கார்முகப் படலம் - 778

bookmark

778.    

கரங்கள் குவித்து. இரு கண்கள் பனிப்ப.
‘இருங் களிறு இச் சிலை ஏற்றிலன் ஆயின்.
நரந்த நறைக் குழல் நங்கையும். நாமும்.
முருங்கு எரியில் புக மூழ்குதும்’ என்பார்.
 
கரங்கள்    குவித்து- (சில மாதர்  தம் வழிபடு    தெய்வங்களை
நினைந்து)   தம்   கைகளைக்   கூப்பிக்  கொண்டு;  இருங்களிறு  -
ஆண்யானை  போன்ற இக்குமரன்; இச் சிலை - இந்த  வில்லை; இரு
கண்கள் பனிப்ப - எங்களுடைய இரு கண்களும் ஆனந்தக்  கண்ணீர்
சொரியுமாறு; ஏற்றிலன் ஆயின் - நாண் ஏற்றாமல் போவானேயானால்;
நரந்தம் நறை  -  கஸ்தூரி  மணம்  கமழும்;  குழல்  நங்கையும் -
கூந்தலையுடைய  சீதையும்;  நாமும்  -  நாமும்;  முருங்கு எரியில்-
எரிக்கும்  நெருப்பில்;  புக  - அழுந்தி;  மூழ்குதும்  - மூழ்குவோம்;
என்பார் - என்று சொல்வார்கள்.

‘இக்     குமரன்  வில்  இறுக்காவிட்டால்    சீதை  கன்னியாகவே
இறக்கவேண்டிவரும்.  அதைவிட நெருப்பில்  பாய்ந்து  உயிர் விடுதலே
மேலானது.   நம்  அன்பான  தோழி   அவ்வாறு   செய்தால்  நாமும்
அவளோடு எரிபுகுந்து இறப்போம்’ என்றார் சில  பெண்கள்.  நரந்தம் -
கத்தூரி  ‘நரந்தம்  அரைப்ப   நறுஞ்சாந்து   மறுக’ - மதுரைக் காஞ்சி.
553.                                                     29