சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் சந்திர போஸ்...!!
👉 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் ஜானகிநாத் போஸ், பிரபாவதி தேவி தம்பதிகளுக்கு 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிறந்தார்.
👉 நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தந்தை வங்காளத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார். இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபு வழியை உடையது.
👉 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக இவர் பிறந்தார்.
👉 ஐந்து வயதானபோது கட்டாக்கிலுள்ள ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் சந்திர போஸ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார்.
👉 தன் உயர்கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சுபாஷ் சந்திர போஸ் 1913ஆம் ஆண்டு நடந்த தேர்வில் 2வது மாணவராக திகழ்ந்தார்.
👉 இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியோர்களின் பால் ஈடுபாடுடையவராகவும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராகவும் இருந்தார்.
👉 இதனால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடு கொண்டார். துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திர போஸ் தன் ஞானவழிக்கான ஆசானை தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.
👉 துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915ஆம் ஆண்டு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
👉 கொல்கத்தா கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது இனவெறி கொண்ட ஆசிரியருக்கும், நேதாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக சுபாஷும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்தக் கல்லூரியிலும் சேர முடியாதவாறு தடையும் விதிக்கப்பட்டது.
👉 இதனையடுத்து ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் படிப்பு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான படைப்பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவனாக தேறினார். அப்போதே அவருக்குள் இருந்த படைத்திறமை மண்ணை பிளந்து வரும் செடி போல முட்டி முளைத்தது.
மக்கள் சேவைப் பணி :
👉 நாட்டின் சூழ்நிலை பற்றி வீட்டில் அடிக்கடி விவாதங்களில் ஈடுபட்ட சுபாஷ் சந்திர போஸை பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாமல் லண்டனுக்கு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க அனுப்பி வைத்தார்.
👉 அங்கு தன் படிப்பை தொடர்ந்த சுபாஷ் சந்திர போஸ், இந்திய மக்கள் சேவை படிப்புக்கான (இந்தியக் குடிமைப் பணி எனப்படும் ஐ.சி.எஸ் தேர்வு) நுழைவுத்தேர்வில் இந்தியாவிலேயே நான்காவது நபராக தேர்ச்சி பெற்றிருந்தார்.
👉 ஆனால், தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக்கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.
👉 மிகப்பெரிய பதவி... உத்தியோகம்... ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிட செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
👉 மதிப்புமிக்க பதவியை உதறித்தள்ளிய அவரைப் பார்த்து, 'உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா?' என்று ஆங்கிலேய அதிகாரி கேட்டதற்கு, 'என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், என் தாய்நாட்டின் வருத்தம் அதைவிடப் பெரியது' என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சியளித்தார்.
👉 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தனது விருப்பத்தை சி.ஆர்.தாஸுக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்தார். சுபாஷ் சந்திர போஸின் திறனை நன்கு அறிந்த தாஸ் அவர்கள், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக வெறும் 25 வயதே ஆன சுபாஷ் சந்திர போஸை நியமித்தார்.
👉 சுபாஷ் சந்திர போஸ் காந்தியை சந்தித்து, காங்கிரஸில் சேர்ந்தார். மேலும் சுபாஷ் சந்திர போஸும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
👉 மாணவர்களுக்கிடையே நெருப்பு பொறியாய் விழுந்தார் சுபாஷ் சந்திர போஸ். வார்த்தைகளில் உற்சாகம், ஒவ்வொரு பேச்சிலும் அனல், மாணவர்களை உத்வேகப்படுத்தியதன் மூலம் நேதாஜியின் பெயர் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது.
👉 கொல்கத்தாவில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து வந்த நேதாஜிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதை அறிந்த ஆங்கில அரசு அவரை பொய்க்காரணங்களை கூறி சிறையில் அடைத்தது.
சிறையிலிருந்த நேதாஜி :
👉 1924ஆம் ஆண்டு நேதாஜி பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையிலேயே அவரை முடக்க நினைத்தது ஆங்கில அரசு.
👉 நல்ல தலைவனின் வெற்றிக்கு தலைவன் எதிரே நிற்க தேவையில்லை அவரின் பெயர் ஒன்றே போதும் என்பதற்கு ஏற்ப அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தப்படியே வெற்றி பெற்றார் சுபாஷ் சந்திர போஸ். அதுதான் வங்க மக்கள் அவரின் மீது கொண்டிருந்த நம்பிக்கை.
👉 இந்த வெற்றிதான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை சுபாஷ் சந்திர போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால், இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஆங்கிலேய அரசை உணர வைத்தது.
விடுதலையை நிராகரித்தார் :
👉 மாண்டலே சிறையில், சுபாஷ் சந்திர போஸ் காச நோயால் அவதிப்பட்டார். இதனால் மக்கள் அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு.
நிபந்தனைகள் :
1. எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,
2. அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும்.
👉 சுபாஷ் சந்திர போஸின் தாய், சகோதரர்கள் உட்பட அனைவரும், அவர் விடுதலையானால் போதும் என்று நினைத்தனர். ஆனால், சுபாஷ் சந்திர போஸ் அவர்களோ 'மன்னிப்பு கேட்க... நான் ஒன்றும் கோழையல்ல. என்னை என் நாட்டுக்கே வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது' என்று சொல்லி விடுதலையை மறுத்துவிட்டார். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு அரசாங்கம் மிரண்டுதான் போனது.
👉 நேதாஜி, சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின், 1938ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேதாஜியின் வீர உரை :
👉 'சட்டமன்றங்களை கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாக போராட வேண்டும்' என்று வீர உரை நிகழ்த்தினார். அதன்பின் இவரின் புகழ் நாடெங்கும் பரவியது. இவரை 'நேதாஜி' (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர்.
திருமணம் :
👉 ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவருடன் சுபாஷ் சந்திர போஸிற்கு காதல் அரும்பியது. 1937ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி எமிலியை சுபாஷ் சந்திர போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவம்பர் 29, 1942ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். அவருக்கு அனிதா போஸ் என்று பெயர் சூட்டினர்.
இந்திய தேசிய ராணுவம் :
👉 நேதாஜியின் அதிரடி நடவடிக்கைகள் காந்திஜியின் அகிம்சைக்கு எதிராக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. சுயேட்சைக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்து பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். அப்போது கொல்கத்தா மாகாண தலைவரான சுபாஷ் சந்திர போஸ் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார்.
👉 ஜாலியன் வாலாபாக் படுகொலையை தலைமையேற்று நடத்திய டயரை சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கை கண்டித்து காந்திஜி அறிக்கைவிட்டார்.
👉 ஆனால், சுபாஷ் சந்திர போஸ் அவரை பாராட்டி கடிதம் அனுப்பினார். இது காந்திஜிக்கும், நேதாஜிக்கும் கருத்து வேறுபாடு உண்டாக காரணமாக அமைந்தது.
👉 காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் சுபாஷ் சந்திர போஸ். இதனால் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், சீனிவாச அய்யரை தலைவராக கொண்டு 'காங்கிரஸ் ஜனநாயக கட்சி'யை தொடங்கினார்.
👉 1939ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்தினார்கள். கடும் போட்டிக்கிடையில் நேதாஜி வெற்றி பெற்றார்.
👉 இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, 'பட்டாபியின் தோல்வி, என் தோல்வி' என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரஸ் உடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட 'பார்வர்டு பிளாக்' என்ற அமைப்பை உருவாக்கினார்.
👉 இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது வெளிநாடுகளில் போர் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி 'இந்திய தேசிய ராணுவத்தை' உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தினார் சுபாஷ் சந்திரபோஸ்.
👉 இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு 'ஜான்சிராணி படை' என்று பெயரிட்டார்.
👉 இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பை பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிக்கொண்டிருந்ததால் 1940ஆம் ஆண்டு நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.
👉 உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார்.
👉 அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940ஆம் ஆண்டு நவம்பரில், சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த உண்ணாவிரதத்தினால் சுபாஷ் சந்திரபோஸின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதை பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது.
👉 எனவே, உண்ணாவிரதத்தை கைவிடும்படி சுபாஷ் சந்திரபோஸிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால், சுபாஷ் சந்திரபோஸ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல்நிலை மோசம் அடைந்துக்கொண்டே இருந்தது. வேறு வழியின்றி நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் விடுதலை செய்தது.
👉 ஆனால், சுபாஷ் சந்திரபோஸின் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். நேதாஜி எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தீர்மானித்தார்.
இந்தியாவை விட்டு வெளியேறுதல் :
👉 1941ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி நேதாஜி ஒரு முஸ்லீம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறுவேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரயில் நிலையத்திற்கு சென்றார்.
👉 அந்த ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். அங்கிருந்து அவர் 17ஆம் தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். மூன்று நாள் கழித்து மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். இவருடன் ரகமத்கான் என்ற நண்பர் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள்.
👉 மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையை கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.
👉 காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு சாலையை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரை சென்றடைந்தனர். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார்.
👉 அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. அதன்பின் நேதாஜி அந்த இருவருடன் காரில் புறப்பட்டார்.
👉 ஆப்கானிஸ்தான் தலைநகர் வரை துணைக்கு வந்த அவரது நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்கு திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால் ரஷ்ய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர்.
👉 ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்கு சென்றார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை ஜெர்மனி பத்திரிக்கைகள் வெளியிட்டன.
👉 அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச்சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்கு தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்து பேசினார்.
தி கிரேட் எஸ்கேப் :
👉 இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்க இந்த நிகழ்வு ஒன்றுதான் காரணம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணை தூவி தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கானிஸ்தானையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார்.
👉 சுபாஷ் சந்திர போஸை காணவில்லை என நாடே தவித்திருக்க, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் முழங்க, மொத்த உலகமும் இந்த போராளியை பார்த்து வியந்தது.
👉 தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா? என்று ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின.
ஹிட்லரிடம் முறைப்பு :
👉 சுபாஷ் சந்திர போஸ், ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்க சென்றிருந்தாலும், சுபாஷ் சந்திர போஸின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது.
👉 இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டதை சுபாஷ் சந்திர போஸ் எதிர்த்து பேசினார். அவ்வாக்கியத்தை திரும்பப் பெறுமாறு கூறினார்.
👉 'இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்' என்று ஹிட்லர் கூற, 'எனக்கு யாரும் அரசியல் சொல்லி தர தேவையில்லை என்று உங்கள் அதிபருக்கு கூறுங்கள்' - என்று மொழிப்பெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு சுபாஷ் சந்திர போஸ் கோபமாக வெளியேறினார்.
👉 உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக இப்படி ஒருவர் பேச, அவரின் தைரியத்தை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.
நேதாஜியின் வீர சாகசம் :
👉 இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். அவர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போரிட்டனர்.
👉 போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் முன்வந்தது. அதன்பின் வெகு எளிதாக சிங்கப்பூரை கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது.
👉 தாய்லாந்து, மலேசியா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் வென்று, மேலும் முன்னேறின. பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் வந்தது.
👉 ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் சிலர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, அங்கேயும் ஒரு 'இந்திய தேசிய ராணுவம்' அமைக்கப்பட்டது.
👉 போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். அதற்குபின் ஜப்பானுக்கு செல்ல முடிவு செய்தார்.
👉 அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் கடலில் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை.
👉 எல்லாவற்றையும் சிந்தித்து பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். 'இது ஆபத்தானது' என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர்.
👉 ஆனால், நேதாஜி துணிவுடன் 1943ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார்.
👉 எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தை சுற்றிக்கொண்டு இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது.
👉 இந்துமகா சமுத்திரத்தில், மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கி கப்பலை எதிர்கொண்டு வரவேற்றது. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு மாறினார் நேதாஜி.
👉 அதன்பின் நீர்மூழ்கிக் கப்பலின் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை அடைந்தார்.
ஜப்பானில் சுபாஷ் சந்திர போஸ் :
👉 நேதாஜி சுமத்ரா தீவில் ஒரு வாரம் தங்கிய பின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்கு பயணமானார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
👉 அதன்பின் ஜப்பானிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.
👉 சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய வியூகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, 'தேசிய மாணவர் படை'யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார்.
👉 எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது.
சுதந்திர இந்திய அரசாங்கம் :
👉 1943ஆம் ஆண்டு, 'சுதந்திர இந்திய அரசாங்கத்தை' சிங்கப்பூரில் அமைத்தார்.
👉 பெண்கள் படையின் தளபதியாக தமிழ் பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில் பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.
👉 அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார். தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் மட்டுமல்லாது பல பள்ளிக்கூடங்களையும் மாணவர்களுக்காக திறந்தது. புதிய நாணயங்களையும் வெளியிட்டது. பத்திரிக்கைகளையும் நடத்தியது.
👉 சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.
👉 நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக 'பாங்க்' தொடங்க வேண்டும் என்றார் நேதாஜி.
👉 இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? என்று ஒரு கோடீஸ்வரர் கேட்டார். 'ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்' என்று நேதாஜி கூறியதும், 'இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்' என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் 'ஆசாத் ஹிந்த் பாங்க்' தொடங்கப்பட்டது.
நன்கொடைகள் :
👉 இந்திய தேசிய ராணுவத்திற்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. அதற்கு மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின.
👉 நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர்.
👉 பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி ரூபாய் வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்த நன்கொடைகளின் மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்.
👉 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், 'ஜான்சிராணிப்படை' என்ற பெயரில் இயங்கியது.
👉 ராணுவப்படையில் 'தற்கொலைப்படை' ஒன்றும் இயங்கியது. இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாக சேர்ந்தனர்.
👉 'டெல்லி சலோ!' என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது.
👉 'ஜான்சிராணிப்படை' பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. 'விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்' என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
👉 ஆனால்...
👉 போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் வியூகம் தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது.
👉 பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கி கொண்டிருந்தார்.
👉 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷ்யப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்பிக்க வழி இல்லை என்பதை அறிந்து கொண்டு ஜெர்மனி சரண் அடைந்தது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி :
👉 ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை. எனவே, 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது.
👉 அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடைய தீர்மானித்தது.
👉 அப்போது நேதாஜி மலேசியாவில் இருந்தார். அவர் உடனே மகிழுந்தின் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
👉 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்றிரவு நேதாஜி விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
👉 அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று ராணுவ தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, 'ஜான்சி ராணிப்படை'யில் உள்ள பெண்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்.
👉 ஜப்பான் அரசிடமிருந்து நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது. 'ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது? என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்' என்பதுதான் அந்த செய்தி.
👉 அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்கு புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.
👉 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார்.
முதலாவது செய்தி - இந்திய தேசிய ராணுவத்தினருக்கு :
👉 'ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்'.
அடுத்த செய்தி - கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு :
👉 'நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியை கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.'
👉 இந்த இரண்டு செய்தியை வெளியிட்ட பின், காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் சென்றடைந்தார்.
ஜெய்ஹிந்த் :
👉 இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும் 'ஜெய்ஹிந்த்' ஸ்லோகத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் நேதாஜிதான்.
அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் :
👉 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி, நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்கள், ஆலோசகர், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரச்சார இலாகா மந்திரி ஆகியோருடன் உடன் சென்றனர்.
👉 ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 10 மணி அளவில், விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள்.
👉 விமானத்தில் போவதா, வேண்டாமா? என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.
👉 அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னை கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாக பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார்.
👉 விமானத்தில் ஏறி அமர்ந்தார். கடைசி நேரத்தில், 'இன்னொருவர் வரலாம்' என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே, நேதாஜியின் முதன்மை செயலாளரான ஹபிப்-வுர்-ரஹ்மான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார்.
👉 விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களை பார்த்து நேதாஜி 'ஜெய்ஹிந்த்' என்று கூறினார். விமானம் புறப்பட்டது. அது எந்த இடத்திற்கு போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி விமானப்பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.
👉 ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ ஒரு திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.
👉 'சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விமானத்தில் புறப்பட்டார். 18ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது.
👉 அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜப்பானிய அதிகாரி ஒருவர் விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார்.
👉 நேதாஜியின் முதன்மை செயலாளரான ஹபிப்-வுர்-ரஹ்மானும், மற்ற ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்' என ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.
👉 இந்தச் செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. 'நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?' என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரஹ்மான், 'நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்' என்று கூறினார். ஆயினும், பல தலைவர்கள், 'நேதாஜி உயிருடன் இருக்கிறார்' என்றே கூறி வந்தனர்.
👉 இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளை கண்டறிய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உட்பட பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், 'விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை' என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தனர்.
👉 சுபாஸ் சந்திர போஸின் மரணத்தை பல ஆண்டுகள் ஆன பின்னும் கூட சிலர் ஏற்க மறுத்தனர். இறுதிவரை அவருடைய மரணத்திற்கான விடை கிடைக்காமலேயே புதைந்துவிட்டது.
👉 வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தையே நினைத்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதனை நாம் ஒரு நொடியும் மறக்கக்கூடாது. அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையாகும்.
அதனால் நாம் உரக்கச் சொல்வோம்?
'ஜெய்ஹிந்த்!'
