செங்குட்டுவன் சமயநிலை

சேரன்-செங்குட்டுவன் கொண்டொழுகியமதம் பொதுவாக வைதிக சமயமேயாயினும், சிறப்பாக இவனைச் சைவாபிமானவமுள்ளவன் என்று சொல்லுதல் தகும். இவ்வேந்தன் சிவபெருமான் திருவருளால் உதித்தவனென்றும், அப்பெருமானருள் கொண்டு விளங்கியவனென்றும் இவன் சகோதரரே கூறுவர்.
"செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்" (சிலப்.26.98-9.)
"ஆனே றுயர்த்தோ னருளில் விளங்க
மாநிலம் விளக்கிய மன்னவன்" (சிலப்.80.141-2.)
இவனது சைவாபிமானத்தை அடியில்வரும் மற்றொரு செய்தியும் விளக்குவதாம். வஞ்சியினின்று வடநாட்டியாத்திரைக்குப் புறப்படுங்காலத்தே, இவ் வேந்தன், சிவபிரான்
பாதுகைகளை வணங்கிவாங்கிச் சிரசில் தரித்துக்கொண்டு தன் அரசுவாவின்மேல் ஆரோகணித்தனனென்றும்,அப்போது ஆடகமாடமென்னுங் கோயிலிற் பள்ளிகொண்ட திருமால் பிரசாதத்துடன் சிலர் வந்து இவனை வாழ்த்திநிற்க, தன்முடியிற் சிவபிரான் திருவடிநிலைகளைத் தரித்திருந்தமையின்,அத் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத்தில் தாங்கிக்கொண்டு சென்றனனென்றும் இளங்கோவடிகள் குறிக்கின்றார். இவற்றை,
"நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையோடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு" (சிலப்.26:62_67)
"கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்
குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென
ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்
தாங்கினனாகி-(சிலப்.26:60-67)
என்னும் அடிகளால் அறியலாம். இவற்றால்,சிவபிரான்பால் இவ் வரசனுக்கிருந்த பத்தி விளங்கத்தக்கது. ஆயினும்,பிற்காலத்தரசர் சிலர்போல மதாந்தரங்களில் வெறுப்புக் காட்டுதலின்றித் தன்காலத்து வழங்கிய எல்லாச்சமயங்களிலும் அன்புவைத்து ஆதரித்து வந்தவன் செங்குட்டுவனென்றே தெரிகின்றது.
இவனாட்சிக் காலத்திலே, வஞ்சிமூதூரில், வைதிகரும் சைநரும் ஆசீவகரும் (ஆசீவகம் - சமணசமயத்தின் பாகுபாடுகளுள் ஒன்று; இம்மதத்தினர்க்குத் தெய்வம் மற்கலியென்றும், நூல் நவகதிரென்றும் கூறுவர். (மணிமே. 27: 112 அரும்பதவுரை.)) பௌத்தரும் தம்மிற் கலந்து வாழ்ந்து வந்தனர். மணிமேகலை, அந்நகர்க்குச் செல்லநேர்ந்தபோது,சமயவாதியரோடெல்லாம் அவள் அளவளாவினள் என்பதனால் இதனையறியலாம். இஃது என்? செங்குட்டுவனுக்கு உடன்பிறந்தவரான இளங்கோவடிகள் அநுஷ்டித்தமதம் சைநமேயாதல் வேண்டுமென்று,அவரது வாக்கின்போக்கால் தெரிகின்றது. செங்குட்டுவனுக்கும் அவன் சகோதரர்க்கும் மிகுந்த நட்பினரான கூலவாணிகன் சாத்தனார் கொள்கையோ, பௌத்தமதமென்பதில் ஐயமில்லை.இனிச் செங்குட்டுவனால் தெய்வமாக வணங்கப்பெற்ற கண்ணகியுங்கோவலனுங் கொண்டிருந்த மதமும் அப்பௌத்தமேயாமென்பது, மணிமேகலையை நோக்கிக் கண்ணகிக்கடவுள் தன்னிகழ்ச்சிகூறிய வாக்கியங்களால் நன்கறியப்படும். (மணிமே. 29: 42-61.)இங்ஙனம், பௌத்தச்சார்பினரான கோவலன் கண்ணகிகளின் தந்தையர் கொண்ட சமயங்களோ, முறையே பௌத்தமும் ஆசீவகமும் ஆகும்.(சிலப். 27: 90-100.) இவற்றால்,செங்குட்டுவன் காலத்திருந்த தென்னாட்டுச் சமயநிலையை நோக்குமிடத்து, அஃது இக்காலத்துப்போற் பரம்பரையநுஷ்டானத்துக் குட்படாது அவ்வவர் அறிந்துகடைப்பிடித்த கொள்கைமாத்திரையாகவே இருந்ததென்பது விளக்கமாம். தந்தைமதம் மகனுக்கும் தம்பிமதம் தமையனுக்கும் உரியதாக அக்காலத்திருந்ததில்லை. ஆயினும், உறவுமுறையிலும் நீதிமுறையிலும், தம்முளிருந்த கொள்கை வேறுபாடுபற்றி அவர்கள் ஒருகாலும் பிரிந்திருந்தவரல்லர். அக்காலவியல்பு அங்ஙனமாதலின்,சேரன் -செங்குட்டுவன் தன்னைச்சார்ந்த அந்நியமதத்தவரை அபிமானித்ததும் ஆதரித்ததும் வியப்புடையனவல்ல எனலாம். இவ்வாறே, பிற்காலத்துத் தமிழரசரும் மதாந்தரங்களை அபிமானித்திருக்குஞ் செய்தி சாஸனங்களால் அறிந்தது.(இராஜராஜசோழன் 1, முதலியோர் சைவாபிமான மிக்கவர்களாயிலும், இவ்வாறே சைநபௌத்த மதங்களை அபிமானித்து வந்தவர்கள் என்பது அவர்கள் சாஸனங்களால் அறியப்படுகின்றது.(கோபிநாதராயரவர்களெழுதிய சோழவமிச சரித்திரம். பக். 17.)) இனிச் செங்குட்டுவன் தன் வைதிகச்சார்புக்கேற்ப, பிராமணரைப் பெரிதும் ஆதரித்து, அவர்கள் கூறும் உறுதிமொழிப்படியே ஒழுகி வந்தவனென்பது,மாடலனென்ற மறையவனிடம் அவன் காட்டிப்போந்த கௌரவச் செய்கைகளாக முன்பறிந்தவற்றால் விளக்கமாகும். இவன் தமிழ்வேந்தனாயினும் க்ஷத்திரிய வருணத்தவனாதலால், அவ் வகுப்பினர்க்குரிய யாகாதிகளை அந்தணரைக்கொண்டு செய்துவந்ததும்(சிலப். 28: 175-194.) பிராமணரையும் அவர் தர்மங்களையும் பெரிதும் போற்றி வந்தமையும்(சிலப். 26: 247-250.) அறியத்தக்கன.