சர் ஜெகதீச சந்திரபோஸ்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவைகளுக்கும் மகிழ்ச்சி, துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மையை கண்டறிந்து சொன்ன மாமேதை சர் ஜெகதீச சந்திரபோஸ்.
வங்கத்தின் முன்ஷிகன்ச் மாவட்டத்தில் (தற்போது வங்கதேசத்தில் உள்ளது) 1858, நவ. 30 ம் தேதி, பிறந்தார் ஜெகதீச சந்திரர். இவரது தந்தை, பகவான் சந்திர போஸ், உதவி ஆணையராகவும் துணை நீதிபதியாகவும் பாரித்பூர் என்ற நகரில் பணியாற்றினார். அவர் பிரம்ம சமாஜம் அமைப்பில் தலைவராக இருந்தவர். அவரது தாய்மொழிப் பற்றின் காரணமாக, வங்க மொழியில் பயிலும் பள்ளியிலேயே ஜெகதீச சந்திரர் ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.
1869 ல் கொல்கத்தாவின் ஹரே பள்ளியில் சேர்ந்த அவர், பிறகு புனித சேவியர் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். 1875 ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேறிய போஸ், புனித சேவியர் கல்லூரியில் சேர்ந்தார். 1879 ல் போஸ் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஐ.சி.எஸ். படிக்கவே போஸ் விருப்பம் கொண்டார். ஆனால், ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யும் அந்தப் படிப்பு வேண்டாம் என்று போசின் தந்தை கூறியதால், லண்டன் சென்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தார் ஜெகதீச சந்திரர். ஆனால், உடல்நலக் குறைவால் இடையிலேயே படிப்பைவிட்டு விலகி தாய்நாடு திரும்ப வேண்டியதாயிற்று.
அப்போது, அவரது சகோதரியின் கணவர் ஆனந்தமோகன் (இவர் இந்தியாவின் கணித மேதைகளுள் ஒருவர்) பரிந்துரைப்படி, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் சென்று கிறிஸ்ட் கல்லூரியில் இயல் அறிவியல் படிப்பில் சேர்ந்தார். அதுவே போசின் வாழ்வில் மகத்தான திருப்புமுனையாக அமைந்தது. அங்கு இயல்அறிவியலில் 'டிரிப்போஸ்' பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டமும் பெற்று (1884) போஸ் நாடு திரும்பினார் (1885).
பிறகு, அப்போதைய வைஸ்ராய் ரிப்பன் பிரபு பரிந்துரைப்படி, கொல்கத்தாவின் பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் துறையில் பயிற்சி பேராசிரியராக இணைந்தார். விஞ்ஞான ஆராய்ச்சியில் பெரும் தாகம் கொண்டிருந்த ஜெகதீச சந்திரருக்கு அங்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. ஆயினும் அவர் சிறிதும் மனம் தளரவில்லை. ஆங்கிலேய அரசின் நிறவெறிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட அவர், சுயமரியாதைக்காகவும் போராட வேண்டிவந்தது.
பிரெசிடென்சி கல்லூரியில் போசுக்கு வழங்கப்பட்ட ஊதியத்திலும் பாரபட்சம் காட்டப்பட்டது. வைஸ்ராய் பரிந்துரைத்தும்கூட, ஜெகதீச சந்திரர் இரண்டாம் பட்சக் குடிமகனாகவே அங்கு நடத்தப்பட்டார். அங்கு பணிபுரிந்த ஐரோப்பாவைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு மாதம் ரூ. 300 சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், போசுக்கு ரூ. 100 மட்டுமே வழகப்பட்டது. இந்த பாரபட்சத்திற்கு எதிராக போஸ் போராடினார்.
தனக்கும் ஐரோப்பிய பேராசியர்களுக்கு வழங்கும் அதே ஊதியம் தரும் வரையிலும், கல்லூரி நிர்வாகம் தரும் ஊதியத்தை வாங்கப் போவதில்லை என்று போஸ் அறிவித்தார். அதன் காரணமாக பொருளாதார சிக்கல்களுக்கு ஆளான போதும், அவர் மனம் கலங்கவில்லை. அவ்வாறு மூன்று ஆண்டுகள் சம்பளம் பெறாமலே பேராசிரியர் பணியில் ஈடுபட்டார், போஸ். அந்த சமயத்தில் தான் (1887) பிரபல பிரம்ம சமாஜத் தலைவர் துர்க்கா மோகன்தாசின் மகள் அபலா என்பவரை திருமணம் செய்து கொண்டார், போஸ். அபலா கணவருக்கேற்ற பத்தினியாக விளங்கி, அவரது விஞ்ஞான சாதனைகளுக்கு துணை நின்றது வரலாறு. போசின் மூன்று ஆண்டுகாலப் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. அவரது திறமையை உணர்ந்த கல்லூரி நிர்வாகம், அவரை பணி நிரந்தரம் செய்ததுடன், மூன்று ஆண்டுகளுக்கும் சேர்ந்து போஸ் கேட்ட ஊதியத்தையே வழங்கியது.
கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே போஸ் தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மின்காந்த அலைகள் குறித்து அவர் கவனம் சென்றது. வளிமண்டலத்தில் உள்ள மின்காந்த அலைகளின் இருப்பு குறித்து அப்போதுதான் ஆராயப்பட்டு வந்தது. தகவல் தொடர்பில் அவற்றை பயன்படுத்த முடியும் என்று போஸ் கூறினார். அதற்கு மின்காந்த அலைகளின் நீளத்தை குறைப்பது அவசியம் என்று அவர் சொன்னார்.
1893 ல் ஐரோப்பிய விஞ்ஞானி நிக்கோலா டெஸ்லா ரேடியோ அலைகளை முதல்முறையாக நிரூபித்தார். அதற்கு ஓராண்டு கழித்து, அலைநீளம் குறுக்கப்பட்ட மின்காந்த அலைகளின் பயன்பாட்டை கொல்கத்தாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் நிரூபித்துக் காட்டினார் போஸ். 1894 , நவம்பரில், கொல்கத்தா நகரமன்ற அரங்கில், துணைநிலை ஆளுநர் வில்லியம் மெக்கன்சி முன்னிலையில், வெடிமருந்தை எரியச் செய்து, சிறிது தொலைவிலிருந்த மணியை மி.மீ. நீள மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்கச் செய்தார் போஸ்.
இதனை 'கண்ணுக்குத் தெரியாத ஒளி' என்று குறிப்பிட்ட போஸ், ''இந்த ஒளி செங்கல் சுவர்களையும் கட்டடங்களையும் ஊடுருவும் தன்மை கொண்டது. இந்தக் கண்டுபிடிப்பின் உதவியால், கம்பியில்லாத தொலைதொடர்பு எதிர்காலத்தில் சாத்தியமாகும்'' என்று கூறினார். அடுத்ததாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதிய போஸ், மின்காந்த அலைகளை வசீகரிக்கும் 'செமி கண்டக்டர்' குறித்து பல உண்மைகளைக் கண்டறிந்தார். அதன் பயனாக தொலைதொடர்புத் துறையிலும் மின்னணுவியலிலும் அரிய பல கண்டுபிடிப்புகள் பிற விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன.
வானொலியைக் கண்டுபிடித்ததாக உலகம் புகழும் மார்கோனிக்கு முன்னதாகவே அதன் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ஜெகதீச சந்திர போஸ். ஆனால், அதனை அவர் தனது காப்புரிமையாக பதிவு செய்வதைத் தவிர்த்தார். அதன் காரணமாகவே, அந்த கண்டுபிடிப்புகளுக்கான பெருமை (1897) மார்கோனியைச் சென்றடைந்து. அவரது ரேடியோ அலைகளை ஈர்க்கும் 'செமி கண்டக்டர்' குறித்த ஆய்வு முடிவுகள், பிற்காலத்தில் கண்டறியப்பட்ட (தற்போது புழக்கத்திலுள்ள) என்-பி-என் மின்னணுவியல் கண்டுபிடிப்பில் மிக்க உதவியாக இருந்தன.
நோபல் விஞ்ஞானி சர். நெவில் மோட் (1977), ''ஜெகதீச சந்திர போஸ் தான் வாழ்ந்த காலத்திலேயே, பின்னாளில் 60 ஆண்டுகள் கழித்து நிகழவுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தை கணித்திருக்கிறார்'' என்று புகழ்கிறார். இயற்பியலில் மட்டுமல்லாது, உயிரியல், தாவரவியல், தொல்லியல் ஆகியவற்றிலும் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர் போஸ். தாவரங்களின் இயங்கியல் குறித்த போசின் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளன.
ரேடியோ அலைகளுக்கு தாவரங்கள் எதிர்விளைவு காட்டுவதையும், தாவரங்களின் திசுக்களும் விலகுகளின் திசுக்களும் ஒத்திருப்பதையும், போஸ் தான் கண்டறிந்த கருவி மூலமாக நிரூபித்தார். தாவரங்களுக்கும் உயிருண்டு என்று தனது 'கிரஸ்கோ கிராப்' கருவியால் உலகிற்கு போஸ் நிரூபித்துக் காட்டினார். இனிய இசையால் தாவரங்கள் அதிக வளர்ச்சி பெறுவதையும் போஸ் கண்டறிந்தார். ரசாயனங்களால் தாவரங்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதையும் போஸ் கண்டறிந்தார்.
''தாவரங்களும் மனிதர்களைப் போலவே வழியால் துடிக்கின்றன; மனிதர்களைப் போலவே அன்புக்காக ஏங்குகின்றன'' என்று போஸ் பிரகடனம் செய்தார். தாவரவியலிலும், உயிர் இயற்பியலிலும் போஸ் கண்டறிந்து கூறிய உண்மைகள் பிற்கால விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. பல அரிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வு முடிவுகளையும் கண்டறிந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்வதை போஸ் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது உலகை சுரண்டுவதாகும் என்று அவர் கருதினார்.
கம்பியில்லா தொலைதொடர்பில் மின்காந்த அலைகளின் பயன்பாடு, மின்காந்த அலைகளின் அலைநீளத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் போஸ் உருவாக்கிய கருதுகோள்கள் முன்னோடியாக இருந்தபோதும், அவற்றை தனது தனிப்பட்ட சொத்தாக அவர் சொந்தம் கொண்டாடவில்லை. அதன் காரணமாக வானொலியைக் கண்டறிந்த விஞ்ஞானி என்ற சிறப்பை மார்கோனி பெற வாய்ப்பு ஏற்பட்டது.
கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, போசை அணுகி, அவரது கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் உரிமைக்காக பெரும்பொருள் வழங்குவதாக அறிவித்தபோதும், போஸ் அதனை ஏற்கவில்லை. தனது கண்டுபிடிப்புகள் உலகம் நன்மை பெற பயன்படுமானால், யார் வேண்டுமாயினும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் போஸ்.
எனினும், போசின் அமெரிக்க நண்பர்கள், அவரது கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (பேட்டன்ட்) பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி, அதில் வெற்றியும் பெற்றனர். சாரா சாப்மன் புல் என்ற அமெரிக்க விஞ்ஞானியின் வேண்டுகோளை ஏற்று, தனது 'மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்' என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து காப்புரிமை (US755840) பெற்றார் போஸ். அந்த வகையில், இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி என்ற சிறப்பை (1901)போஸ் பெற்றார்.
போஸ் விஞ்ஞானி மட்டுமல்ல. வங்க மொழியில் சிறந்த எழுத்தாளரும் ஆவார். 'நிருடேஷ்வர் கஹ்னி' என்ற போசின் அறிவியல் புதினம், வங்க மொழியில் எழுதப்பட்ட முதல் அறிவியல் புதினமாகும்.
பலநூறு அறிவியல் கட்டுரைகளை வங்க மொழியில் எழுதியுள்ள போஸ், Response in the Living and Non-லிவிங் (1902) , Plant response as a means of physiological investigation (1906), Comparative Electro -Physiology, Researches on Irritability of Plants (1913), Physiology of the Ascent of Sap (1923), The physiology of photosynthesis (1924), The Nervous Mechanisms of Plants (1926), Plant Autographs and Their Revelations (1927), Growth and tropic movements of plants (1928), Motor mechanism of plants(1928) ஆகிய ஆராய்ச்சி நூல்களையும் உலகிற்கு வழங்கியுள்ளார்.
1917 ல் கொல்கத்தாவில் போஸ் ஆராய்சிக் கழகத்தை நிறுவினார் போஸ். இன்றும் அது தனது அறிவியல் பணியை செம்மையாகச் செய்து வருகிறது. 1937, நவ. 23 ல் டாக்டர் சர். ஜெகதீச சந்திர போஸ் மறைந்தார். உலக அளவிலான பல்வேறு விஞ்ஞானக் கழகங்களின் விருதுகளையும் சர் உள்ளிட்ட கௌரவப் பட்டங்களையும் போஸ் பெற்றவர் போஸ். பணமும், அதிகாரமும் ஜெகதீச சந்திர போசை என்றும் மயக்கியதில்லை. அறிவியல் ஆய்வே தனது வாழ்வாகக் கொண்டிருந்த மகத்தான மேதையான போஸ், இக்கால விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டி.
