செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்

நடுகற்காதை
தண்மதிபோன்றதும் பொன்னாலாகியதுமான வெண்கொற்றக் குடையால் மண்ணகத்தைக் குளிர்வித்த நிலந்தரு திருவினெடியோனாகிய செங்குட்டுவன், விஜயம் விளங்கும் அவ் வஞ்சிமாநகரிற் புகுந்தபின்னர்,மகளிரெல்லாங்கூடி மலர்களைப் பலியாகத் தூவித் திருவிளக்குகளைக் கொணர்ந்து நின்று "உலகமன்னனாகிய நம்மரசன் நீடுவாழ்க"என்றேத்தும்படி, மாலைக்காலமும் வந்தது. பலரும் தொழத்தக்கதும் மலர்கள் விரிதற்குக் காரணமாகியதுமான அவ்வழகிய காலத்தே பனம்பூங் கண்ணியைப் பூமாலையோடணிந்தவர்களும் தம் அரசனது போர்வினையை முடித்தவர்களுமான வாள்வீரரது யானைக்கோடழுத்தினவும் வேல் கணைகளாற் கிழிப்புண்டு புண்பட்டனவுமான மார்புகளை, அவர்கள் வீரபத்தினியர் தம் அழகிய தனங்களால் வேது கொண்டு ஆற்றுவித்தனர். இங்ஙனம் ஆற்றுவிக்க அவ்வீரரர்கள் மன்மதபாணம் பாய்ந்தவர்களாய் "இம்மகளிரது கடைக் கண்கள் முன்பு நமக்குப் பாசறைக்கண்ணே வருத்தஞ்செய்தனவாயினும்,இம்மாலைக் காலத்து அதற்கு மருந்துமாயுள்ளன" என்று புகழ்ந்தேத்த,அதுகேட்டு அம்மகளிர் தம் பவள வாயினின்று நிலவெழக் கடைக்கண்ணோக்குடன் புன்சிரிப்பாகிய விருந்தூட்டி மகிழ்வித்தனர்.
மற்றுமுள்ள இளைஞரான வீரர்கள் இசைவல்ல மகளிரது இன்பக்கடலிலாடித், தங்குலைந்த கோலத்தைக் கண்ணாடியாற் றிருத்திக்கொண்டு யாழ்தழுவிக் குறிஞ்சிப்பணணை இனிதுபாடிய அந்நங்கையரால் கானவிருந்து செய்யப் பெற்றனர்.
இங்ஙனம், அவ்வழகிய மாலைக்காலமானது வீரர்க்கெல்லாம் இன்பவிருந்தயர்வித்துப் பின், சேரன்-செங்குட்டுவன் குடிகளது குறைதீர வெளிப்போதருங் காலத்து விளங்கும் அவனது திருமுகம்போல,உலகந்தொழும்படி தோன்றிய பூர்ணசந்திரனை அவ்வஞ்சிமுதூர்க்குக் காட்டித் தான் நீங்கியது. அப்போது மைந்தரும் மகளிருந் தன்னாணைப்படியே நடக்குமாறு ஐங்கணைக்கிழவனான மன்மதன் அரசுவீற்றிருந்த நிலாமுற்றங்களும், பூம்பள்ளிகளும்,நடனசாலைகளும்,மலர்ப்பந்தர்களும், மஞ்சங்களும், விதானமமைந்த வேதிகைகளும் அத்தண்கதிரால் விளக்கமுறுவனவாயின. கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு இடைநின்று விளங்கும் மேருப்போல,அவ் வஞ்சிமாநகரின் நடுவுநின்றோங்கும் பொன்மயமான அரண்மனையிலுள்ள நிலாமுற்றமாகிய மணியரங்கில் அப்பூர்ணசந்திரனது காட்சியைக் காணவேண்டி, மகளிர் தம் வளைக்கைகளில் விளக்குகளை ஏந்திப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஒருபுடை வரவும், மத்தளம் வீணைகளுடன் பண்கனிந்த பாடலிசைகள் ஒருசார் பரவவும், கூனரும் குறளரும் கஸ்தூரி வெண்கலவைச் சாந்தங்களை ஏந்தினவராய் ஒருபுடை செல்லவும், பெண்கோலம்பூண்ட பேடியர் வண்ணஞ்சுண்ணம் மாலையிவற்றைத் தாங்கிவரவும், பூவும் நறும்புகைகளும் வாசனைப்பண்டங்களும் பரவவும், கண்ணாடி தூமடி அணிகலன்களைக் கொண்டு சேடியர் சூழவும், இவ்வாறாக எழுந்தருளிய தன் தன்மபத்தினியாகிய இளங்கோ வேண்மாளோடுங் கூடி வேந்தர்பெருமானான செங்குட்டுவன் அவ்வரங்கினை அடைந்து அதனில் வீற்றிருப்பானாயினன்.
அப்போது, மறையவர்நிறைந்த பறையூர்வாசியும், கூத்தில் வல்லவனுமாகிய சாக்கையன் ஒருவன் அரசன்முன் வந்து நின்று,சிவபிரான் திரிபுரங்களை எரித்தவிடத்தே உமையவளை ஒரு பாகத்துக்கொண்டு ஆடிய கொட்டிச்சேதம்* என்னுங் கூத்தினை அப்பெருமான் ஆடியமுறையே நடித்துக் காட்டக், குடவர் கோமானும் கோப்பெருந்தேவியும் அதனைக் கண்டு மகிழ்ந்தனர்.
இங்ஙனம், அவ்விருவரது நன்குமதிப்பையும் பெற்றுக் கூத்தச்சாக்கையன் விடைபெற்று நீங்கியபின், செங்குட்டுவன் மனைவியுடன் அந்நிலா முற்றத்தை விட்டுப் புறப்பட்டு அரசிருப்பாகிய பேரோலக்கத்தை அடைந்தான். அடைந்தபின்னர், நீலன் முதலாய கஞ்சுகமாக்கள் மறையோனான மாடலனுடன் அவ்விடம்வந்து, வாயில் காவலரால் தம்வரவை மன்னனுக்கறிவித்து, அவனாணைபெற்று உட்சென்று அரசனை வணங்கிச் சொல்லுகின்றார்:- "வெற்றி வேந்தே! தேவரீர் எங்களுக்கிட்ட கட்டளைப்படியே, சோழரது பழமைதங்கிய நகரஞ்சென்று, அங்கே, வச்சிரம் அவந்திமகத நாட்டரசரால் அளிக்கப்பெற்ற பந்தருந் தோரண வாயிலுங் கொண்ட சித்திரமண்டபத்தில் வீற்றிருந்த செம்பியர் பெருமானைக்கண்டு,வடநாட்டுப் போரில் அகப்பட்ட ஆரிய மன்னரை அவ்வேந்தனுக்குக் காட்டி அவனடி வணங்கி நின்றேம்.
-----
* இது, கொடுகொட்டி, கொட்டி எனவும் வழங்கும்; "திரிபுரந்தீமடுத் தெரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்றாடுதலிற் கொடுமையுடைத்தாதல் நோக்கிக் கொடுகொட்டி என்று பெயர் கூறினார்" என்பர் அடியார்க்குநல்லார். (சிலப். 6, 43).
அஃதறிந்த அவ்வரசன் "போர்க்களத்தே பேராண்மைகாட்டிப்பொருது தங்கள் வாளையும் குடையையும் அக்களத்திட்டு உயிர்தப்பியோடிய வேந்தரைப் போரிற் பிடித்துக் கொண்டுவருதல் வெற்றியாகாது" என்று தன்சேனாபதியை நோக்கிக் கூறினான். பின்னர் அரசே! அவன் தலைநகரைவிட்டுநீங்கி மதுரைசென்று பாண்டியனைக்கண்டேம்."அமர்க்களத்தே தங்கள் குடைக்காம்பை நட்டுவத்தலைவர் போலக் கையிலே பிடித்துக்கொண்டு, இமயப்பக்கத்துள்ள குயிலாலுவம் என்னும் போர்க்களத்தைத் துறந்து புறங்கொடுத்து, ஆங்குள்ள சிவபிரானை வணங்கியவராய்த் தவக்கோலங் கொண்டோடின ஆரியமன்னர்கள்மேல் இவ்வாறு மிகுந்த சீற்றங்கொண்ட அரசனது வெற்றி, இதுவரையில்லாத புதுமையாகும்" என்றான் அப்பாண்டியன்" எனச் சேரர்பிரானுக்குத் தூதர்தலைவனான நீலன் அவ்வேந்தர்கூறிய வார்த்தைகளைச் செப்பிநின்றனன். இவற்றைச் செவியுற்றுக்கேட்ட செங்குட்டுவன்,தன்வெற்றியை அவ் வரசர்கள் இகழ்ந்ததனாற் கோபம் பெருகித் தாமரைபோன்ற கண்கள் தழனிறங்கொள்ள நகை செய்தனன். இங்ஙனம் அரசனுக்குச் சோழ பாண்டியர்மேற் சீற்றம்பெருகுதலை மறையவனாகிய மாடலன் கண்டு அச்சபையிலெழுந்து நின்று "வேந்தர்வேந்தே! நின் வெற்றி விளங்குவதாகுக" என்றேத்திப் பின்வருமாறு கூறுகின்றான். "மிளகுக்கொடிமிக்க மலைப்பக்கத்துறங்கும் யானைக் கூட்டங்களையுடைய பகைவரது வியலூரை யழித்தும், ஆத்திமாலை-யுடையவரும் சோழர்குடியினருமாகிய ஒன்பதின்மருங் கூடிவிளைத்த பெரும்போரை நேரிவாயில் என்ற ஊரில் வென்றும், பெரிய தேர்ச்சேனைகளுடன் இடும்பாதவனத்துத் தங்கி ஆங்குவிளைந்த போரைக்கடந்தும், நெடுங்கடலில் மரக்கலங்களைச் செலுத்தியும்,முன்னொருகாலத்தில் எதிர்த்துவந்த ஆரியமன்னரைக் கங்கைக்கரையிற் செயித்தும் இங்ஙனம் வெற்றிமாலைசூடி, உயர்ந்தோர் பலருடன் அறிய வேண்டுவனவற்றை அறிந்த அரசரேறே! நீ வாழ்க; நின் கோபம் அடங்குவதாக; நின் வாழ்நாட்கள் ஆன்பொருநையாற்று மணலினும் அதிகமாக விளங்குக; யான் கூறுஞ் சொற்களை இகழாது கேட்டருள்வாய்; உலகங் காத்தலை மேற்கொண்டுவிளங்கும் உனது சிறந்த ஆயுட்காலத்தே ஐம்பதி யாண்டுகள்வரை கழிந்தும் நீ அறக்கள வேள்வியைச் செய்யாது எப்போதும் மறக்கள வேள்வியே செய்து வருகின்றாய்; இராச காரியங்களை யெல்லாம் முற்றச்செய்து கொற்றவாளை வலத்தேந்தி நிற்கும் உன்னுடைய தலைநகரத்தில்,முன்னிருந்த புகழ்மிக்க உன் முன்னோரிலே,
"கடற்கடம் பெறிந்த காவல னாயினும் 1
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும் 2
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் 3
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் 4
வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் 5
இகற்பெருந் தானையொ டிருஞ்செரு வோட்டி
அகப்பா வெறிந்த அருந்திற லாயினும் 6
உருகெழு மரபி னயிரை மண்ணி
இருகட னீரு மாட்னோ னாயினும் 7
சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்" 8
---------
* இவ் வடிகளிற் கூறப்பட்ட செங்குட்டுவன்முன்னோர் செயல்களைப் பதிற்றுப்பத்துப்பாடல்களிலும் பதிகங்களிலும் கண்ட சேரர் செய்திகளோடு ஒப்பிடும்போது, பல (3, 6, 7) ஒருவர் செய்கைகளாகவும்,சில (8) செங்குட்டுவனுக்குப் பிற்பட்ட சேரர்செயலாகவும், முறை பிறழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால், செங்குட்டுவனுக்கு முன்னோர்களை, இவ் வடிகளைக்கொண்டு முறைப்படுத்தல் அருமையாகும்.
இன்றுவரை ஒருவரும் நிலைத்தவராகக் காணப்படாமையின் இவ்யாக்கை நிலையற்றதென்பதை நீயே யுணர்வாய்; விரிந்தவுலகத்திற் பெருவாழ்வுடையராகிய செல்வரிடத்தே அச் செல்வந்தானும் நிலையாதென்பதைத் தமிழரசரை யிகழ்ந்த இவ்வாரியமன்னரிடத்தில் நீயே கண்டனையன்றோ? இனி இளமை நிலையாதென்பதை அறிஞர் உனக்கு உரைக்க வேண்டுவதேயில்லை; என்னெனின், திருவுடை மன்னனாகிய நீயும் உனது நரைமுதிர்ந்த யாக்கையைக் காண்கின்றாய்;தேவயோனியிற் பிறந்த ஒரு நல்லுயிர் அதனிற்றாழ்ந்த மக்கட் பிறவிக்குத் திரும்பவுங் கூடும். மக்கள்யாக்கையிற் பொருந்திய ஆன்மா அவ்வாறே விலங்குடலையெடுத்தலும், அவ்விலங்குடலை யெடுத்தது துக்கமிகுந்த நரக கதியையடைதலும் உண்டாம். ஆதலால், இவ்வுயிர்கள் ஆடுகின்ற கூத்தரைப் போல ஓரிடத்தே ஒரு கோலங்கொண்டு நிலைத்தல் ஒருபொழுதுமில்லை. தான்செய்கின்ற கருமவிதிக்கேற்ப உயிர்கள் அவ்வக்கதியை அடையுமென்பது குற்றமற்ற அறிஞரது மெய்யுரையாகும்; ஆதலால், இவற்றை நன்குணர்ந்து, எழுமுடியாரந் தாங்கிய வேந்தே! வழிவழியாக நின்னாணை வாழ்வதாக; யான் இவற்றைப் பிறர்போலப் பொருட்பரிசில் காரணமாக உன்பாற் சொல்லவந்தவ னல்லேன். மற்று, நல்வினைப் பயனால் உத்தமசரீரம்பெற்ற ஒரு நல்லுயிர், செய்யவேண்டிய கருமங்களைச் செய்தலின்றி,
இவ்வுலகத்துப் பிறந்திறப் போரெல்லாரும் போம்வழியிலேபோய் வீணேகழிதலை யான் பொறுக்க க்கூடாதவனாக இவைகூறினேன். ஆதலின், அறிவு முதிர்ந்த அரசே! மோக்ஷ-மார்க்கத்தை அளிக்கும் யாகவேதியர்கள் காட்டுகின்ற வேதவழிப்படியே அரசர்க்கெடுக்கப்பட்ட பெரியயாகங்களை நீ செய்தல் தகும். அவ்வறங்களை நாளைச்செய்வோம் என்று தாழ்ப்போமாயின், கேள்வியளவேயான இவ்வான்மா நீங்கிவிடின் என் செய்வது? தம் வாணாளை இவ்வளவென்று வரையறுத்துணர்ந்தோர் கடல் சூழ்ந்த இப்பேருலகில் ஓரிடத்தினும் இலர். ஆதலால்,யாகபத்தினியாகிய இவ்வேண்மாளுடன் கூடி, அரசரெல்லாம் நின்னடி போற்ற அவ்வேள்வியை உடனே தொடங்கி ஊழியளவாக உலகங்காவல்புரிந்து, நெடுந்தகாய்! நீ வாழ்வாயாக" என்று அம்மறையவன் உபதேசித்தனன்.
இவ்வாறு, மாடலன், செங்குட்டுவனது செவியே வயலாக வேதம்வல்ல தன்நாவைக்கொண்டுழுது உத்தம தர்மங்களாகிய வித்துக்களை விதைத்தமையின், அவ்விதைகள் அப்போதே விளைந்து பக்குவம்பெற்ற உணவாய்ப் பெருகவும், அவற்றை விரைந்துண்ணும்வேட்கை அவ்வரசனுக்கு உண்டாகியது. அதனால், சேரர்பெருமான்,வேதவழிப்பட்ட தர்மங்களை நன்கறிந்த சிரௌதியராகிய வேள்வியாசிரியர்களுக்கு, மாடலமறையோன் கூறிய முறையே,யாகசாந்திக்குரிய விழாவைத் தொடங்கும்படி ஆஞ்ஞாபித்தனன்.பின்னர்த் தன்னாற் சிறைப்படுத்தப்பட்ட ஆரியமன்னராகிய கனகவிசயரைச் சிறையினின்று மீட்பித்து, பொய்கைசூழ்ந்ததும் குளிர்ச்சிதங்கிய மலர்ச்சோலைகளுடையதுமாகிய வேளாவிக் கோமந்திரம் என்னுமாளிகையில் அவர்களை வசிக்கும்படி செய்வித்துத் தான் நிகழ்த்தும் யாகமுடிந்ததும் அவரை அவரது நாட்டுக்கனுப்புவதாக அறிவித்து, அது வரை அவ்வாரியவரசர்க்கு வேண்டிய உபசாரங்களைச் செய்துவருமாறு வில்லவன்கோதை என்னும் சேனாபதிக்கு மகிழ்ச்சியுடன் கட்டளையிட்டான். அவ்வாறே, அழும்பில்வேள் என்னும் அமைச்சனோடு ஆயக்கணக்கர்களையேவி,நீர்வளமிக்க நகரங்களிலும் மற்றையூர்களிலும் சிறைப்பட்டவரை யெல்லாம் வெளியேற்றிச் சிறைச்சாலைகளைத் தூய்மைசெய்யவும் ஆணையிட்டனன்.
இவ்வாறு, சேரர்பெருமான் ஆணையிட்டபின், உலகமுற்றுந் தொழுகின்ற பத்தினியாகத் தான் (கண்ணகி) விளங்குதலால், "அருந்திற லரசர் முறைசெயி னல்லது - பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது" என முன்னோருரைத்த மொழியினுண்மையை ஆத்திமாலைசூடிய சோழனைக் கொண்டு விளக்கியும், செங்கோல் வளையுமாயின் அரசர் உயிர்வாழார் என்ற உண்மையைத் தென்னாடாளும் பாண்டியனைக்கொண்டு விளக்கியும், தாஞ்செய்த சபதம் நிறைவேறினாலல்லது தம் கொடுஞ்சினந் தணியார் அரசரென்பதை ஆரியவரசர் அறியும்படி சேரன்-செங்குட்டுவனைக்கொண்டு விளக்கியும்,மதுரைமாநகரம் கேடடையும்படி கொடிய அழலைக் கொங்கையினின்று விளைவித்தும் (இங்ஙனம் அருஞ்செயல்களைப் புரிந்து) சேரநாட்டை யடைந்து வேங்கைமர நீழலில் தங்கிய நங்கையின்பொருட்டு, அந்தணர் புரோகிதன் நிமித்திகன் சிற்பாசாரிகள் இவர்கள்சென்று அழகுபெற அமைத்த பத்தினிக்கோயிலுள்ளதும், இமயத்தினின்று கொணர்ந்த சிலையில் கைத்தொழிற்றிறமையால் முற்றுவிக்கப்பெற்றதுமான பத்தினிக்கடவுளின் பிரதிமைக்கு அணிகலன்களெல்லாம் பூட்டியலங்கரித்துப் புஷ்பாஞ்சலி செய்து,திக்தேவதைகளையும் கடைவாயிலிலே தாபித்து, யாகவேள்வியோமங்களும் உற்சவங்களும் நிகழுமாறு கடவுண்மங்கலமாகிய பிரதிஷ்டைநிகழ்த்தச் செல்லுக" என்று சாத்திரம் வல்ல மக்களை நோக்கி, வடதிசைவணங்கிய சேரன்-செங்குட்டுவன் கற்பனை செய்தனன்.
6-வது வாழ்த்துக்காதை
கண்ணகியின் உற்றார் அவள்கோயிற்கு வருதலும் அவருடன் செங்குட்டுவன் பத்தினியை வாழ்த்தியதும்.
மேலே கூறியவாறு, குமரிமுதல் இமயம்வரை தன் ஆணைநடத்தி உலகாண்ட சேரலாதனுக்குச் சூரியவமிசத்துச் சோழன்மகள் பெற்ற மைந்தனும், முன்னொருகாற் கொங்கருடன் போர்புரியவிரும்பிக் கங்கையாற்றுக்கரைவரை படையெடுத்துச் சென்றவனுமாகிய சேரன்-செங்குட்டுவன் ஆரியரிடத்தேகொண்ட சினத்தோடுந்திரும்பித் தன் தலைநகரான வஞ்சியுள்வந்து தங்கியிருந்தகாலத்தே, வடநாட்டு ஆரியவரசர்பலர் அப்பக்கத்துநடந்த சுயம்வரமொன்றன்பொருட்டுக் கூடியிருந்தவிடத்தில், "தமிழ்நாடாளும் வேந்தர் போர் விரும்பிப் படையெடுத்துவந்து இங்குள்ள ஆரியவரசர்களை வென்று இமயவரைமேல் தங்கள் இலச்சினைகளாகிய வில் புலி மீன்களைப் பொறித்துச்சென்ற காலங்களில் எங்களைப் போலும் பெருவேந்தர்கள் இந்நாட்டில் இருந்திலர்போலும்" என்று தம்மில் ஒத்துப்பேசித் தமிழரசரையிகழ்ந்து நகையாடிய செய்தியை ஆங்கிருந்துவந்த மாதவர்சிலர் சொல்லக்கேட்டு, இயற்கையிலுருள்கின்ற உருளையொன்றைக் குணிலைக்கொண்டு உருட்டினாற்போலப் பத்தினியின் பொருட்டுக் கற்கொணர வேண்டு-மென்றெண்ணியிருந்த அவ்வரசனுள்ளத்தை அம்மாதவர் வார்த்தை கிளரச் செய்தமையால் உடனே தன்படைகளைத் திரட்டிச்சென்று ஆரியநாட்டரசரைப் போரில் வென்று அவர் முடித்தலையிற் பத்தினியின் படிமத்துக்குரிய இமயக்கல்லைச் சுமத்திக்கொண்டு அங்கிருந்து திரும்பி வெற்றிமகிழ்ச்சியுடன் கங்கையாற்றிற் றங்கி அப்படிமத்தைக் கங்கையாட்டித் தூய்மைசெய்து தன் சினநீங்கி வஞ்சிமாநகரமடைந்து வேந்தர் பலருந் தொழத்தக்க படிமஞ் செய்வித்துப் பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டை செய்ததோடு,அக்கோயிலில் அரசரெல்லாம் தத்தம் திறைகளைக்கொண்டு வந்து வணங்கும்படியும் செய்வித்தனன்.
இஃது இங்ஙனமாக, மதுரைமாநகரில் முன்னைவினையாற் கோவலன் பொற்கொல்லனாற் கொலையுண்ண அது கேட்ட அவன் மனைவி கண்ணகி துன்பமிக்குக் கண்ணீர் பெருக்கி புழுதியிற்புரண்ட கூந்தலைவிரித்துத் தருமதேவதையைப் பழித்துக்கொண்டு பாண்டியன்முன் சென்று வழக்காட, அவளது துக்கத்தைக்கண்டு பொறாத அவ்வரசன் தன் செங்கோல் வளைந்தமையால் உயிர்நீத்ததையும்,கோவலன் கொலையுண்டதுகேட்டு அவன் தந்தை துறவுபூண்டதையும்,தாய் இறந்தமையையும், மாடலனென்னும் அந்தணன் மூலங்கேள்வியுற்று மிகவும் துக்கித்துக் கண்ணகியின் செவிலித்தாயும்,அடித்தோழியும் (முக்கியத்தோழி), சாத்தன் கோயிலில் வாழும் தேவந்தியென்னும் பர்ப்பனத்தோழியும் ஆகிய மூவருஞ் சேர்ந்து கண்ணகியைக் காணவேண்டி மதுரைக்கு வரவும், அப்பத்தினியின் சீற்றத்தால் அந்நகரம் வெந்தசெய்தியை யறிந்து, கண்ணகியை அடைக்கலமாகப்பெற்று அவளது துன்பம் பொறாமலுயிர்விட்ட மாதரியின்மகள் ஐயை என்னும் இடைக்குலமகளையடைந்து அவளுடன் சேர்ந்து மதுரைநீங்கி வையைக்கரை வழியே சென்று திருச்செங்குன்று என்னும் மலைமீதேறி,ஆங்குப் பிரதிஷ்டிக்கப்பெற்ற கண்ணகி கோட்டத்தையடைந்து அப் பிரதிஷ்டையைச் செய்து சிறப்பித்து நின்ற சேரன்-செங்குட்டுவனை ஆங்குக்கண்டு அவனுக்குத் தங்கள் வரலாறுகளையெல்லாம் முறையே உரைத்தனர். உரைத்தபின்,அவர்களுள் தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியும் செவிலியும் அடித்தோழியும் -கண்ணகியின் துயர்பொறாது அவள்தாயும் தம்மாமியும் உயிர்நீத்ததும், மாமனாகிய மாசாத்துவானும், தந்தை மாநாய்கனும், கோவலன்காதற்கணிகை மாதவியும், அவள்மகள் மணிமேகலையும் துறவு பூண்டதுமாகிய செய்திகளை அப்பத்தினிக்கடவுள் முன் சொல்லிப்,பின் தம்முடன்வந்த ஐயையை அக்கடவுட்குக் காட்டி "நின்னை அடைக்கலமாகப் பெற்று அவ்வடைக்கலப் பொருளைக் காத்தோம்பமுடியாமல் உயிர்துறந்த மாதரி என்னும் இடைக்குல முதியாளின் மகளையும் பார்" என்று கூறி அழுதரற்றி நின்றார்கள்.இங்ஙனம் இவர்கள் அரற்றுகின்றபோது, பொற்சிலம்பும் மேகலாபரணமும் வளைக்கைகளும் வயிரத் தோடணிந்த காதுகளும் மற்றும்பல அணிகளும் அணிந்துகொண்டு மின்னற்கொடி போன்ற உருவமொன்று மீவிசும்பிற் றோன்றியது.
அதனைக்கண்ட செங்குட்டுவன் பெரிதும் அதிசயமடைந்தான். அப்போது அவ்வரசனுக்குக் கண்ணகி, தன் கடவுணல்லணி காட்டியதோடு,தன்னைக் காணவந்த மகளிரைநோக்கித் "தோழிகாள்! தென்னவனாகிய பாண்டியன் சிறிதுங் குற்றமுடையவனல்லன். அவன் தேவேந்திரன் சபையில் நல்விருந்தாய் விளங்குகின்றான். நான் அவ்வரசன் மகள் என்றறியுங்கள். முருகன் வரைப்பாகிய இம்மலையில் விளையாடல்புரிய எனக்குப் பெருவிருப்பமாதலால் இவ்விடத்தைவிட்டு யான் நீங்கேன். என்னோடு என் தோழிகளாகிய நீவிரும் சேர்ந்து விளையாடவருதிர்" என்று தன் பழமைகொண்டாடி அப்பத்தினி கூறினள். இங்ஙனம் பத்தினித்தெய்வம் நேர்நின்றுகூற அவற்றைக் கேட்டிருந்தவராகிய வஞ்சிமகளிரும் செங்குட்டுவன் ஆயமகளிரும் வியப்புற்றுத் தங்களிற்கூடி, அத் தெய்வத்தையும் அத்தெய்வஞ் சஞ்சரித்த தமிழ்நாடாளும் அரசர் மூவரையும் அம்மானை கந்துகம் ஊசல்வரிகளாலும் உலக்கைப்பாட்டாலும் பலவாறு வாழ்த்திக்கொண்டு பாடினர். முடிவில் "சேரன்-செங்குட்டுவன் நீடூழிவாழ்க" என்று அத் தெய்வவுருவமும் அரசனை வாழ்த்தி மறைந்தது.
7-வது வரந்தருகாதை
பத்தினி, செங்குட்டுவனையும் பிறரையும் அநுக்கிரகித்தது.
வடதிசையை வென்றுவணக்கிய சேரலர்பெருமானான செங்குட்டுவன்,பத்தினிக் கடவுளது தெய்வவுருவை மேற் கூறியவாறு தரிசித்தபின்னர்,தேவந்தியென்னும் பார்ப்பனியைநோக்கிச் "சிறிதுமுன்னர் நீங்கள் அழுதரற்றிக்கொண்டு பத்தினிமுன்பு கூறிய மணிமேகலையென்பவள் யார்?
அவள் துறவு பூண்டதற்குக் காரணம் யாது? சொல்லுக" என்று கேட்டனன். தேவந்தியும், கணிகையர்குலத்து ளுயர்ந்தவளான மணிமேகலையின் துறவைக் கூறத்தொடங்கி - "அரசே! நின்வெற்றி பெருகுக: நின்னாடு வளஞ்சிறப்பதாக; கோவலனுக்கு மாதவிவயிற்றுதித்த மணிமேகலையானவள் கன்னிப் பருவமடைந்ததற்கேற்ற அறிகுறிகளெல்லாம் நிரம்பினளாயினும், காமக்குறிப்புச் சிறிதேனும் இல்லாதவளாயினள். அதனால், நட்டுவனார் கூத்துமுதலியன பயில்வியாமையின் குலத்தலைவர்களாகிய செல்வர்கள் அவளைக் கொள்ளுதற்கு நினைந்திலர். இங்ஙனமாதலறிந்து மணிமேகலையின் பாட்டி சித்திராபதி, தன்மகள் மாதவிக்கு அவள்நிலைமைகூறி மன வருத்தமடையத் தாயின்கருத்தறிந்த அம்மாதவி, மணிமேகலையை உடனழைத்துக்கொண்டு அவளைக் கணிகையர்குலத்திற் புகவிடாது, மன்மதன் தானினைத்திருந்த எண்ணம் பழுதாகித் தன்கரும்புவில்லையும் மலர்வாளிகளையும் வெறுநிலத்தெறியும்படி, மணிமேகலையின் கூந்தலை மாலையுடன் களைவித்து இந்திரவிகாரமடைந்து பௌத்ததருமத்தே சேர்த்தனள். இச்செய்திகேட்ட அரசனும் நகரத்தாரும், கிடைத்தற்கரிய நன்மணியைக் கடலில் வீழ்த்தவர்போலப் பெருந் துன்பமடைந்தனர். மணிமேகலை தன் வைராக்கியத்தைச் சங்கத்தாரான அறவணவடிகளிடம் சென்றுகூறிப் பிக்ஷுணியாயமர்ந்த செய்தியை, அவ்வடிகளே அன்போடும் எமக்குக் கூறினார். இவ்வாறு, இளம்பருவத்தே மணிமேகலை தன் அழகிய கோலத்தை அழித்துத் துறவு பூண்டாளாதலின் நான் கதறியழலாயினேன்" என்று முன்னடந்த வரலாறுகளைத் தேவந்தி கூறிமுடித்தாள்.
பின்னர்ச் சாத்தனென்னுந் தெய்வம் திடுக்கென்றேறியதனால் ஆவேசங்கொண்டு, அத்தேவந்தி, கூந்தல்குலைந்து விழவும், புருவந்துடிக்கவும், செவ்வாய்மடித்துச் சிரிப்புத் தோன்றவும், மொழிதடுமாறி முகம்வியர்க்கவும், செங்கண் சிவக்கவும், கைகளையோச்சிக் கால்பெயர்த்தெழுந்து, பலருமின்னதென்று தெரியவாராத அறிவுமயக்கமுடையவளாய் நாவுலர்ந்து தெய்வம்பேசும் பேச்சுக்களைக் கூறிக்கொண்டு,செங்குட்டுவன் திருமுன்பிருந்த மாடலனைநோக்கி "மாடல! யான் பாசண்டச் சாத்தன். இப்போது இத் தேவந்தியின் மேல் ஆவேசித்துள்ளேன். பத்தினிக்கடவுளின் பிரதிஷ்டையைத் தரிசிக்கவேண்டி இங்குவந்துள்ள மகளிருள்ளே அரட்டன்செட்டியின் இரட்டைப்பெண்களும் ஆடகமாடத்துத் திருமால் கைங்கரியம்புரியும்[*] சேடக்குடும்பியின் இளம்பெண்ணும் ஈங்கிருக்கின்றனர். மங்கலாதேவியின் கோயிற் பக்கத்துள்ள மலையிடத்தே, மயிற்கல்லின் பிடர்தலையினின் றிழிகின்ற நீரால் நிரம்பும் பொய்கைகள் பலவற்றுள்ளே இடையிலிருப்பதும், சிறியஅழகிய கற்களோடு மாவைக் கரைத்தாலொத்துவிழும் நீருடையதுமாகிய சுனையொன்றிற் புகுந்து நீராடுவோர் பண்டைப்பிறப்பின் செய்திகளை அறிந்தோராவர் என்பதுபற்றி, அம்மங்கலாதேவி கோயிலின் வாயிலிலே நீ இருந்தபோது, அந்நீருள்ள கரகத்தை "இது நீ கொள்ளத்தக்க"தென்று நான் உன்பாற கொடுத்தேனன்றோ.
----
[*] சேடக்குடும்பி என்பதற்குத் திருவடிபிடிப்பான் என்று கூறுவர், அரும்பத-வுரையாசிரியர் (பக். 75). திருவடிபிடிப்பான் - அருச்சகனென்பது "நடுவிற்கோயிற் றிருவடிபிடிக்கும் ஸ்ரீதரபட்டனும்"என்னும் சாஸனப்பகுதியால் தெரிகின்றது.* ( South Indian Inscriptions, Vol. III. p.84.)
அந்நீர்க்கரகமும் இப்போது உன் கையின்கண்ணே உள்ளது. சந்திராதித்தர் உள்ளவளவும் அந்நீரின் கடவுட்டன்மை ஒழியாது. இக்கரகத்துநீரைச் செங்குட்டுவன் முன்னேயுள்ள இவ்விளம்பெண்கள் மூவர்மீதும் தெளிப்பாயாயின், இன்னோர் முற்பிறப்பினை அறிந்தோர் ஆவர்; இதனுண்மையை நீயே சோதித்துப் பார்." என்று கூறினாள்.
இங்ஙனம் தேவந்தி ஆவேசமுற்றுக்கூறிய வார்த்தைகளைக் கேட்டலும், செங்குட்டுவன் மிகவும் விம்மிதமுற்றுப் பக்கத்திருந்த மாடலன்முகத்தை நோக்கினான்.அப்போது அவ்வந்தணன் மகிழ்ச்சியுற்றவனாகிச் செங்குட்டுவனை வாழ்த்தி-"அரசே! இது கேட்பாயாக;மாலதியென்னும் பார்ப்பனமாது தன்மாற்றாள்குழந்தையை எடுத்துப் பால் கொடுக்கப் பழவினைவயத்தால் அப்பால்விக்கிக் குழந்தை கையிலேயிறக்கவும்,அதன்பொருட்டு ஆற்றாளாய்ப் பெருந்துன்பமடைந்து, பாசண்டச்சாத்தன் கோயில் சென்று அத்தெய்வத்தின்பால் வரங்கிடந்தாள். அவளது பெருர்ந்துயர்க்கிரங்கி அச்சாத்தன் குழந்தையுருக்கொண்டு வந்து ’அன்னாய்! யான் வந்தேன்;இனி உன் துயரொழிக" என்று கூறவும், அம்மாலதியும் மாற்றாந்தாயும் அதனை வளர்க்கக் காப்பியம் என்னும் பழங்குடி பொலிவடைய வளர்ந்து,பக்குவம் வந்ததும் அப்பிள்ளை இத்தேவந்தியை மணந்து இவளோடும் எட்டியாண்டு இல்லறம் நடத்திவந்தான். இவ்வாறு நிகழுங்கால், ஒருநாள், தன் மனைவியாகிய இவட்கு அச்சாத்தன் தன் தெய்வவுருவை வெளிப்படுத்திக் காட்டித் இங்ஙனமே, கண்ணகியின் பார்ப்பனத்தோழியான தேவந்தியின் வரலாற்றை, இளங்கோவடிகள் கனாத்திறமுரைத்த காதையினும் விரித்துக் கூறுவர்.
தன் கோட்டத்திற்கு வரும்படி இவளுக்குக் கட்டளையிட்டு மறைந்தனன்.மறைந்தவன், நான் மங்கலாதேவியின் கோட்டத்திலிருக்கும் போது, அந்தணனுருக்கொண்டு வந்துதோன்றி,உறியிலமைந்த இக்கரகத்தை என்கைக்கொடுத்து நிகழ்வதுகூறி,இதனைச் சேமமாக வைத்திருக்கும்படி எனக்குக் கூறிச்சென்றான். அங்ஙனஞ் சென்றதுமுதல் இதுவரை அவன் திரும்ப என்பால் வந்திலன்; அதனால் இக்கரகத்தைத் தவறவிடாது என்னுடன் கொண்டுவந்தேன். இவ்வாறாதலால், அச்சாத்தனென்னுந் தெய்வமே தன் பார்ப்பனியாகிய இத்தேவந்தியின்மேல் இப்போது ஆவேசித்து இக்கமண்டலநீரைத் தெளிக்கும்படி கூறினான். வேந்தர்வேந்தே! இங்குள்ள இச் சிறுமியர்மேல் இதனீரைத் தெளித்துச் சாத்தன்கூறிய அவ்வுண்மைகளை நாம் இனியறிவோம்" என்று அம் மாடலமறையோன் நிகழ்ந்த வரலாறுகளைக்கூறித் தான் கொணர்ந்த கமண்டலத்து நீரை, அங்கிருந்த பெண்கள் மூவர்மேலும் புரோக்ஷித்தனன். உடனே, அச்சிறுமிகட்குத் தங்கள் பழம் பிறப்புணர்ச்சி வந்தடையவும், அம்மூவருந் தனித்தனியாக அடியில்வருமாறு புலம்பலானார்கள்:-
(முதலாமவள்) "யான்பெற்ற மகளே! யாவரும் புகழத் தக்க உன்கணவன் கூடாவொழுக்கத்தனாய் உன்னை இகழ்ந்துநின்ற நிலைமைக்கு வருந்திநின்ற உன்தாயாகிய யானும் அறியாமலே அந்நியநாடுசென்று,உற்றாரொருவரும் இல்லாதவிடத்தில் தன்னந்தனியையாய்க் கணவனுடன் கடுந்துயரமடைந்தனையே" (என்றரற்றினாள்).
(இரண்டாமவள்) "என்னுடன் கூடவேயிருந்துவந்த உன்மனைவியும் என்மருகியுமாகிய கண்ணகியை அழைத்துக் கொண்டு, நடுநிசியில் பெருந்துயரத்தோடு சென்றனையே; இதனை நினைக்குந்தோறும் என்னெஞ்சம் வருத்தமிக்குப் புலம்புகின்றது; இத்துயரம் என்னாற் பொறுக்கக்கூடவில்லை;என் அருமை மகனே! என்பால் ஒருகால் வாராயோ"(என்று கதறினாள்).
(மூன்றாமவள்) "இளையோனே! நீ என்மனையிற் றங்கியிருந்த காலத்தே வையையாற்றில் நீராடச்சென்றிருந்த நான் திரும்பிவந்தபோது ஊராரால், ஐயோ! நீ கொலையுண்டதைக் கேட்டேன். கேட்டதற்கேற்ப,மனையில்வந்து நான் பார்த்தபோது நின்னைக் கண்டிலேன். எந்தாய்! என்னையறியாது எங்குச்சென்றனையோ, தெரிந்திலனே!" (என்றழுதாள்).
இவ்வாறாக அச்சிறுமிகள் மூவரும் முதியோர் பேசும் பேச்சால் செங்குட்டுவன் திருமுன்பே அக் கோட்டத்தில் அரற்றியழவும்,போந்தைமாலையணிந்த அவ் வேந்தர்பெருமான் வியப்புற்று மாடலன்முகத்தை மறுமுறையும் நோக்க,அரசனது குறிப்பறிந்து அவனையாசீர்வதித்து அம்மறையவன் கூறுவான்:- "அரசே! ஒருகாலத்தில், மதயானை கைக்கொண்டதனால் உயிர்போகும் நிலைமையிலிருந்த அந்தணனொருவனது பெருந்துயர் ஒழியும்படி அவனை அவ்யானையின் கையிலிருந்து தப்புவித்துத் தானே அதன் கையிற் புகுந்து, கொம்புகளின் வழியாக அதன் பிடர்த்தலையிலேறி வித்யாதரன்போல விளங்கித் தன்னருஞ்செயலைக் காட்டிய கோவலனது(இவனது இவ்வரிய செயலை அடைக்கலக்காதை (42-53)யிலும் இளங்கோவடிகள் கூறினர்.)
அன்புடை மனைவிமேல், இம் மூவரும் பெருங்காதல் வைத்தவராதலால்,விண்ணாடுசென்ற அவரோடு தாமுஞ் செல்லத்தக்க நல்லறத்தை இன்னோர் செய்யாதுபோயினர். அதனால், இவர்கள் கண்ணகியின்பாற் பேரன்புடையராய், அரட்டன்செட்டி மனைவிவயிற்றில் இரட்டைகளாகச் சேர்ந்து வஞ்சிமூதூரிற் பிறந்தனர்; ஆயர் முதுமகளாகிய மாதரி முற்பிறப்பிற் கண்ணகிமேல் வைத்த காதன் மிகுதியாலும்,திருமால்பொருட்டுக் குரவைக்கூத்தாடிய விசேடத்தாலும் சேஷசாயியாகிய அப்பெருமானது திருவடிபிடிப்பான்குலத்திற் சிறுமகளாகத் தோன்றினள். இதனால் நல்லறஞ்செய்தவர் பொன்னுலகடைதலும், ஒன்றிற் காதல் வைத்தோர் பூமியிற் பற்றுள்ளவிடத்தே பிறத்தலும், அறம்பாவங்களின் பயன் உடனே விளைதலும், பிறந்தவர் இறத்தலும்,இறந்தவர் பிறத்தலும் புதியனவன்றித் தொன்மைப்பட்டன என்பது நன்குவிளங்கும். இடபாரூடனாகிய சிவபிரான் திருவருளாலுதித்துப் புகழ்மிகுந்த மன்னவனாக நீ விளங்குதலால், அரசே! முற்பிறவியிற் செய்த தவப்பயன்களையும் பெரியோர் தரிசனங்களையும் கையகத்துப் பொருள்போற் கண்டு மகிழப்பெற்றாய்; ஊழியூழியாக இவ்வுலகங்காத்து வேந்தே!நீ வாழ்வாயாக" என்று கூறித், தம்முன் அழுது புலம்பிய அவ்விளம்பெண்கள் மூவரும் முற்பிறப்பில் முறையே கண்ணகியின் தாயும், கோவலன் தாயும், ஆய்ச்சியாகிய மாதரியுமாயிருந்த செய்திகளைச் செங்குட்டுவனுக்குத் தெளிய மாடலன் விளக்கினான்.
இவற்றைக் கேட்டுப் பெரிதும் வியப்புற்ற சேரர்பெருமான்,பாண்டிநாட்டுத் தலைநகரான கூடன்மாநகரம் எரியுண்ணும்படி தன்முலைமுகத்தைத் திருகியெறிந்த பத்தினியாகிய கண்ணகியின் கோயில்படித்தரங்களுக்கு வேண்டிய பூமிகளளித்து நித்யோற்சவம் நிகழ்த்தி,ஆராதனை அத்தேவந்தியால் நடந்துவரும்படி நியமித்து, அப் பத்தினிக்கடவுளை மும்முறை பிரதக்ஷிணஞ்செய்து வணங்கிநின்றான்.இங்ஙனம் இவனிற்க,கனகவிசயரென்னும் ஆரியவேந்தரும், பண்டே வஞ்சியிற் சிறைப்பட்டு விடுபட்ட மன்னரும், குடகநாடாளும் கொங்கிளங் கோசரும், மாளுவ வேந்தரும், கடல்சூழ்ந்த இலங்காதிபனான கயவாகு வேந்தனும் செங்குட்டுவன் முன்னர் அப் பத்தினியை வணங்கினவர்களாய் "தேவீ! எங்கள் நாட்டிற்கும் எழுந்தருளிவந்து, சேரர் பெருமான் செய்த பிரதிக்ஷ்டையிற்போலப் பிரஸந்நையாகி எங்கட்கும் அருள்புரிய வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.இங்ஙனம் அவர்கள் வேண்டிநின்றபோது, "தந்தேன்,வரம்" என்று ஒரு தெய்வவாக்கு ஆங்கு யாவருங்கேட்ப எழுந்தது.அது கேட்டுச் செங்குட்டுவனும் ஏனையரசர்களும் சேனைகளும் வியப்புற்று, வீட்டுலகத்தையே நேரிற்கண்டவர்போல ஆரவாரித் தானந்தித்தார்கள். பின்னர், அரசரெல்லாம் தன்னடி வணங்கியேத்த,தத்துவஞானியாகிய மாடலனுடன் சேர்ந்து, அப்பத்தினிக் கோட்டத்து யாகசாலையினுள்ளே சேரன்-செங்குட்டுவன் பிரவேசிப்பானாயினன்.இங்ஙனம் அரசன் சென்றபின் யானும் (* இளங்கோவடிகள் தம் வரலாறுபற்றிக் கூறுங் கூற்று) ஆங்குச் செல்லவெழுந்தேன்; அப் பத்தினிக்கடவுள் தேவந்தியென்னும் பார்ப்பனிமேல் ஆவேசித்தவளாகி என் முன்னர்த் தோன்றி "மூதூராகிய வஞ்சிமாநகரத்தே பேரோலக்க மண்டபத்தில் உந்தையாகிய சேரலாதனோடு நீ சேர்ந்திருந்தகாலையில், நிமித்திகனொருவன் வந்து நின்னைப்பார்த்து, அரசு வீற்றிருத்தற்குரிய இலக்கணம் நினக்கேயுண்டென்று கூற, "என் தமையனான செங்குட்டுவனிருப்ப நீ முறைமைகெடச் சொன்னாய்" என்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கி, இராச்சியபாரத்தை அகலத்தள்ளிக் குணவாயிற் கோட்டத்தில் துறந்த முனிவனாய் வசித்து,தமையனான செங்குட்டுவனது ஆட்சியுரிமைக்குக் கேடுவாராதபடி மோக்ஷ சாம்ராஜ்யத்தை ஆளநிற்கும் வேந்தனல்லையோ, நீ" என்று, முன்னிகழ்ந்ததும் இனி நிகழ்வதுமாகிய என்னுடைய வரலாறுகளையும் உரைத்தருளினாள். இங்ஙனமுரைத்த இமையோரிளங்கொடியாகிய கண்ணகியின் பெருமைதங்கிய இச் சரிதத்தை விளங்கக்கேட்ட செல்வமிக்க நல்லோர்களே!
"பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
ஊனூண் டுறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோ ரவைக்கள மகலா தணுகுமின்
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை யஞ்சுமின் பிழையுயி ரோம்புமின்
அறமனை காமி னல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினி லொழிமின்
இளமயுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென."
மேற்கூறியவாறு, கண்ணகியின்பொருட்டு இமயத்திற் கல்லெடுக்கச் சென்ற செங்குட்டுவன், வடநாடு சென்று தன் பகைவரைப் போரில் வென்று கல்லெடுப்பித்து, அதனைக் கங்கைநீராட்டி இரண்டேமுக்கால் வருஷங்கட்குப்பின் தன்னூர் புகுந்து பத்தினியைப் பிரதிஷ்டைசெய்த வரலாறுகளைச் செங்குட்டுவன் சகோதரராகிய இளங்கோவடிகளே இனிமையும் கம்பீரமுமான தம் வாக்காற் பாடி, அப்பத்தினிக் கடவுள் தம்மை நோக்கிக் கூறிய வாக்கியங்களோடும் நூலைமுடித்திருத்தல் அறியத்தக்கது. இப்பத்தினியின் பிரதிஷ்டாகாலத்தில் வந்திருந்த வேற்றுநாட்டரசர் சிலரும் சோழபாண்டியரும், செங்குட்டுவன் செய்தவாறே, கண்ணகிக்குத் தத்தம் நகரங்களில் கோயிலெடுத்துத் திருவிழா நடத்தியதுமுதலிய செய்திகளை அவ்வடிகள் சிலப்பதிகார முகப்பில் உரைபெறுகட்டுரை என்னும் பகுதியிற் கூறியிருக்கின்றனர்;அது வருமாறு:-
( 1 ) "அன்றுதொட்டுப் பாண்டியநாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந்தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது.
( 2 ) "அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழைதொழிலென்றும் மாறாததாயிற்று.
( 3 )"அது கேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகுவென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டமுந்துறுத்தாங்கு அரந்தைகெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்களகவை யினாங்கோர் பாடிவிழாக்கோள் பன்முறையெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையாவிளையு ணாடாயிற்று.
(4) "அது கேட்டுச் சோழன்-பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக்கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக்கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே"-எனக் காண்க.