனம் கழிந்தது.

பொழுதுவிடிந்ததும், அரண்மனையிலே அரசரிடுதற்குரிய திறைகொணர அழைக்கும் காலைமுரசம் முழங்கியது.

அதுவே யாத்திராகாலமாதலால், காலைக் கடன்களை யெல்லாம் முடித்துச் சித்தனாயிருந்த சேரன்-செங்குட்டுவன், தன்வழிபடுகடவுளாகிய சந்திரசடாதரரது திருவடிப் பாதுகைகளை, யாவர்க்கும் வணங்காததும் வஞ்சிமாலை சூடியதுமான தன் சென்னியால் வணங்கித் தரித்துக்கொண்டு, அந்தணர்கள் வளர்க்கின்ற அக்கினிஹோத்திரங்களையும் நமஸ்கரித்துத் தன் பட்டவர்த்தனக் களிற்றின்மேல் உரிய நன்முகூர்த்தத்தில் ஆரோகணித்தனன். அப்போது, "குடவர் கோமானாகிய செங்குட்டுவன் கொற்றங்கொள்வானாக" என்று வாழ்த்தினவராய், ஆடகமாடமென்னுங் கோயிலின்றும் திருமாலின் பிரசாதத்துடன் வந்து சிலர் அரசன்முன் நிற்க, தான் சிவபிரான் பாதுகைகளைச் சென்னியிற்றாங்கியிருந்தமையால், அத்திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத் தேந்தியவனாய் அங்கிருந்தும் பிரயாணிப்பானாயினன். அவன் செல்லும்போது நாடகக் கணிகையர்கள் அரங்குகடோறும் நெருங்கிக் கூடிநின்று இருகையுங் கூப்பிக் கொண்டு "யானைமேல் வெண்கொற்றக்குடை நிழலில் விளங்கும் அரசனது காட்சி எங்கட்கு என்றும் இன்பம்பயந்து விளங்குவதாக" என்று துதித்தனர். சூதரும் மாகதரும் வேதாளிகரும் செங்குட்டுவனது வெற்றிப்புகழ் தோன்றும்படி வாழ்த்திக் கொண்டு உடன்சென்றனர். யானைகுதிரை வீரர்களும் வாட்படை தாங்கிய சேனைகளும் தங்கள் வேந்தனது வாள் வலியை ஏத்தி ஆர்ப்பரித்தனர். இங்ஙனமாக, அசுரர்மேற் போர்குறித்து அமராவதியினின்று நீங்கும் இந்திரன்போல, செங்குட்டுவனும் வஞ்சியினின்றும் புறப்பட்டு, தூசிப்படையானது கடற்கரையைத் தொடும்படி பரவிய தன்சேனைகளால் மலைகளின் முதுகு நெளியவும், நாட்டில் வழியுண்டாகவுஞ் சென்று இறுதியில் நீலகிரி என்ற மலையின் அடிவாரத்தமைக்கப்பட்ட பாடியையடைந்து, யானையினின்றிழிந்து,வீரரெல்லாம் ஆர்ப்பரித்தேத்தக் காவல்மிக்க தன்னிருக்கையிற் புகுந்து அமளிமிசைத் தங்கி இளைப்பாறலாயினன்.

இங்ஙனம், அரசன் இளைப்பாறிய சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தரசாரிகளாகிய முனிவரர் சிலர், ஆங்குவந்த வேந்தனைக் காண்போமென்று கீழேயிறங்கி அரசிருக்கையை நோக்கி ஒளிமிக்க மேனியுடன் வரவும், அவரைக்கண்டதனால் உண்டான சேனைகளின் ஆரவாரத்தாற் செங்குட்டுவன் முனிவர்வருகையை அறிந்து, அமளியினின்றெழுந்து வந்து அவரடி வணங்கி நின்றனன். நின்ற அரசனை நோக்கி அம் முனிவர்கள் "சிவபிரான் திருவருளால் வஞ்சிமாநகரில் தோன்றிய அரசே! யாங்கள் பொதியமலைக்குச் செல்கின்றோம். இமயபர்வதம்வரை செல்வது நின்கருத்தாதலால், ஆங்கு வாழும் அருமறையந்தணர்களைத் துன்பமின்றிக் காப்பது, நின் கடமையாகும்" என்று கூறிச் செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர். சென்றதும், கொங்கண நாட்டுக் கூத்தர்களும், கொடுங்கருநாடர்களும் தத்தங்குலத்திற்கேற்ற அலங்காரமுடையவராய்க் குஞ்சியில் தழைத்த மாலையணிந்து அழகுவாய்ந்த தம் மகளிருடன் வரிப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டும், குடகுநாட்டவர் தம் மகளிருடன் கார்காலத்தைப் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டும்,தங்கள் சுற்றத்தோடு அலங்காரமாக ஓவர் என்ற சாதியார் அரசனை வாழ்த்திக்கொண்டும் சேரன்முன்னே தோன்றினர்.

இவர்களது ஆடல் பாடல்களையெல்லாங் கண்டுவந்து, தன் ஆஸ்தான-ஆடலாசிரியன் குறிப்பிட்ட முறைப்படியே அன்னோர்க்கெல்லாம் வேண்டிய அணிகலன்களைச் சம்மானித்துச் சேரர்பெருமான் வீற்றிருந்தான். அந் நிலையில் வாயில் காவலன் செங்குட்டுவன் திருமுன் வந்துநின்று, "அரசே! நாடகமகளிர் ஐம்பத்திருவரும், குயிலுவர் (வாத்தியகாரர்) இருநூற்றெண்மரும், தொண்ணூற்றறுவகைப் பாசண்ட நூல்களிச் வல்ல நகைவிளைத்துமகிழச்செய்யும் வேழம்பர் நூற்றுவரும்,நூறுதேர்களும், ஐந்நூறு களிறுகளும், பதினாயிரம் குதிரைகளும்,இன்னின்னசரக்கென்று எழுதப்பட்டு, யாத்திரைக்கு வேண்டிய பண்டங்கள் ஏற்றப்பட்ட சகடங்கள் இருபதினாயிரமும்,தலைப்பாகையுஞ் சட்டையுந் தரித்தவர்களும் சஞ்சயன் என்பவனைத் தலைமையாகக் கொண்டவர்களுமான கருமத் தலைவர் ஆயிரவரும் நின் வாயிற்கண்ணே வந்து காத்திருக்கின்றார்கள், அறிந்தருள்க" என்றான். எனலும் "அவர்களுக்குள்ளே, சஞ்சயனுடன் நாடக மகளிரும் கஞ்சுகமுதல்வரும் (கருமத்தலைவர்), குயிலுவரும் இங்கு வரக்கடவர்" என்று அரசன் ஆணையிட, அன்னோருடன் அத்தூதர்தலைவன் அரசவைபுகுந்து செங்குட்டுவனை வணங்கி, உடன்வந்தவரையெல்லாம் அரசனுக்கு முறைப்படி காட்டிப் பின்னர், "தேவரீர் வடநாடுசெல்வது பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய சிலையொன்றன் பொருட்டேயாயின்,"இமயமலையிற் கல்லெடுப்பித்துக் கங்கையாற்றில் அதனை நீர்ப்படைசெய்துதர யாங்களே வல்லோம்’ என்று, தேவரீருடன் வேற்றுமையின்றிக் கலந்த நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் தெரிவித்திருக்கின்றனர்" என்றறிவித்து வாழ்த்தி நின்றனன்.

 

இதுகேட்ட செங்குட்டுவன் "நன்று, வடநாட்டரசனான பாலகுமரன் மக்களாகிய கனகன் விசயனென்ற இருவரும் தம்நாக்களைக் காவாதவராய், விருந்தொன்றிலே வடவரசர் பலருடன்கூடித் தமிழ் வேந்தரான எம்முடைய ஆற்றலறியாது இகழ்ந்துரையாடினராம்; அதனால் பத்தினிக்குக் கல்லெடுப்பித்தலோடு அவரிடம் நம்மாற்றலைக் காண்பிப்பதற்காகவும் இச்சேனை சீற்றத்தொடுஞ் செல்லா நின்றது; இச்செய்தியை நம் நட்பினராகிய அக்கன்னர்க்குத் தெரிவித்து, ஆங்குக் கங்கைப்பேரியாற்றை நம் சேனைகள் கடப்பதற்குவேண்டிய மரக்கலங்களை அவருதவியால் சித்தஞ் செய்வதற்கு நீ முன்னர்ச் செல்லக்கடவாய்" என்று செங்குட்டுவன் கற்பனைசெய்ய, சஞ்சயனும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு முற்படப் போயினன். அவன் போனதும், பேசுதலில்வல்ல கஞ்சுகமுதல்வர், அரசன்முன்னர்ப் பாண்டியரிட்ட சந்தனம் முத்து முதலிய திறைகளைக் கொண்டுவந்துநின்றனர். இவர்க்கு அரசன் தன் இலச்சினையிட்ட திருமுகங்களைக் கண்ணெழுத்தாளரைக் கொண்டு (கண்ணெழுத்தாளர்– திருமுக மெழுதுவார்.) எழுதுவித்து அத்தூதர்கள் கையிற் கொடுத்து அரசரிடம் அவற்றை முறைப்படிசேர்ப்பிக்குமாறு ஆணையிட்டு அவர்களையும் அனுப்பினன். அவர்களெல்லாம் போயினபின்னர்,சேரர்பெருமான், மற்றைய மன்னர் தன் பெருமையை ஏத்தும்படி தன்னுடைய பெரும்பரிவாரங்களுடன் நீலகிரிப் பாடியினின்றும் நீங்கி வடநாடு நோக்கிப் பிரயாணிப்பானாயினான்.

இங்ஙனம், தன் பெருஞ்சேனைகளுடன் சென்ற செங்குட்டுவன் முடிவில் கங்கைப் பேரியாற்றை நெருங்கினன்.ஆங்கு, முன்னரே சென்றிருந்த சஞ்சயனால் நூற்றுவர் கன்னர் உதவிகொண்டு கங்கையைச் சேனைகள் கடத்தற்கு வேண்டிய மரக்கலங்கள் சித்தஞ்செய்யப்பட்டிருந்தன.

அப்பெரிய நதியை அடைந்த சேரர்பெருந்தகை தன் சகல சைந்யங்களுடனும் அதனைக்கடந்து அவ்வாற்றின் வடகரையை அடைந்தான். அப்போது தம் நட்பாளனாகிய செங்குட்டுவனை அந்நாடாளும் நூற்றுவர்கன்னர் எதிர்கொண்டு உபசரித்தனர். அவருபசாரத்தைப் பெற்றுச் செங்குட்டுவன் அங்கு நின்றும் புறப்பட்டுத் தன் பகைவரது நாடாகிய உத்தர கோசலத்தை நெருங்கினான். இங்ஙனம் சேரவரசன் பெரும்படையுடன் தம் தேசத்தை நெருங்குகின்றான் என்ற செய்தி தெரிந்ததும், அந்நாட்டரசர்களான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்பவருதவியுடன் கனகவிசயரென்ற வேந்தர், தமிழராற்றலைக் காண்போமென்று செருக்கிப் பெருத்த சேனையுடன் போர்க்கோலங்கொண்டு எதிர்ந்தனர். இங்ஙனம் வடவரசர் திரண்டு வருதலும், இரையைத்தேடி வேட்டைக்குச் சென்ற சிங்கமொன்று யானையின் பெருங்கூட்டத்தைக் கண்டு உள்ளம்பூரித்துப் பாய்ந்தவாறுபோல, தன்னை எதிர்த்து வந்த வடவேந்தரது சேனைகண்டு களித்து, அவற்றின்மேல் விழுந்து செங்குட்டுவன் பொருவானாயினன். வடவரும் தமிழரும் பொருதுநின்ற அப்பெரும் போரில்,துகிற்கொடிகளின் பந்தர்களாற் சூரியகிரணங்கள் மறைப்புண்டன. கொடும்பறைகளும் சங்கங்களும் நீண்ட கொம்புகளும் பேரிகைகளும் மயிர்க்கண் முரசங்களும் திக்குகளினின்று எதிரொலியுண்டாகும்படி ஒலித்தன.

வில், வேல், கேடயமிவற்றைக் கொண்ட மறவர்களும், தேர்வீரர் யானைவீரர் குதிரைவீரர்களும் கலந்தெதிர்த்த அப்போர்க்களத்தில் பூமி தெரியாமலெழிந்த புழுதியானது, யானைக்கழுத்திற் கட்டிய மணிகளின் நாக்களிலும் கொடிகளிற்கட்டிய சங்குகளின் நாக்களிலும் புகுந்து அவற்றை ஒலிக்காவண்ணஞ் செய்து விட்டன. தூசிப்படைகள் தம்மிற் கலந்து புரிந்த அப்போரிலே தோளுந் தலையுந் துணிபட்டு வேறாகிய வீரரது உடற்கும் பலிற்றுள்ளியெழுந்த குறையுடலாகிய கவந்தங்கள், பேயினது தாளத்துக்கொப்பக் கூத்தாடின. அப்பிணக்குவியலினின்று வழிந்தோடும் ஊன்கலந்த குருதியிலே, கூட்டங்கொண்ட பேய்மகளிரது நாக்களெல்லாம் ஆடலாயின. இங்ஙனம் ஆரியவரசரது சேனாவீரரை அக்களத்தே கொன்று குவித்து அவரது தேர்யானை குதிரைகளில் ஆட்களில்லையாகக்கொன்று (நூழில்-வீரக்கழன் மன்னர் சேனையைக்கொன்று அழலும் வேலைத் திரித்து விளையாடுதலைவிரும்பல் என்பர்.)நூழிலாட்டிய சேரன்-செங்குட்டுவன்,எருமையூர்தியுடைய கூற்றுவன், உயிர்த்தொகுதியை ஒரே பொழுதினுள் உண்ணவல்லவன் என்பதை அறிவித்துத் தும்பைசூடி விளங்கினான். இவனது சினவலையின் கண்ணே, தம் நாவைக்காவாது தமிழரசரையிகழ்ந்த கனகவிசயருடன் தேர்வீரர் ஐம்பத்திருவர் அகப்பட்டுக் கொண்டனர். மற்றப் பகைவர்களோ தத்தம் ஆயுதங்களை எறிந்துவிட்டுச் சடை, காஷாயவுடை, சாம்பல் இவற்றைத் தரித்த சந்நியாசிகளாகவும் பீலி கைக்கொண்ட சைநமுனிவராகவும்,பாடகராகவும், பற்பல வாத்தியக்காரராகவும், ஆடுவோராகவும் தாந்தாம் வல்ல துறைக்கேற்ற வேடம் பூண்டு வேண்டுமிடங்களிலே பதுங்கி-யொளிந்தனர்.

இவ்வாறு வடவரசர்கள் நடுநடுங்கும்படி, களிறுகளே எருதாகவும், வாளே பிடிக்குங்கோலாகவும், பகைவர்சேனைகளே சூட்டடிக் கதிர்களாகவுங் கொண்டு, வாளையுடைய தான் உழவனாகநின்று அப்போரிலே* அதரிதிரித்துக் கலக்கினான் செங்குட்டுவன். இவ் வரசனது மறக்களத்தைப் புகழ்ந்து, பேய்களெல்லாம் நெடியகைகளைத் தம் கரியதலைமிசை உயர்த்தியவைகளாய், திருமால் பாற்கடல் கடைந்தபோது நிகழ்த்திய தேவாசுரயுத்தத்தையும், அவன் இலங்கையில் நடத்திய போரையும், தேரூர்ந்து நிகழ்த்திய அவனது பாரதச் செருவையும் இதனோடு ஒருசேரவைத்துப் பாடியதுடன், இப்போர்க்களத்தே பகைவரது முடித்தலைகளையே அடுப்பாகவும்,பிடரிகளையே தாழியாகவும், வலயமணிந்த தோள்களையே துடுப்பாகவும் கொண்டு சமைத்த ஊன்சோற்றைப் பேய் மடையன் அவ்வப்பேயின் தகுதியறிந்து பரிமாற வயிறார உண்டு களித்துத், தருமயுத்தத்தால் தமக்கித்தகைய பெருவிருந்துசெய்த செங்குட்டுவனை "ஊழியளவு வாழ்க" என்று வாயார வாழ்த்துவனவும் ஆயின.

நெற்களத்திற் கடாவிட்டுழக்குதல்
இங்ஙனமாக, ஆரியப்படையைவென்று தானினைத்த காரியங்களுளொன்றை முடித்துக்கொண்ட செங்குட்டுவன் தன் தானைத்தலைவனாகிய வில்லவன்கோதையை நோக்கி, "வடதிசையுள் நான்மறையாளும் நித்யாக்கினி வளர்த்தலையே பெருவாழ்வாக உடையவருமாகிய அந்தணப்பெரியோரைச் செல்லுமிடங்களிலெல்லாம் போற்றிக் காக்கக் கடவீர்" என்று கூறிப் பெரும்படையுடன் அவனையேவி, பத்தினிக் கடவுளைப் பொறித்தற்குரிய சிலையை இமயமலையினின்று கொண்டுவரும்படி செய்து அக்காரியத்தையும் முடித்துக் கொண்டனன்.
-----------------------------------------------

 

4. நீர்ப்படைக்காதை
செங்குட்டுவன் பத்தினிப்படிவத்தைக் கங்கை நீராட்டியதும், தன்னாடு திரும்பியதும்.

மேற்கூறியவாறு, தமிழரது ஆற்றலையறியாது தன்னுடன் மலைந்த ஆரியச் சேனைகளைக் கூற்றுவனுக்குத் தொழில் பெருகும்படி கொன்று,தேவாசுரயுத்தம் பதினெட்டாண்டிலும், இராமராவணயுத்தம் பதினெட்டு மாதத்தும், பாரதயுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனவிசயரும் புரிந்தபோர் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென்று,உலகோர் இப்போரையும் கூட்டியெண்ணிக் கொள்ளும்படி ஒருபகற்குள்ளே பகைவரை வென்றுவிளங்கிய சேரன்-செங்குட்டுவன்,சினமிக்க தன் சேனைகளால் பத்தினிக் கடவுட்குரிய சிலையை இமயத்தினின்று மெடுப்பித்த பின்னர், தன்னுடன் போர்க்கோலங்கொண்டெழுந்த கனக விசயரது கதிர்முடிமேல் அச்சிலையையேற்றிக்கொண்டு அதனை நீராட்டித் தூய்மை செய்தற்பொருட்டுக் கங்கைப்பேரியாற்றின் வடகரைவந்து சேர்ந்தான். அவன் அங்கு வந்ததும், பத்தினியின்சிலை ஆகமம்வல்லோரால் கங்காநதியில் முறைப்படி நீராட்டப்பட்டது. இது முடிந்தபின்னர்ச் சேனையுடனும் பரிவாரங்களுடனும் சேரர் பெருமான் நாவாய்கள் மூலம் அப் பேரியாற்றைக் கடந்து அதன் தென்கரையிற் பிரவேசித்தனன். அம்மாநதியின் தென்கரை வெளிப்பரப்பிலே, ஆரிய மன்னரும் நட்பாளருமாகிய கன்னரால் ஜயசீலனாகவருஞ் சேரர் பெருந்தகை படைகளுடன் வந்து தங்குதற்கென்று, அரசர்க்குரிய கோயிலும் அழகிய மண்டபங்களும் இராச சபைகளும் பூம்பந்தரும் உரிமைப் பள்ளியும் தாமரைப் பொய்கையும் ஆடரங்குகளும் மற்றும் பெருவேந்தர்க்கு வேண்டியனவெல்லாம் மிகவும் அழகுபெற அமைக்கப்பட்டிருந்தன. செங்குட்டுவன் தென்கரை புக்கதும் அவ்வழகியபாடியில் தன் பரிவாரங்களோடுஞ் சென்று தங்கினான்.

இங்ஙனம் பாடியிற்றங்கிய பின், சேரர்பெருமான், எதிர்த்த மாற்றரச‌ரது மனவூக்கங் கெடும்படி போரில் தம் வீரச் செயல்களைக் காட்டி வீரசுவர்க்கமடைந்த தானைத் தலைவர்களும், அப்போரிலே அடர்ந்துழக்கித் தலையுந் தோளும் விலைபெற அறுபட்டுக்கிடந்தவர்களும், வாளாற்செய்யும் வினைகளெல்லாஞ்செய்து பகைவரை அழித்துமுடிந்தவர்களும், உறவினரோடு தம்மகளிரும் உடன்மடியும்படி வீழ்ந்தவர்களுமாகிய இறந்துபட்ட வீரர்களுடைய மைந்தரையும்; தூசிப் படையில் நின்று மாற்றாரைவென்று வாகைமாலை சூடியவர்களும், பகைவரது தேர்வீரரைக்கொன்று அவர்களுடைய குருதியோடு பொலிந்துநின்றவர்களும், பகைவரது கருந்தலைகளைக் கூற்றுவனுங் கண்டிரங்கும்படி ஒருசேர அறுத்து வெற்றிபெற்றவர்களும்,கவசஞ்சிதைய மார்பில் விழுப்புண்பட்டு மாற்றாரைப் புறங்கண்டு மீண்டவர்களும் ஆகிய (இறவாத) எல்லாவீரர்களையும் தன்னிடத்து வரும்படியழைத்து,அவரடைந்த வெற்றிக்கு அறிகுறியாக அவர்கட்கெல்லாம் பொன்னாலாகிய வாகைப்பூக்களை, தான் பிறந்தநாளிற் செய்யும் பெருங்கொடையினும் மிகுதியாக நெடும்போதிருந்து கொடுத்து வெகுமானித்தான். இங்ஙனம் பனம்பூவைத் தும்பை மாலையுடன் சூடிப் புலவர்பாடுதற்குரிய புறத்துறைகளெல்லாம் முடித்து ஜயசீலனாகச் சேரன் - செங்குட்டுவன் தன்னரசிருக்கையில் வீற்றிருக்கும்போது, மாடலன் என்னும் மறையவன் ஆங்கு எதிர்பாராதே வந்துநின்று அரசனை ஆசிகூறிவாழ்த்தி விட்டு, " எங்கோவே! மாதவியென்னும் நாடகக்கணிகையின் கடற்கரைப்பாடலானது,கனகவிசயரது முடித்தலைகளை இங்ஙனம் நெரித்துவிட்டது; இது வியக்கத்தக்கதாம்" என்று ஒரு வார்த்தையைக் கூறினான். இதனைக்கேட்ட செங்குட்டுவன் அவன் கருத்தை அறியாதவனாய், "நான்மறையாளனே! பகைப்புலத்தரசரும் அறிந்திராத நகைச்சொல்லொன்றை இங்குவந்து திடீரெனக் கூறினை; நீ சொன்ன உரைப்பொருள் யாது? விளங்கச்சொல்லுக" என்றான்; எனலும் அம்மறையவன் சொல்லலுற்றான்.

"குடவர்கோவே! காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்ந்த கடல்விளையாட்டிற்குத் தன் காதலனாகிய கோவலனுடன் சென்றிருந்த மாதவியென்னும் நாடகக்கணிகை கருத்துவேறுபடப் பாடிய கானல்வரிப்பாட்டுடன் ஊழ்வினையும் உடன் சேர்ந்துருத்தமையால் கோவலன் அக்கணிகையை வெறுத்துப்பிரிந்து, தன்மனைவி கண்ணகியை உடனழைத்துக்கொண்டு மதுரைமாநகரம் புகுந்தான்; புகுந்தவன், அந்நகரத்தரசனான பாண்டியன் உயிர்நீத்து விண்ணுலகடையும்படி கொலையுண்டன னன்றோ. அங்ஙனங் கொலையுண்ட கோவலன் கற்புடைமனைவியானவள் உன் நாட்டை அடைந்தமையாலன்றோ, அப்பத்தினி இப்போது வடதிசையசருடைய மணிமுடியிலேறி விளங்குவாளாயினள்" என்று,முன்னிகழ்ந்த கோவலன்சரிதத்தைச் சுருங்கக்கூறிப் பின்னும், செங்குட்டுவனை நோக்கி, "வேந்தர்வேந்தே! யான் ஈண்டு வருதற்கு அமைந்த காரணத்தையும் கேட்பாயாக; அகத்திய முனிவருடைய பொதியமலையை வலஞ்செய்துகொண்டு கன்னியாகுமரித்துறையிற் றீர்த்தமாடி மீண்டுவருகின்ற யான்,என் ஊழ்வினைப் பயன்போலும், பாண்டியனது மதுரை மாநகரம் சென்றேன். அங்கே நான் தங்கியபோது, பாண்டியன் தன்கணவனை அநியாயமாகக் கொல்வித்த கொடுங்கோன்மையைத் தன் சிலம்பைக்கொண்டு அவ் வரசனுக்கு விளக்கி வழக்காடி வென்றாள் கண்ணகி என்றசெய்தி ஊர்முழுதும் பரவியது. இக்கொலைச்செய்தி கேட்ட ஆய்ச்சியர்தலைவியாகிய மாதரி (கோவலன்கண்ணகியை அடைக்கலமாகப்பெற்றவள்) இடைத்தெருவிலுள்ள தாதெருமன்றத்தினின்றும் எழுந்துசென்று, "இடைக்குலமக்காள்! அந்தோ, அடைக்கலப்பொருளை இழந்துகெட்டேன்; கோவலன் குற்றமுடையவனல்லன்; அரசனே தவறினான்; செங்கோலும் வெண்குடையும் இங்ஙனம் பிழைபடுங்காலமும் நேர்ந்தனவோ!"என்றலறி இரவின் நடுச்சாமத்தே எரியிற்புகுந்து மாய்ந்தனள். கோவலன் கண்ணகி இருவரையும் தம்முடனழைத்துக்கொண்டு மதுரைவந்த கவுந்தியடிகள்,கோவலனை அரசன் கொலை செய்ததுகேட்டதும் உண்டாகிய பெருஞ்சீற்றமானது அவ்வரசனது மரணத்தால் மாறியதாயினும், "என் அன்புக்குரிய இவர்கட்கு இவ்வினையும் வரக்கடவதோ" என்றிரங்கி உண்ணாநோன்புகொண்டு உயர்கதியடைந்தனள். அன்றியும், கண்ணகியின் சீற்றத்தால் மதுரைமாநகரம் எரிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் மதுரையில் நேரிலுணர்ந்த யான், பின்பு என்னூராகிய காவிரிப்பூம்பட்டினம் சென்று, என்னண்பனான (கோவலனுக்கு இவன் நண்பனென்பதும், மதுரையில் அவனுடன் இவ்வந்தணன் அளவளாவியதும், இந்நூல் 38ம் பக்கத்துக் காண்க.) கோவலன் கொலை முதலியவற்றால் யானடைந்த துயரங்களை ஆங்குள்ள பெரியோர்கட்கு உரைக்கலாயினேன்.

அவ்வாறுரைத்த செய்தி சிறிதுசிறிதாக ஊரெங்கும்பரவி முடிவில் கோவலன்தந்தை மாசாத்துவானுக்கும் எட்ட, அவ்வணிகர் தலைவன், தன்மைந்தனுக்கும் மருகிக்கும் பாண்டியனுக்கும் நேர்ந்த கொடுந் துன்பங்களைச் சகியாதவனாய், இல்லறத்தைவெறுத்துத் தான்படைத்த பெரும்பொருளனைத்தையும் உத்தமதானங்களிற் செலவு செய்துவிட்டுப்,பௌத்த சங்கத்தார் இருக்கையாகிய இந்திரவிகாரத்தைச் சார்ந்து அங்கே தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர் நூற்றுவரைச் சரணமடைந்து துறவியாயினன். அம் மாசாத்துவான் மனைவியாகிய கோவலன்தாயோ, தன் செல்வப்புதல்வனுக்கு நேர்ந்த விபத்தைப் பொறாதவளாய் அளவிறந்த துயரால் நொந்து உயிர்விட்டனள். இனிக் கண்ணகியின் தாதையான மாநாய்கன் தவமுனிவராகிய ஆசீவகரையடைந்து தன் பொருள்களாற் புண்ணிய தானங்களைப் புரிந்து துறவுபூண்டனன். அவன் மனைவியாகிய கண்ணகியின் தாய் சில நாள்களுள்ளே உயிர் நீத்தனள். இச்செய்தியெல்லாங் கேட்ட கோவலன் கணிகையாகிய மாதவி பெரிதுந் துக்கித்து, துன்பம் விளைவிக்கும் பரத்தையர்கோலத்திலே தன்மகள் மணிமேகலையைப் புகவிடாதபடி தன் தாயான சித்திராபதிக்குக் கூறி விட்டு, மாலையுடன் தன் கூந்தலையுங்களைந்து பிக்ஷுணியாகிப் பௌத்தவிகாரமடைந்து தருமோபதேசம் பெற்றனள். இங்ஙனமாக, யான் மதுரையிலிருந்து கொணர்ந்த கொடுஞ்செய்திகேட்டு இறந்தவர்சிலரும் உண்மையால் அப் பாவவிமோசனத்தின்பொருட்டுக் கங்கையாடவெண்ணி இங்குவரலாயினேன்; இதுவே என்வருகைக்குக் காரணம்; வேந்தே! நீ வாழ்க" என்று அம்மாடலமறையோன் முன்னிகழ்ந்தவை யெல்லாம் விளங்கச் செங்குட்டுவனுக்குக் கூறிமுடித்தனன்.

இவற்றைக் கேட்டிருந்த அவ்வஞ்சி வேந்தன் "நான்மறையாள! பாண்டியன் தான்புரிந்த கொடுங்கோன்மையை நினைந்து உயிர்நீத்தபின்னர் அப் பாண்டிநாட்டில் நிகழ்ந்த விசேடம் என்னை?" என்று உசாவினான். மாடலனும் அரசனைநோக்கி, "சோழர் குடிக்குரிய தாயத்தாரொன்பதின்மர் தம்மிலொன்றுகூடி நின்மைத்துனச் சோழனாகிய கிள்ளியோடு பகைத்து அவனது இளவரசியலையேற்று ஏவல்கேளாது சோணாட்டைப் பெரிதும் அலைத்துவந்தகாலையில்,அவ்வொன்பதின்மருடனும் பொருது ஒருபகலில் அவர்களை யழித்து மைத்துனனது ஆஞ்ஞாசக்கரத்தை ஒருவழியில் நிறுவியவனும்,பழையன்மாறனது காவன்மரமாகிய வேம்பை அடியோடு அழித்துவென்றவனும், போந்தைக்கண்ணி யுடையவனுமாகிய பொறையனே! கேட்டருள்க; கொற்கை நகரத்தே இளவரசாய் விளங்கிய வெற்றிவேற்செழியன் என்பவன் தன்னாட்டுக்கு நேர்ந்த விபத்தையறிந்து பெருஞ்சினங்கொண்டு, ஒருமுலைகுறைத்த திருமா பத்தினியாகிய கண்ணகிக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைப் பலியிடுவித்துப்பின், தன் அரசனை இழந்துவருந்தும் மதுரைமூதூரில் தென்னாடாட்சிக்குரியதாய்த் தொன்றுதொட்டு வருஞ் சிங்காதனத்தே,தெய்வத்தன்மை வாய்ந்த ஒற்றையாழியந்தேர் மேற் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறி விளங்கியவாறுபோல,சந்திரவமிசத்தோனாகிய அவ் விளஞ்செழியன் ஏறி விளங்குவானாயினன்;அரசே! வாழ்க" என்று முடித்தான்.

கங்கைக்கரைப் பாடியிலே செங்குட்டுவன் இவற்றையெல்லாம் நெடுநாட்களுக்குப்பின் மாடலன் வாயினின்றும் கேட்டறிந்து வியப்புற்றிருந்த காலையில், விரிந்தஞாலத்தைப் பேரிருள் விழுங்கும்படி வந்த மாலைக்காலத்தே, செந்தீப் பரந்ததுபோன்ற மேலைத்திசை விளக்கமெய்த வெண்பிறை தோன்றியது. அங்ஙனமெழுந்த பிறையைப் பெருந்தகையான செங்குட்டுவன் நோக்கினான்.அப்போது பக்கத்திருந்த நிமித்திகன் (பெருங்கணி) சமயமறிந்து அரசனை வாழ்த்தி, "வேந்தர் வேந்தே! வஞ்சியினின்றும் தேவரீர் புறப்பட்டு இன்றோடு முப்பத்திரண்டு மாதங்களாகின்றன" என்றான். எனலும், செங்குட்டுவன் அக்கங்கைப்பாடியில், மரமுளைகளால் ஒழுங்காக நிரைக்கப்பட்டுப் படங்குகளையே மதிலாகவுடைய தேர்வீதியுள்ளே, சிறிதும் பெரிதுமாய்க் குன்றுகளைக் கண்டாற்போல் விளங்கும் கூடகாரங்களமைந்த முடுக்கின் ஒரு பக்கமாகச் சென்று, வேலைப்பாடு மிக்கதும் சித்திரவிதான மமைந்ததுமான அத்தாணி மண்டபத்தை அடைந்து,ஆங்குள்ள பொற்சிங்காதனத்தே வீற்றிருந்து வாயில் காவலரால் மாடலமறையோனை ஆங்கழைக்கச் செய்தனன். அவன் வந்ததும், செங்குட்டுவன் அவ்வந்தணனை நோக்கி "என் மைத்துனனாகிய சோழனுடன் பகைத்த இளங்கோவேந்தர் போரில் இறந்தபின்னர்,அச்சோணாட்டரசனது கொற்றமும் செங்கோலும் கேடின்றியுள்ளனவோ"என்று உசாவ, மாடலனும், அரசனை வாழ்த்தி "வேந்தே! தேவரும் வியப்பத் தூங்கெயில் மூன்றையும் (இவன் ஆகாசத்திற் சரித்துவந்த அசுரர்களது மூன்றெயில்களையும் அழித்தவனென்று தமிழ்நூல்களிற் புகழப்படுவன்.) எறிந்தவனது வேல்வெற்றியும், குறுநடையுடைய புறாவின் பெருந்துயரமும் அதனைத் துரத்திவந்த பருந்தினிடும்பையும்

ஒருங்குநீங்கத் தன்னுடம்பையே அரிந்து துலையிற் புகுந்தோனது(சிபிச்சக்ரவர்த்தி; முன்னவனும் இவனும் சோழவமிசத் தலைவர்களாதலால், இவர்கள் செயல்களைச் செங்குட்டுவனுடைய மைத்துனச் சோழன்மேல் ஏற்றியுபசரித்தாரென்க.) செங்கோலும், மாறுங்காலமும் உண்டாமோ? காவிரியாற் புரக்கப்படும் சோணாட்டுவேந்தற்கு அத்துன்பக்காலத்துங் கேடில்லை" என்று கூறினன். இவ்வாறு மாடலன் சொல்லக்கேட்டுச் செங்குட்டுவன் மகிழ்வுற்றுத் தன்னிறையளவாக ஐம்பதுதுலாபாரம் பொன்னை அம் மறையவனுக்குத் தானஞ்செய்து வெகுமானித்தனன். இதுமுடிந்ததும் சேரர் பெருமான் தன் யாத்திரைக்கு உதவிபுரிந்த ஆரியவரசராகிய கன்னர் நூற்றுவரையும் அவருடைய வளமிகுந்த நாட்டுக்குச் செல்லுமாறு விடுத்துப், பின் தன் தூதுவராயிரவரை அழைப்பித்துத் தமிழரது பேராற்றலையறியாது போர்க்கோலங்கொண்டுவந்து தோற்றுத் தாபதவேடம் பூண்டொளித்த இராசகுமாரரைத் தமிழரசரான சோழபாண்டியர்க்குக் காட்டிவருமாறு ஆணையிட்டு அவர்களை முன்னதாகப் பிரயாணப்படுத்தி அனுப்பிவிட்டுப் பின் தன் சிரமம் நீங்கப் பள்ளிமேவித் துயில் கொள்வானாயினன். இங்கு இவ்வாறாக:-

சேரராஜதானியாகிய வஞ்சிமாந‌கரிற் செல்வமிகுந்த அரண்மனையுள் வானளாவிய அந்தப்புரத்தே, முத்துக்களாலாகிய சல்லியும் தூக்குமிவைகளால் முழுதும் வளைக்கப்பட்டதும் விசித்திரமான மேற்கட்டியமைந்ததும் மணிநிரைகளை இடையிடையே வகுத்து வயிரமழுத்தப்பெற்ற பொற்றகட்டினொளி ஒழுகப்பெற்றதும்,வேலைப்பாடுமிக்க புடைதிரண்ட பொற்காலையுடையதுமான அழகிய பெரிய அமளிக்கட்டிலின் மேல், புணர்ச்சியுற்ற அன்னங்களது புளகிப்பால் வீழ்ந்த இளந்தோகைகளைச் செறித்து இரட்டையாக விரிக்கப்பெற்ற பள்ளியிடையே, கோப்பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாள் தூக்கமென்பதின்றித் தனித்திருக்க, அத்துயரைச் செங்குட்டுவனது வடநாட்டு வெற்றியை அறிந்தவராகிய செவிலிமார்கள்"அன்னாய்! காதற்கொழுநனைக் காணாதிருந்த நின்கவலையை இனி யொழியக்கடவாய்" என்று கூறிப் பாசுரங்களோடு சேர்த்துப் பல்லாண்டு பாடுவாராயினர். அவ்வாறே, அரசிக்கு ஊழியஞ்செய்யுஞ் சிந்தருங் கூனருஞ் சென்று அடி வணங்கி "தேவீ! எம்பெருமான் வந்துவிட்டனன்;இனி நீ முகமலர்ச்சியுடன் கூந்தலில் நாளொப்பனைபெற்று நலம்பெற விளங்குக" என்றார். இங்ஙனம் ஆயத்தார் அரசியின் பிரிவாற்றாநிலையை ஒருசார் ஆற்றிநிற்க, மலைகளிற் புனங்காவல்செய்யுங் கானவன் ஆங்கு மூங்கிலிற்கட்டப்பட்ட தேனையுண்டு களித்து அக்களிப்பால் கவண்விட்டுக் காவல் புரிதலை நெகிழ்ந்தமையின், அச்சமயமறிந்து செழித்தபுனக் கதிர்களை உண்ணுதற்கு வந்த பெரியயானைகள் நல்ல துயிலடையும்படி மலைமகளிர் புனப்பரண் மேலிருந்து கொண்டு "வட திசைச்சென்று வாகையுந்தும்பையுஞ் சூடிய போர்க்களிறுகள் திரும்பும்வழி சுருங்கக் கடவது" என்று தாந்தாம் அறிந்தவாறு பாடிய குறிஞ்சிப் பாட்டுக்களும், "வடவரசரது கோட்டைகளைத் தகர்த்துக் கழுதைகளை ஏரிலே பூட்டியுழுது கொள்ளைவிதைத்த உழவனாகிய குடவர்கோமான் நாளைவந்து
விடுவான்; ஆதலாற் பகடுகளே! நுகம்பூண்டுழுது நாட்டைப் பண்படுத்துவீராக; பகைமன்னரைச் சிறைநீக்கும் அவன் பிறந்தநா ளொப்பனையும் வருகின்றது" என்று பாடும் உழவரது ஒலியமைந்த பாடல்களும்,
அரசனது ஆனிரைகளைக் காக்கும் கோவலர்கள், குளிர்ந்த ஆன்பொருநையாற்றில் நீராடுமகளிரால் விடப்பட்ட வண்ணமுஞ்சுண்ணமும் மலரும் பரந்து இந்திரவிற்போல் விளங்குகின்ற பெரிய துறையருகிலுள்ள தாழைமரங்களின்மேல் இருந்துகொண்டு தம் பசுக்களை அப் பெருந்துறையிற் படியவிட்டுத் தாமரைகுவளை முதலிய பூக்களைத் தலையிற்சூடியவராய் "ஆனிரைகளே! வில்லவனாகிய நம் வேந்தன் வந்தனன்; அவன் இமயப் பக்கத்தினின்று கொணர்ந்த பெருத்த பசுநிரைகளோடு நீரும் நாளைச்சேர்ந்து மகிழக்கடவீர்’ என்னுங் கருத்துப்பட ஊதும் ஆயரது வேய்ங்குழலோசையும், வெண்டிரைகளால் மோதப்பட்ட கடற்கரைக்கழிகளின் பக்கத்துள்ள புன்னைக்கீழ் வலம்புரிச் சங்கமீன்ற முத்துக்களே கழங்காக நெய்தனிலமகளிர் தங் கைகளில் ஏந்திக்கொண்டு, நெடுநாட்பிரிந்த நம் மரசியோடு கூடிமகிழும்படி வானவனாகிய நம் வேந்தன் வெற்றியோடும் மீண்டனன்; அவன் சூடிய தும்பையையும் பனம்பூவையும் வஞ்சிநகரையும், நங்கைமீர்! நாம் பாடுவோமாக’ என்று நுளைச்சியர் பாடிய இனிய பாடல்களுமாக நால்வகை நிலங்களினின்றும் எழுந்த இன்னிசைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு உறங்காதிருந்த கோப்பெருந்தேவியானவள், தன் கைவளைகளைச் செறித் தணிந்துகொள்ளவும், நகரில் வலம்புரிச் சங்கங்கள் வலமாகவெழுந்து முழங்கவும், செங்குட்டுவன் முத்துமாலைகளமைந்த வெண்கொற்றக்குடையின் கீழ் வாகையணிந்த சென்னியோடும் தன் பட்டத்தியானையின் மேல் விளங்கியவனாய்,குஞ்சரங்கள் பூட்டிய இரதங்களுடன் கோநகர் முழுதும் வந்தெதிர்கொள்ள வஞ்சிமூதூரிற் பிரவேசஞ்செய்து தன் கோயிலை அடைவானாயினன்.