சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும்

முன்னுரை: பொறுப்புள்ள பதவியில் இருக்கும் எந்த நூலாசிரியனும் தனது நூலை இயன்றவரை உண்மைக்கு மாறாக வரையத் தலைப்படான்; பொறுப்பற்றவன் வேண்டும் விகற்பங்களைக் கூறி நூலைப் பெரிதாக்கிப் பலவகை அபூத கற்பனைகளைப் புகுத்தி விடுவான். சேக்கிழார் பொறுப்புள்ள தலைமை அமைச்சர் பதவியில் இருந்தமையின், பொறுப்புணர்ச்சியோடு நாயன்மார் வரலாறுகளை எழுத விரும்பினார். அதற்றான் தமிழகம் முழுவதும் சுற்றிக் குறிப்புகள் திரட்டினார். அவர் அமைச்சராக இருந்தமையின், அரசியல் அறிவுடையவராக இருந்தவர் என்று கோடல் முறையே ஆகும். அவர் அவ்வரசியற் கண்கொண்டு 63 நாயன்மாரைக் கவனித்ததில், கிழ்வரும் விவரங்களைக் கண்டனர். 63 நாயன்மாருள்.
1. சேரர் ஒருவர் - சேரமான் பெருமாள் நாயனார்;
2. சோழர் இருவர் - (1) கோச்செங்கட் சோழர், (2) புகழ்ச்சோழர்;
3. பாண்டியர் ஒருவர் - நின்றசீர் நெடுமாற நாயனார்;
4. மங்கையர்க்கரசியார் - சோழன் மகளும் பாண்டியன் மனைவியுமாவார்;
5. பல்லவர் இருவர் - (1) ஐயடிகள் காடவர்கோன் (2) கழற்சிங்கர்;
6. களப்பிரர் ஒருவர் - கூற்றுவ நாயனார்;
7. சிற்றரசர் நால்வர் - (1) திருக்கோவலூரைத் தலைநகராகப் பெற்ற மலைநாட்டை யாண்ட மெய்ப்பொருள் நாயனார், (2) திருநாவலூரைத் தலைநகராகக் கொண்ட திருமுனைப்பாடி நாட்டையாண்ட நரசிங்க முனையரையர், (3) கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்ட கோனாட்டை (புதுக்கோட்டை சீமையை) ஆண்ட இடங்கழி நாயனார், (4) சோழநாட்டின் உட்பகுதிகளுள் ஒன்றான மிழலை நாட்டை ஆண்ட குரும்பநாயனார்;
8. பல்லவர் படைத்தலைவர் - பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர்.
9. சோழர் படைத்தலைவர் மூவர் - (1) கோட்புலி நாயனார், (2) மானக்கஞ்சாற நாயனார், (3) கலிக்காம நாயனார்;
10. பாண்டிய அமைச்சர் – குலச்சிறையார்;
11. களப்பிரர் குழப்ப காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மூர்த்தி நாயனார் என்பவராவர்.
இவ்வாறு 63 நாயன்மாருள் அரசியல் தொடர்பு கொண்டோர் 18 பேர் ஆவர். இவர்கள் வரலாறுகளை இயன்றவரை அவ்வம் மரபினரைக் கேட்டுக் குறிப்புகள் தொகுத்தல் நல்லதன்றோ? சேக்கிழார் இவ்வரசியல் கண்கொண்டு ஏனைய நாயன்மார் வரலாறுகளை ஆராய்ந்தபொழுது மேலும் பல புதிய அரசர்களைப்பற்றி அறியவேண்டியவர் ஆனார். அவர்கள் -
1. அப்பரது வரலாற்றிற் குறிக்கப்பட்ட மகேந்திரவர்மன் என்ற பல்லவன்;
2. பூசலார் புராணத்திற் கூறப்பட்ட இராசசிங்கன் என்ற பல்லவன்;
3. தண்டியடிகள் வரலாற்றிற் சொல்லப்பட்ட சோழ அரசன்;
4. அப்பரைக் கண்டு லிங்கத்தை மறைத்த சமணரைத் தண்டித்து லிங்கத்தை வெளிப்படுத்திய சோழ அரசன்;
5. திருப்பனந்தாளில் யானைகளைக் கொண்டு லிங்கத்தை நிமிர்த்த முயன்ற-குங்கிலியக் கலயரைப் பணிந்து பாராட்டிய சோழ அரசன்;
6. சுந்தரர் காலத்தில் பாண்டியனுடன் இருந்த அவன் மருமகனான சோழ அரசன் என்பவர் ஆவர்.
இங்ஙனம் அரசியல் தொடர்புடையார் பலருடைய உண்மை வரலாறுகளை அறியவேண்டிய பொறுப்பு சேக்கிழாரைச் சேர்ந்தது. இவர்களைப் பற்றித் தம் மனம் போனவாறு அவர் நூல் பாடியிருப்பின்,இவர்களைச் சேர்ந்த - சேக்கிழார் காலத்தில் இருந்த அரச மரபினர்,அவர் நூலை மதிக்க வழியில்லை அல்லவா? ஆதலின், அந்தந்த அரச மரபினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையில் தமது பெருநூல், உண்மைச் செய்திகள் பொருந்தியதாக இருத்தல் வேண்டும் என்ற கவலை, பொறுப்புள்ள சேக்கிழார்க்கு உண்டாகி இருத்தல் வேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை. இனி, இவ்வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார்களைப் பற்றியும், அரசர்களைப் பற்றியும் சேக்கிழார் கூறும் குறிப்புகள் இன்றளவும் நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுச் செய்தி கட்குப் பொருந்தியனவாக உள்ளனவா என்பதையும், இப்பெரும் புலவர் எந்தச் சான்றுகள் கொண்டு இவர்கள் வரலாறுகளைப் பாடியிருத்தல் கூடும் என்பதையும் ஒருவாறு ஆராய்வோம்.
மூர்த்தி நாயனார்: "இவர் காலத்திற்றான் வடுகக் கருநாடர்வேந்தன் ஒருவன் கடல்போன்ற சேனையோடு வந்து பாண்டியனை விரட்டி நாட்டைக் கைக்கொண்டான். அவன் சைவன் அல்லன். ஆதலின், சிவன் கோவில்கட்குத் தீங்கு செய்தான்; நாளும் சொக்கநாதர் கோவிலுக்குச் சந்தனம் அரைத்து உதவி வந்த மூர்த்தி நாயனாருக்குச் சந்தனம் கிடைக்காதவாறு செய்தான்" என்பது சேக்கிழார் குறிப்பாகும்.
இங்ஙனம் பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் கைப்பற்றி ஆண்டவன் களப்பிரகுல காவலனான "அச்சுத விக்கந்தன்" என்பது தமிழ் நாவலர் சரிதை, புத்ததத்தர் கூற்று, வேள்விக்குடிப் பட்டயம் இவற்றால் அறியப்படும் உண்மையாகும். இக்களப்பிரர் காலத்தில், பல நூற்றாண்டுகட்கு முன்னிருந்த பாண்டியனால் விடப்பட்ட பிரம்மதேய உரிமை அழிக்கப்பட்டு விட்டது என்பதை வேள்விக்குடிப் பட்டயத்தால் அறியலாம். மேலும், இக்களப்பிரர் ஆட்சியிற்றான் சமண சங்கம் பாண்டிய நாட்டில் தலைநிமிர்ந்து வாழ்ந்தது. எனவே, பாண்டி நாடாண்ட களப்பிரர் சைவ விரோதிகள் - வைதிக விரோதிகள் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்கமாகும். விளக்கமாகவே, மூர்த்தியார் சிவப்பணி செய்யாவாறு களப்பிர அரசன் இடையூறு விளைத்தான் என்று சேக்கிழார் கூறுதல் வரலாற்றுச் செய்திக்குப் பொருத்தமான தாகவே காணப்படல் காண்க. மூர்த்தியார் காலம் அச்சுத விக்கந்தன் காலமான (ஏறத்தாழ) கி.பி. 450 என்னலாம்.
கோச்செங்கட் சோழன்: இவன் பொய்கையார் என்ற புலவராற் பாராட்டப் பெற்றவன். அப்பர், சம்பந்தர், சுந்தரரால் ஏத்தெடுக்கப் பெற்றவன். பிறகு திருமங்கையாழ்வாராற் பலபடப் பாராட்டப்பெற்றவன். இவன் சோழராட்சிக்கு உட்பட்ட தொண்டை நாட்டையும் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட சோணாட்டையும் வென்ற பெருவீரன் என்று சொல்லாம். இவன் குடகொங்கர், சேரர் முதலியோரையும் வென்றவன். இப்பேரரசன், பல்லவராலும் களப்பிரராலும் சைவ சமய ஆதரவு குறைந்து வருதலைக் கண்டு, எழுபதுக்கு மேற்பட்ட சிவன் கோவில்களைத் தமிழ் நாட்டிற் கட்டுவித்த பெரும் பக்தன். தில்லையைச் சிறப்புடைய சிவத்தலமாக அமைத்த சிறப்புடையான். தில்லைவாழ் அந்தணர்க்கு மாடங்கள் பல சமைத்தவன். இவன், வரலாற்றில் இடம் பெற்ற சோழ வேந்தன். இவனைப்பற்றித் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமையாகப் பேசுகின்றன. சோழர் காலத்து நூல்கள் யாவும் சிறப்பிக்கின்றன. இத்தகைய பேரரசனைப் பற்றிச் சேக்கிழார் கூறும் வரலாற்றுக் குறிப்புகளில் மாறானவை என்று ஒதுக்கத் தக்கவை இல்லை என்னலாம்.
பிற சோழ மன்னர்கள்: புகழ்ச்சோழர் முதலிய சோழ மன்னர்களைப்பற்றி அறியத்தக்க இலக்கியமோ, பிற சான்றுகளோ இன்று கிடைக்குமாறில்லை. ஆயின், இவர்களைப்பற்றிச் சேக்கிழார் கூறும் விவரங்களோ பலவாகும். சோழர் அமைச்சரான அவர், சோழ அரசர் செய்திகளை அச் சோழர் மரபினரைக் கேட்டே எழுதியிருப்பார் எனக் கொள்ளலே நேர்மையான முடிபாகும்.
ஐயடிகள் காடவர்கோன்: "இவர் வடமொழி-தென்மொழிகளில் சிறந்த புலவர்; வடபுலம் கைக் கொண்டவர். தம் மகனிடம் அரசை ஒப்புவித்துச் சிவத்தல யாத்திரை செய்தவர்; ஒவ்வொரு தலம் பற்றியும் ஒரு வெண்பாப் பாடினார்" என்பது சேக்கிழார் கூறும் செய்தியாகும்.
இக்குறிப்பு கல்வெட்டைக் கொண்டு மெய்ப்பிக்கக் கூடவில்லை. சேக்கிழார் காலத்தில் இக் காடவர்கோன் மரபில் வந்த பல்லவன்-மோகன் ஆட்கொல்லி என்பவன். அவன் சோழப் பேரரசில் உயர் அலுவலாளனாக இருந்தான். அவனுடைய முன்னோரும் சோழப் பேரரசில் பங்குகொண்டு இருந்தனர். ஆதலின், அவனது மரபினருள் முன்னோரான ஐயடிகள் வரலாற்றுக் குறிப்புகள் அவன் வழியாகச் சேக்கிழார் அறிந்திருத்தல் கூடும், ஐயடிகள் பாடிய க்ஷேத்திர வெண்பா, சேக்கிழார் காலத்தில் முழுவதும் இருந்திருக்கலாம். இதன் பாயிரத்தில் ஐயடிகள் வரலாறு சுட்டப் பெற்றிருக்கலாம். இவ்விரண்டில் ஒன்றன் மூலமாகவே சேக்கிழார் ஐயடிகளைப்பற்றிய குறிப்புகளைத் தொகுத்தார் எனக் கோடலே பொருத்தமானது.
மகேந்திரவர்மன்: "இவன் அப்பர் காலத்துப் பல்லவப் பேரரசன். இவன் முதலிற் சமணனாக இருந்தான் பிறகு சைவனாக மாறினான். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த வரலாற்றுப்புகழ்பெற்ற சமணர் கோவிலையும் மடத்தையும் அழித்தான். அந்தச் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணபர ஈச்வரம் கட்டினான்" என்பது சேக்கிழார் கூற்று.
"குணபரன்" என்பது பல்லவ மகேந்திரவர்மனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்று. அவன், சமணனாக இருந்து சைவனானதை அவன் வெட்டுவித்த திரிசிரபுரம் மலைக்கோவில் கல்வெட்டே உணர்த்துகிறது. திருப்பாதிரிப்புலியூருக்கு அண்மையில் திருவந்திப்புரம் செல்லும் பெரிய சாலை ஒரம் இடிந்து கிடக்கும் கட்டடச் சிதைவுகளும் அங்குள்ள சமண விக்கிரகமும் புகழ்பெற்ற பாடலிபுரத்துச் சமண மடத்தை நினைப்பூட்டுவனவாகும். திருவதிகையில் - பண்ணுருட்டியிலிருந்து பாதிரிப்புலியூர் செல்லும் பெரிய சாலையில் திருவதிகைக் காவல் நிலையத்திற்கு எதிரில் பழுதுபட்டுக் கிடக்கும் சிவன் கோவிலே குணபர ஈச்வரம் என்பது. மண்மேடிட்டுப் புதையுண்டு கிடந்த அக்கோவில் 30 ஆண்டுகட்கு முன்புதான் கண்டறியப்பட்டு, இன்றைய நிலையிற் காட்சி அளிக்கின்றது.
சிறுத்தொண்டர்: (1) "இவர் மகாமாத்திரர் மரபில் வந்தவர்; வைத்தியக்கலை, வடநூற்கலை, படைக்கலப் பயிற்சி முதலியவற்றிற் சிறந்த புலமை உடையவர். (2) தம் மன்னற்காகப் பல போர்களில் ஈடுபட்டவர். (3) தம் அரசன் பொருட்டு வாதாபியைத் தாக்கி அழித்தவர்.(4) திருச்செங்காட்டங்குடியில் கணபதீச் சரத்துக் கடவுளுக்குத் தொண்டு செய்துவந்தவர்" என்பது சேக்கிழார் கூறும் குறிப்பாகும்.
1. "மகாமாத்திரர் என்பவர் அரசியல் மந்திராலோசனைச் சபையினர். அரசர் இவர்களைக் கலந்தே யுத்த யாத்திரை செய்வதும் வேறு செயல்களிற் புகுவதும் வழக்கம்" என்பது சாணக்கியர் பொருள் நூல் புகலும் விளக்கமாகும். "இம்மகாமாத்திரர் பல கலைகளில் வல்லவராகவும் சிறந்த போர் வீரராகவும் நற்குடிப் பிறப்புடையவராகவும் இருத்தல் வேண்டும்" என்பது மநுதர்ம சாத்திரக் கூற்றாகும். சேக்கிழார் கூறும் சிறுத்தொண்டர் இலக்கணம், சாணக்கியர் பொருள் நூலுக்கும் மநுவின் விதிக்கும் ஒத்திருத்தல் கண்டு மகிழத்தக்கது.
2. வாதாபியைத் தூளாக்கிச் சாளுக்கியரை ஒடுக்கிப் பதின்மூன்று ஆண்டுகள் தன் ஆட்சியில் வாதாபியை வைத்துக்கொண்ட புகழுடையவன், முன் சொன்ன மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் ஆவன். எனவே, அவனிடமே சிறுத்தொண்டர் சேனைத் தலைவராக இருத்தனராதல் வேண்டும். நரசிம்ம பல்லவன் வாதாபியைப் பிடித்த காலம் ஏறத்தாழ கி.பி. 642. அவனது ஆட்சியில் அத்தொன்னகரம் இருந்த காலம் கி.பி. 642-655 ஆகும் என்பது வரலாற்று ஆசிரியர் கருத்தாகும். இங்ஙனம் பல்லவரால் தமது பண்டை நகரம் பாழானதால், தங்கள் பெருஞ் சிறப்புக்கு இழுக்கு ஏற்பட்டது என்று சாளுக்கியரே புலம்பினர் என்பதற்கு அவர்தம் பட்டயங்களே போதிய சான்றாகும். இங்ஙனம் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கொண்டே அறியத் தக்க வாதாபிப் படையெடுப்பைச் சேக்கிழார் பெருமான் சிறுத்தொண்டர் வரலாற்றிற் செருகியுள்ளனர் எனின் அவரது வரலாற்றுப் புலமையையும் நுண்ணிய அறிவையும் என்னெனக் கூறி வியப்பது!
3. கணபதீச்சரம் என்பது திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீசர் கோவிலுக்குள் சிறிய கோவிலாக இருக்கின்றது. இதன் சுவர்களிற்றாம் சோழர் காலத்துக் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இக்கோவிலைத் தன் அகத்தே பெற்ற உத்தராபதீசர் கோவிற் சுவர்களில் சோழர் கல்வெட்டுகள் இல்லை. எனவே, சிறுத்தொண்டர் காலத்தில் இன்றைய பெரிய கோவில் இல்லை என்னலாம். முதல் இராசராசன் காலம் முதல் கணபதீச்சரம் சிறப்புறத் தொடங்கியது. அங்குச் சித்திரை விழா ஆண்டுதோறும் கொண்டாடப் பட்டது. அப்போது அடியாரை உண்பிக்கச் "சிறுத்தொண்ட நம்பி மடம்" கட்டப்பட்டது. "சிறுத்தொண்டர், "சிராளதேவர்" என்ற பெயர்கொண்ட சிவபிரானுக்கும் வீரபத்திரர்க்கும் தொண்டு செய்து வந்தவர்," என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. உத்தராபதியார் சிறுத்தொண்டர் மாளிகையில் உபசரிக்கபட்டார்; படவே, அம்மாளிகை இருந்த இடமே நாளடைவில் உத்தராபதீசர் கோவிலாக மாறி இருக்கலாம்."சிறுத்தொண்டர் வரலாற்றில் உள்ள தெய்வீ*கச் செயல் ஒழிந்த ஏனைய அனைத்தும் இங்ஙனம் கல்வெட்டுச் சான்று கொண்டனவாகக் காண்கின்றன. [1]
---
நெல்வேலி வென்ற நெடுமாறன்: "சம்பந்தரால் சைவ மதம் புகுந்த நெடுமாறன் நாட்டை நன்னெறியில் ஆண்டுவருங்கால், வடபுலத்துப் பெருமன்னன் ஒருவன் கடல் போன்ற தானையுடன் வந்து பாண்டி நாட்டை எதிர்த்தான். இருதிறத்தார் படைகளும் திறம்படப் போரிட்டன. யானைகள் யானைகளுடன் போரிட்டன. குதிரைகள் குதிரைகளுடன் போரிட்டன. வீரர் வீரருடன் போரிட்டனர். வடபுலத்து முதல் மன்னன் படை நெல்வேலியில் சரிந்தது. பாண்டியன் வெற்றிபெற்றான். இச்செய்தி நெடுமாறன் புராணத்திற் சேக்கிழார் குறித்துள்ளார். இது சம்பந்தமான வரலாற்று உண்மை யாதென இங்குக் காண்போம்.
பல்லவர்-சாளுக்கியர் போர் I:
சிறுத்தொண்டர் வாதாபியை வென்றபொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்து அப்போரில் தோற்றவன் இரண்டாம் புலிகேசி என்பவன். அவன் மகன் முதலாம் விக்ரமாதித்தன் என்பவன். அவன் பல்லவனைப் பழிக்குப் பழி வாங்கச் சமயம் பார்த்திருந்தன். அவன் காலம் கி.பி. 654 - 680. அப்பொழுது பல்லவப் பேரரசனாக இருந்தவன் பரமேச்வரவர்மன் (கி.பி. 668-685). அதே காலத்திற் பாண்டிய நாட்டை ஆண்டவன் நெடுமாறன் (கி.பி. 640-680). முதல் விக்கிரமாதித்ன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்துக் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பரமேச்வரவர்மன் ஆந்திரநாட்டை நோக்கி ஓடிவிட்டான். தன்னை எதிர்ப்பவர் இல்லாததால், சாளுக்கியன் பல்லவப் பெருநாட்டின் தென் எல்லையான உறையூர் வரை சென்று அங்குத் தங்கி இருந்தான். அவன் அங்கிருந்த ஆண்டு கி.பி. 674 ஆகும்.
சாளுக்கியர் - பாண்டியர் போர்:
பல்லவ நாட்டைக்கைப்பற்றி அதன் தென் எல்லையில் - பாண்டிய நாட்டின் வட எல்லையில் தங்கிய சாளுக்கியன், தெற்கே இருந்த பாண்டிய நாட்டையும் கைப்பற்ற எண்ணினான் போலும்! அவனது கடல் போன்ற படை பாண்டிய நாட்டைத் தாக்கியது. சிறந்த சிவபக்தனும் பெருவீரனுமான நெடுமாறன் தன் படைகளுடன் சாளுக்கியனை எதிர்த்தான். இருதிறத்தார்க்கும் கொடிய போர் நடந்தது. போர் நடந்த இடம் [2] நெல்வேலி என்பது. பல நாட்களாகப் பல இடங்களில் பல்லவப் படைகளுடன் போர் நடத்திய சாளுக்கியர் படை, பாண்டியர் படைக்கு ஆற்றாது முறிந்தது. இறுதியில் பாண்டியன் வெற்றி பெற்றான்.
------
[2] சோழ மண்டலத்துத் தென்கரைப்பனையூர் நாட்டு நெல்வேலி *நாட்டு நெல்வேலி - 276 of 1916
பல்லவர் - சாளுக்கியர் போர் II:
பாண்டியர் - சாளுக்கியர் போர் நடந்து கொண்டிருந்த பொழுதோ அல்லது பாண்டியர் வெற்றிக்குப் பிறகோ அறியோம்; வடக்கு நோக்கி ஓடிய பல்லவன் பெருஞ் சேனையைத் திரட்டிக் கொண்டு வந்து சாளுக்கியனைத் திடீரெனத் தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. வெற்றி மகள் எவர் பக்கம் சேருவாளோ என்று ஐயுறத்தக்கவாறு ஒருகால் பல்லவர்க்கு வெற்றி, மற்றொருகால் சாளுக்கியர்க்கு வெற்றி கிடைத்து வந்தது. இறுதியில் பெருவள நல்லூர் என்ற இடத்தில் பல்லவன் வெற்றி பெற்றான். சாளுக்கியன் முற்றிலும் முறியடிக்கப்பட்டுக் கந்தையாடையுடன் தப்பி ஒடினான் என்று பரமேச்வரவர்மனது கூரம் பட்டயம் அறிவிக்கின்றது.
நெல்வேலிப் போரில் நெடுமாறனுக்குத் துணையாக அவன் மகன் கோச்சடையன் பங்கெடுத்துக் கொண்டு "ரண ரசிகன்" என்ற விக்கிரமாதித்தனை வென்றதால், தன்னை "ரண தீரன்" என்று அழைத்துக்கொண்டான். இங்ஙனமே பரமேச்வரனுக்குத் துணை சென்ற அவன் மகனான இராச சிங்கன், தன்னை "ரண ஜயன்" என்று அழைத்துக் கொண்டான்.
நெல்வேலிப் போரின் முக்கியத்துவம். விக்கிரமாதித்தன் முதலில் பரமேச்வரனைத் தோற்கடித்து அவனது பெருநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்; தெற்கே இருந்த பாண்டிய நாடும் அவன் படைக்கு இரையாகி இருக்குமாயின், விந்தமலை முதல் கன்னிமுனை வரை சாளுக்கியர் பேரரசு நிலைபெற்றுவிடும். சாளுக்கியன் நெடுமாறனைப்போல அழுத்தமான சைவன் என்று கூற முடியாது. ஆதலின் சாளுக்கியன் வெற்றி சைவத்தின் வெற்றியாகாது. சமணத்திலிருந்து பாண்டிய நாட்டை மீட்கச் சம்பந்தர் அரும்பாடுபட வேண்டியவரானார். அங்ஙனம் அரும்பாடுபட்டு நாடும் அரசனும் சைவமயமான பிறகு, இப்பெரும் போர் நிகழ்ந்தது. சைவத்தில் அழுத்தமான நெடுமாறன் வெற்றியே தமிழ்நாட்டில் சைவம் வளரத் துணை செய்யும். மேலும், நெடுமாறன் தமிழன். நெல்வேலிப்போரில் பாண்டியன் சாளுக்கியனை எதிர்த்திராவிடில், பின்னர் நடந்த பெருவள நல்லூர்ப் போரில் சாளுக்கியனைப் பல்லவன் வென்றிருத்தல் இயலாது. எங்ஙனம் பார்ப்பினும், நெல்வேலி வெற்றி தமிழ்நாட்டு உரிமைக்கும் சைவசமய வளர்ச்சிக்கும் உயிர் நாடி போன்றதாயிற்று. இந்த முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் நன்குணர்ந்து "நெல்வேலி வென்ற நெடுமாறன்" என்று பாண்டியனை வழிவழியாகப் பாராட்டி வந்தனர் போலும். அப்பாராட்டின் பொருட்சிறப்பை நெல்வேலிப் போருக்கு ஏறத்தாழ 170 ஆண்டுகட்குப் பின் வந்த சுந்தரர் நன்குணர்ந்து, தமது திருத்தொண்டத் தொகையில் அவனது பக்திச் சிறப்பைப் பாராட்டாமல்,
"நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
நிறன்சிர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்,"
என்று பாண்டியனது போர்ச்சிறப்பு ஒன்றையே பாராட்டி ஏத்தெடுப்பாராயினர் என்பது இங்கு நுட்பமாக உணரத்தக்தது.
சேக்கிழார் வரலாற்று உணர்ச்சி: இக்காலத்தில் கல்வெட்டு, பட்டயம் இவற்றைக் கொண்டே அறியத்தக்க (மேற்சொன்ன) பல்லவர் - சாளுக்கியர் போர்கள், பாண்டியர் - சாளுக்கியர் போர் ஆகியவற்றின் விவரங்களைச் சேக்கிழார் எங்ஙனம் சேகரித்தார்? அவர் பாண்டியர் - சாளுக்கியர் போர் விவரங்களை ஆறு பாக்களில் அழகாக விளக்கியுள்ளார். முதல் விக்கிரமாதித்தனைப் பாண்டியனும் எதிர்த்தான் என்பதனைச் சாளுக்கியர் பட்டயமே ஒப்புக்கொள்ளுகிறது. இங்ஙனம் பட்டயச் செய்திக்கும் இலக்கியச் செய்திக்கும் மிகவும் பொருத்தமாக நெல்வேலிப் போரை விளக்கமாகப் படம் பிடித்துத் தந்த சேக்கிழாரது வரலாற்று உணர்ச்சியை நாம் என்னென்று பாராட்டுவது! நம்பியாண்டார் நம்பி போரின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராகத் தெரியவில்லை. சேக்கிழார் அதன் சிறப்பை நன்கு உணர்ந்து, நெடுமாறர் புராணத்துள் அப்போர் ஒன்றையே பற்றிப் பாடியிருத்தல்,அவரது அரசியல் அறிவு நுட்பத்தையும் முதல் நூல் ஆசிரியர் கருத்தை அறியும் ஆற்றலையும் அங்கைக் கனிபோல் அழகுறக் காட்டுவதாகும்.
பூசலார் வரலாறு: "பூசலார் என்பவர் திருநின்றவூரினர்; பிராமணர். இவர் சிவன்கோவில் கட்டப் பொருள் தேட முயன்றார். பொருள் கிடைக்கவில்லை. உடனே மனத்தாற் கோவில் கட்ட முயன்று சில நாட்களிற் கட்டி முடித்தார். கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிப்பிட்டு விட்டார். அதே நாளில் தான் கட்டிய கயிலாசநாதர் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவதாகப் பல்லவ வேந்தனான இராச சிங்கன் தீர்மானித்தான். இறைவன் அரசன் கனவிற்சென்று பூசலார் விருப்பத்தைத் தெரிவித்து வேறொரு நாளைக் குறிக்குமாறு ஆணை இட்டான். அரசன் வியந்து திருநின்றவூருக்கு விரைந்து சென்று பூசலாரைச் சந்தித்து அவரது அகக்கோவிற் சிறப்பை அறிந்து மீண்டான். அப்பல்லவன் தான் கட்டிய கோவிலுக்குப் பெருஞ் செல்வத்தை வைத்தான்." அது சேக்கிழார் கூறும் புராண விவரமாகும்.
அசரீரி கேட்டமை: இராச சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவில் வடமொழிக் கல்வெட்டு ஒன்றில், "சென்ற யுகத்தில் துஷ்யந்தன் அசரீரி கேட்டதாகப் படித்திருக்கிறோம். ஆனால் இந்தக் கொடிய கலியுகத்தில் இராச சிங்கன் அசரீரி கேட்டது வியப்பே" என்ற குறிப்பு காணப்படுகின்றது. இக் கல்வெட்டுச் செய்தியைக் கொண்டே பல்லவன் கனவு கண்டதாகச் சேக்கிழார் கூறியுள்ளார் என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.
பூசலார் கோவில்: பூசலார் மனத்தில் எடுத்த கோவிலின் அடையாளமாகச் சிவன் கோவில் ஒன்று நின்றவூரில் இருக்கின்றது. அஃது ஆராய்ச்சிக்கு உரியது [3]. அக்கோவிலைச் சுற்றிலும் இராச சிங்கன் காலத்துக் கற்றுாண்கள் சிதைந்து காணப்படுகின்றன. கோவில் பல்லவர் காலத்துக் கோவில். அதன் வெளிமண்டபத்தில் இராசசிங்கன் உருவச்சிலை இருக்கின்றது. மூலத்தானத்தில் லிங்கத்திற்கு எதிரில் பூசலார் உருவச் சிலை இருக்கின்றது. கோவிலில் உள்ள லிங்கத்திற்கு "மனக்கோவில் கொண்டார்" என்னும் பெயர் வழங்குகிறது.
--------
[3] நான் அதனை நேரிற் சென்று கவனித்தேன்.
கச்சிக் கற்றளி: காஞ்சிபுரத்தில் முதற் கற்கோவிலாகக் காட்சியளித்தது இராச சிங்கன் கட்டிய கயிலாசநாதர் கோவிலே ஆகும். அஃது அழிவுற்ற இந்நிலையிலும் பார்ப்பவர் வியக்கத்தக்கவாறு காட்சி அளிக்கின்றது எனின், இராச சிங்கன் காலத்தில் எவ்வளவு சீரும் சிறப்பும் பெற்றதாக இருந்திருத்தல் வேண்டும்! அ*க்கோவிலுக்கு இராச சிங்கன் பெருஞ் செல்வம் வைத்திருந்தான் என்று சேக்கிழார் கூறியுள்ளார். அவர் கூற்று உண்மை என்பதைச் சாளுக்கியர் கல்வெட்டுகள் குறிக்கின்றன.
1. "இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிய பிறகு, இராச சிம்மேச்வரத்தின் (கயிலாச நாதர் கோவிலின்) பெருஞ் செல்வத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தான். அதனை அக் கடவுளுக்கே விட்டு மகிழ்ந்தான்" என்று இரண்டாம் விக்கிரமாதித்தனது (கயிலாசநாதர் கோவிலில் உள்ள) கன்னடக் கல்வெட்டு அறிவிக்கிறது.
2. "காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிர மாதித்தன் இராச சிம்மேச்வரத்துப் பெருஞ் செல்வத்தைக் கண்டு வியந்தான்; அதனை அக்கோவிலுக்கே விட்டு மகிழ்ந்தான்" என்று அவனது தேர்ந்தூர்ப் பட்டயம் குறிக்கின்றது. : -
3. "காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தன் இராச சிம்மேச்வரத்தின் பெருஞ் செல்வத்தைக் கைக்கொள்ளாது, அங்குள்ள விக்கிரகங்களைப் பொன்மயமாக்கி மீண்டான்" என்று வக்கலேரிப் பட்டயம் கூறுகிறது.
வியப்பினும் வியப்பு: இத்தகைய பெருஞ்செல்வம் கொண்டு வியத்தகு முறையில் சிறப்புற்று விளங்கிய கற்றளி, முதற் குலோத்துங்கன் காலத்தில் தன் சிறப்பை இழந்தது. அக்கோவில் மூடப்பட்டது. அதற்குரிய நிலங்கள் விற்கபட்டன. கோவில் திருச்சுற்றுகள்,திருமடைவிளாகம் முதலியன பக்கத்தில் உள்ள அனைய பதங்காவுடையார் கோவிலுக்குத் தரப்பட்டன. இவ்வாறு சிறுமையுற்று மூடப்பட்ட கோவில் ஏறக்குறைய 200 ஆண்டுகள் கழிந்த பிறகே விசயநகர ஆட்சியின் போது திறக்கப்பட்டதாக அக்கோவில் கல்வெட்டே கூறுகின்றது. எனவே, சேக்கிழார் காலத்தில் அக்கோவில் மூடப்பட்டுக் கிடந்தது. திருச்சுற்று, திருமடை விளாகம் முதலியன இன்றி இழிநிலையில் இருந்தது என்பது தெளிவு.அங்ங்னம் இருந்தும், கால உணர்ச்சியும் வரலாற்று நுட்பமும் உணர்ந்த சேக்கிழார், அது கட்டப்பட்டபோது இருந்த சிறப்பைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆராய்ந்தும், காஞ்சியில் இருந்த சான்றோர் வாயிலாகக் கேட்டும் உண்மையை உணர்ந்த பிறகே,
"காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற
மாடெலாம் சிவனுக் காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் – செய்தான்"
என்று தெளிவாக அதன் சிறப்பினைத் தாம் நேரிற் கண்டார்போல அழுகுபடக் கூறியுள்ளார். இங்ங்ணம் அவர் வரலாற்று உண்மை உணர்ந்து பாடியிருத்தல் வியப்பினும் வியப்பே அன்றோ?
கழற் சிங்கன்: "இவன் மூன்றாம் நந்திவர்மன்" என்று அறிஞர் ஆராய்ந்து கூறியிருத்தல் பொருத்தமானது [4] இவனைப்பற்றிச் சேக்கிழார் கூறும் செய்திகள் கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் நந்திக் கலம்பகத்தையும் கொண்டே கூறத் தக்கவையாக இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இங்குக் காண்போம்.
--------
[4] இதுபற்றிய விளக்கம் எனது "பெரியபுராண ஆராய்ச்சி" என்னும் பெரிய நூலிற் காண்க.
1. இவன், "சிவனை வழிபட்ட சிறந்த பக்தன்" என்பது பெரிய புராணக் கூற்று. இவன் "சிவனை முழுதும் மறவாத சிந்தையன்" என்று நந்திக்கலம்பகம் நவில்கின்றது. இவன். "நெற்றியில் நீறு தரித்தவன், பல சிவன் கோவில்கட்குப் "பல திருப்பணிகள் செய்தவன்" என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.
2. "இவன் வடபுலத்தைச் சிவபிரான் அருளால் வென்றான்" என்பது பெரியபுராணச் செய்தி. இதனை நந்திக்கலம்பகமும் ஒப்புகிறது. இவனது வேலூர்ப் பாளையப் பட்டயமும் இதனைக் குறிப்பாக உணர்த்துகின்றது.
3. இவன், "நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்" என்பது சேக்கிழார் வாக்கு. "நந்திவர்மன் (கழற் சிங்கன்) ஆட்சிக் காலத்தில் - வசந்தகாலம் மிகுதியாக விளக்க முற்றது போலவும், உயர்குடி மக்கள் நற்பண்புகளுடன் விளங்கினாற் போலவும், பெண் மணிகள் கற்பரசிகளாகத் திகழ்ந்தாற் போலவும், செல்வர் ஈகைக் குணத்துடன் வாழ்ந்தார் போலவும், அறிஞர் அடக்கத்துடன் விளங்கினார் போலவும், திருக்குளங்கள் தாமரையுடன் திகழ்ந்தார் போலவும் - நந்திவர்மன் தன் குடிமக்களுடன் விளக்க முற்றிருந்தான்" என்பது வேலூர்ப் பாளையப் பட்டயக் கூற்றாகும்.
4. இவன், "பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவன்" என்பது சேக்கிழார் கூற்று. இதனையே திருவொற்றியூர், திருவதிகை,திருவிடைமருதூர்க் கல்வெட்டுகளும் வேலூர்ப்பாளையப் பட்டயமும் உறுதிப் படுத்துகின்றன.
5. இவனுக்கு உரிமை மெல்லியலார் (சிலர் அல்லது பலர்) இருந்தனர் என்பது சேக்கிழார் வாக்கு.
இவனுக்கு இரட்ட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகளான சங்கா என்பவள் பட்டத்தரசியாவள்: சிவபக்தி மேற்கொண்டு சிவப்பணிகள் செய்து வந்த மாறன் பாவை என்பவள் ஒருமனைவி என்று பாகூர்ப்பட்டயமும் கல்வெட்டுகளும் கூறுகின்றன.
6. பட்டத்தரசி "உரை சிறந்து உயர்ந்தவள்’ என்பது பெரிய புராணம். இதனை விளக்க வந்ததுபோல் உள்ள பாகூர்ப்பட்டிய அடிகளைக் காண்க. "திருமாலுக்கு மனைவியாக அமைந்த இலக்குமி போல் இராஷ்டரகூடம் - குடும்பத்திற் பிறந்த கங்கா என்ற மெல்லியலாள் நந்திவர்ன்மனுக்கு மனைவியாக வாய்த்தாள். அவள் பொறுமையில் நில மகளை ஒத்தவள். குடிமக்களால் தாயாகப் பாராட்டப்பட்டவள். அரசனது புண்ணியமே உருவெடுத்தாற்போல விளங்கினவள் அவள் பேரழகி. அறிவு நுட்பம் வாயந்தவள். பல கலைகளிலும் வல்லவள்."
இந்த விளக்கத்தைப் படித்த பிறகுதான் உரை சிறந்து" என்று சேக்கிழார் தொடர்க்குப் பொருட் சிறப்பு உண்டாகிறது. சேக்கிழார். இத்தகைய தொடரை வேறு பெண்மணிகளைப் பற்றிக் கூறுமிடங்களிற குறிக்கவில்லை. இங்குமட்டும் அவர் குறித்திருத்தலும், அதற்கேற்பப் பாகூர்ப்பட்டய விளக்கம் இருத்தலும், மேற்சொன்னவை அனைத்தும் கல்வெட்டுகளைக் கொண்டே நிரூபிக்க வேண்டி இருத்தலும் நோக்க. சேக்கிழார் பாகூர்ப் பட்டயத்தையும் பார்த்திருப்பார் போலும் என்பது எண்ணி வேண்டுவதாகிறது.
நரசிங்க முனையரையர், முனையனையர் அல்லது "முனையதரையர்"என்பவர் திருமுனிப்பாடி நாடாண்டவர் இவர்கள் முதலிற் பல்லவருக்கு அடங்கியும் பிறகு சோழர்க்கு அடங்கியும் இருக்கலானார் ஆவர். இம்மரபினரைப் பற்றிய கல்வெட்டுகளே ஆகும். இதுவரை கிடைத்த கல்வெட்டுகளிற் பழமையானது சுந்தரர் காலத்துக்குப் (கி.பி 840-865) பதினைந்து ஆண்டுகட்குப் (கி.பி.880) பிற்பட்டதாகும் அதன் "முனைப்போரையர் மகன் முனையர்கோன் இளவரையன் என்பது காணப்படுகிறது. சுந்தாரை வளர்த்த நாசிங்க முனையரையர் இக்கல்வெட்டிற் குறிக்கப்பட்ட முனைப்பேரையர் ஆகலாம் என்று கோடல் பொருத்தமானது.
முனையதரையர்:
1. "பல்லவப் பேரரசின் அழிவுக் காலத்தில் முனையதரையன் அபராசிதன் குலமாணிக்கப் பெருமானார்" என்று ஒருவன் இருந்தான்" என்று திருவாரூர்க் கல்வெட்டு குறிக்கிறது. -
2. வீர ராசேந்திரன் ஆட்சியில் வீர ராசேந்திர முனையதரையன்"என்பவன் இருந்தான்.
3. விக்கிரமசோழன் ஆட்சியில், "முனையதரையன் ஒருவன் அமைச்சனாகவும் சேனைத்தலைவனாகவும் இருந்தான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கின்றது
இங்ஙனம் மும்முனையதரையர் மரபினர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவருள் ஒருவரே சுந்தரரை வளர்த்தவரும்63 நாயன்மாருள் ஒருவருமாகிய நரசிங்க முனையரையர் என்பவர். அவரைப் பற்றிய பல குறிப்புகளைச் சேக்கிழார் மேற்சொன்ன இறுதி முனையரையன் பால் கேட்டறிந்திருக்கலாம். பொறுப்புள்ள அம்மரபினரைக் கேட்டு அந்நாயனார் புராணம் பாடுதலே சிறப்புடைத்தன்றோ?
திருவாரூர்க் கல்வெட்டு: (1) "சுந்தரர் தாயாரான இசைஞானியார் திருவாரூரிற் பிறந்தவர் இசைஞானியார், திருவாரூர் – ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன் இசைஞானியார், சடையனார், சுந்தரர் என்ற மூவர் படிமங்களையும் ஆரூர்க் கோவிலில் எழுந்தருளச் செய்தான்." என்பது சேக்கிழார் காலத்துத் திருவாரூர்க் கல்வெட்டுச் செய்தியாகும். இக்குறிப்பை நோக்க, சுந்தரர் பிறந்த சிவாசாரியர் மரபினர் சேக்கிழார் - காலத்தில் திருவாரூரில் இருந்தனர் என்பதை நம்பலாம். சேக்கிழார் அம்மரபினர் வாயிலாக, (1): சுந்தரர் முனையரையரால் வளர்க்கப்பட்டமை, (2) சுந்தரர் - பரவையார் திருமணம், (3) சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடிய சந்தர்ப்பம், (4) பரவையார் ஊடலைத் தீர்க்க இறைவன் தூது சென்றமை போன்ற செய்திகளை - நூல்களைக் கொண்டு அறியப்படாத இத்தகைய செய்திகளைக் கேட்டறிந்திருக்கலாம் என்று கொள்ளுதல் பெரிதும் பொருத்தமே ஆகும்.
சிற்றரசரான நரசிங்க முனையரையர் ஆதிசைவராகிய சுந்தரரை மகனாக ஏற்று வளர்த்து வந்தார் என்பதை நமக்கு முதன் முதல் அறிவிப்பவர் சேக்கிழாரே ஆவர். அவர் அதனுடன் விட்டு விடவில்லை. சுந்தரர் திருமணத்திற்கு ஒலை போக்கிய பொழுது,
"கொற்றவர் திருவிற் கேற்பக் குறித்து நாள் இலை விட்டார்"
என்று கூறினர் பரவையாரை மணந்து சுந்தரர். திருக்கோவிற்குச் சென்ற பொழுது அரசகுமாரனைப் போல ஊர்வலச் சிறப்புடன் சென்றார் என்றும் கூறினர். மேலும், பல இடங்களில் சுந்தரரை "நாவலூர் மன்னன்", "நாவலூர்க் கோன்" என்றும் சுட்டியுள்ளார். இங்ஙனம் பல இடங்களிலும், சுந்தரர் அரசர் செல்வாக்குப் பெற்றவர் என்பதைச் சேக்கிழார் வற்புறுத்திச் சென்றமைக்குத் தக்க ஆதாரம் இருக்க வேண்டும் அல்லவா? சேக்கிழார், நாம் மேலே குறிப்பிட்ட முனையரையர் மரபினரிடமும் திருவாரூர்ச் சிவாசாரியர் மரபினிரிடமும் கேட்டறிந்த செய்திகளின் வன்மையாற்றான் இங்ங்னம் வற்புறுத்திச் சென்றார் என்று கொள்வதே தக்கது. -
மதுச் சோழன் வரலாறு: பெரிய புராணம் - நகரச் சிறப்பில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட மதுச்சோழன் வரலாறு கூறப்பட்டுள்ளது. "மதுச்சோழன். தன் மகனது தேர்க்காலில் அகப்பட்டு இறந்த பசுக்கன்றுக்காக, அத்தனி மகனையே தேர்க்காலில் இட்டுக்கொன்றான் என்பது கதைச் சுருக்கம். இந்தச் சுருக்கமே. அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட சிலப்பதிகாரத்துள் முதன்முதலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வரலாறு பிற்பட்ட நூற்றாண்டுகளில் எழுந்த திருமுறைகளிற் குறிக்கப்பட வில்லை. வேறு நூல்களிலும் சிறப்பாகக் காணப்படவில்லை. இவ்வரலாற்றின் முழு நிகழ்ச்சிகளை அறிய இலக்கியச் சான்றில்லை. இங்ஙனம் இருப்பச் சேக்கிழார் இவ்வரலாறு சம்பந்தமான பல விவரங்களைத் தெளிவுற முதன்முறையாகத் தந்துள்ளார். அவை (1) அரசன் இறந்த கன்றுக்காகத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொல்லும்படி அமைச்சனை ஏவுதல், (2) அவன் அதனை செய்ய இசையாது தற்கொலை செய்துகொள்ளல். (3) அரசனே தன் மகனைக் கொன்ற பொழுது சிவனார் அருளால் இறந்த கன்று, அரசகுமரன், அமைச்சன் ஆகிய மூவரும் உயர் பெற்றெழுதல் என்பன இக்குறிப்புகள் சேக்கிழார்க்கு எங்ஙனம் கிடைத்தன?
திருவாரூர்க் கல்வெட்டு: திருவாரூர் வீதிவிடங்கல் பெருமான் திருக்கோவில் இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் கல்வெட்டு காணப்படுகிறது. அநபாயன் தந்தையான விக்கிரமசோழனது இந்த ஆட்சியாண்டில் (கி.பி.1123)ல் வெட்டப்பட்டது. அது திருவாரூர் வீதி விடங்கப் பெருமானே மதுச்சோழன் வரலாற்றைக் கூறுவது போல் வெட்டப்பட்டுள்ளது.
"மதுச்சோழன்மகன் பெயர் "ப்ரியவ்ரதன் அமைச்சன் "இங்கணாட்டுப் பாலையூர் உடையான் உபயகுலாமலன் என்பவன். அவன் அரசனது கட்டளையை நிறைவேற்ற மனம் வராது தற்கொலை செய்து கொண்டான். இறுதியில் அவ்வமைச்சன், பசுக்கன்று, அரசிளங்குமரன் ஆகிய மூவரும் சிவபிரான் அருளால் உயிர் பெற்று எழுந்தனர். மனு தன் மகனை அரசனாக்கி, அமைச்சன் மகனான சூரியன் என்பவனை அம்மகனுக்கு அமைச்சனாக்கித் தானும் உயிர் பெற்றெழுந்த அமைச்சனும் தவநிலை மேற்கொண்டனர். மனு, தன் அமைச்சனுக்குப் பரிசாகத் தந்த திருவாரூரில் இருந்த மாளிகை ஒன்று. அவன் மரபில் வந்தவனும் விக்கிரமசோழனது அமைச்சனுமான பாலையூர் உடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்கசோழ மகாபலி பாணராயனுக்கு உரியது. அது பழுதுபட்டுக் கிடந்ததால், அதனைப் பழையபடி மாளிகையாக்கிக் குடிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது." இந்த விவரங்கள் எல்லாம் சிவபெருமான் திருவாரூர் மாகேச்வராக்கும் கோவில் ஆதிசைவர்க்கும் அருளியபடி கல்லில் வெட்டப்பட்டனவாம். -
சேக்கிழார்க்கு ஏறத்தாழ 12 ஆண்டுகட்கு முற்பட்ட இக்கல்வெட்டு மிகவும் முக்கியமானது. இதனால், விக்கிரம சோழன் காலத்தில், மதுச்சோழன் வரலாறு திருவாரூர் மக்கள் அளவிலேனும் தெரிந்திருந்தது என்னலாம். கல்வெட்டுச் செய்திகள் பழைய காலத்தன. ஆயினும், அதிற் கூறப்பட்டுள்ள "ப்ரியவ்ரதன் போன்ற பெயர்கள் பிற்காலத்தனவாகும். இந்த உண்மையை உணர்ந்தவர் சேக்கிழார். அதனாற்றான். இக்கல்வெட்டிலிருந்து தமக்கு வேண்டிய முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும்.எடுத்துக் கொண்டாரே யன்றிப் பெயர்களை எடுத்துக் கொள்ளவில்லை. சேக்கிழார் இக்கல்வெட்டைப் படித்திராவிடில், மதுச்சோழன் வரலாற்றை இவ்வளவு விளக்கமாகப் பாடியிருந்தல் இயலாதென்னலாம்.
முடிவுரை: இங்ஙனம் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகள் அனைத்தையும் இலக்கியமும் கல்வெட்டும், நம்பத்தக்க செவிவழிச் செய்தியும் கொண்டு சேக்கிழார் பாடியுள்ளார் என்பதனை ஒவ்வொரு நாயனார் வரலாறாக எடுத்துக் கொண்டு சான்றுகள் காட்டிக் கொண்டே போகலாம். அவ்விரிவிற்கு இஃது இடமன்று. சேக்கிழார் கூறும் பேரரசர், சிற்றரசர் பற்றிய குறிப்புகள், நாயன்மார் காலத்தில் நடந்த பல்லவர் - பாண்டியர் போர், பாண்டியர்-சாளுக்கியர் போர், பல்லவர் -இரட்டர் போர், பல்லவர்- சோழ பாண்டியர் போர் என்பனவும், அப்பர் - சம்பந்தர் காலத்து மிழலைப் பஞ்சம், பூசலார் காலத்துப்பல்லவ நாட்டுப்பஞ்சம், கோட்புலியார் (சுந்தரர்) காலத்துத் தமிழ் நாட்டுப் பஞ்சம் என்பனவும் வரலாற்றுப் புகழ் பெற்றவை. அவை பற்றிச் சேக்கிழார் கூறியுள்ள அனைத்தும் உண்மை என்பதைப் பல்லவர் காலத்துக் கல்வெட்டுகள் கொண்டு மெய்ப்பிக்கலாம்.
இங்ஙனமே நாயன்மார் காலத்துக் கடல் வாணிகம். மறையவர் சிற்றூர்கள் (பிரம்மதேயங்கள்), கிராம நீதி மன்றங்கள், கணவன், அரசன் ஆகிய இவருடன் முறையே மனைவி, மெய்காப்பாளர் இறத்தல், நாயன்மார் காலத்தில் வாழ்ந்த பலவகைச் சிவனடியார், அவர்தம் இலக்கணங்கள் என்பனவும் வரலாற்றுச் சிறப்புடைய பிறவும் இலக்கியமும் கல்வெட்டுகளும் கொண்டு மெய்ப்பிக்கலாம் [5]."
----
[5]. இவை பற்றிய விரிவை என்து"பெரிய புராண ஆராய்ச்சி" என்னும் பெரிய - நூலிற் காண்க.
------
அதிகம் அறைவதேன்? சேக்கிழார், சிறுத் தொண்டர் வரலாற்றில் வாதாபிப்போரைக் குறித்திராவிடில், நாம், சம்பந்தர் காலம் அறிந்திருந்தால் இயலாது. அங்ஙனமே, பல்லவன் குணபர ஈச்வரம் எடுத்தான் என்பதைச் சேக்கிழார் குறியாதிருப்பின், அப்பர் காலத்துப் பல்லவன் மகேந்திரவர்மனே என்பதை உறுதி செய்திருக்க முடியாது. சேக்கிழார் சிறந்த வரலாற்று உணர்ச்சி கொண்ட பெரும் புலவர் என்பதை வரலாற்று உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த இரண்டே போதும். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் இத்தகைய வரலாற்று உணர்ச்சியுடைய பெரும் புலவரைப் பெற்றிருந்த தமிழகத்திற்கு நமது வணக்கம் உரியதாகுக.