கார்முகப் படலம் - 780

bookmark

780.    

‘ஞான முனிக்கு ஒரு நாண் இலை’ என்பார்;
‘கோன் இவனின் கொடியோன் இலை’ என்பார்;
‘மானவன் இச் சிலை கால் வளையானேல்.
பீன தனத்தவள் பேறு இலள்’ என்பார்.
  
ஞான  முனிக்கு- தத்துவ ஞானியான   விசுவாமித்திரனுக்கு;  ஒரு
நாண்  இலை  -  சிறிதும்  நாணமில்லை;(உலகத்தவர் நம்மைப் பற்றி
என்ன  நினைப்பார்களோ  என்ற  எண்ணம் சிறிதும் இல்லாமல்   இப்
பெரிய  வில்லை இச் சிறியவனை நாணேற்றுமாறு செய்தான்);  என்பார்
-  என்று  சில  மாதர்  கூறுவர்;  கோன்  இவனின்  - (இச் சிறுனை
வில்லை   வளைக்குமாறு   கூறிய)   இந்த  அரசனைக்    காட்டிலும்;
கொடியோன்  - கொடியன் ஒருவன்; இலை என்பார்- இல்லை என்று
சொல்வார்கள்  (சில  மாதர்);  மானவன் - வீரனாகிய இந்தக்  குமரன்;
இச்  சிலை  -  இச்  சிவ  தனுசை;  கால்  வளையானேல் -  இரு
முனைகளையும்  வளைக்கா விட்டால்;(அப்போது); பீன தனத்தவள் -
பருத்த  கொங்கைகளுள்ள  இச்  சீதை;  பேறு  இலள்  -  திருமண
வாழ்க்கையை  இழந்தவளாவாள்;  என்பார்  -  என்று  கூறுவர் (சில
மாதர்).

ஞான  முனி   -   உலக   நடை  அறியாதவன்  என்பது  குறிப்பு.
மானம்-பெருமை. வீரம். பீனம் - பருமை.                       31