கார்முகப் படலம் - 779

bookmark

779.    

‘வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்
“கொள்” என முன்பு கொடுப்பதை அல்லால.
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து. இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை’ என்பார்.
 
வள்ளல்   - கொடுக்கும் குணமுடைய சனக மன்னன்; மணத்தை -
(சீதையின்)  திருமணத்தைச்  (செய்ய)  ;  மகிழ்ந்தனன்  என்றால்  -
விரும்பியிருப்பான்    என்றால்;   முன்பு   -   (இந்த    இராமனைக்
கண்டவுடனே) முதலில் தானே; கொள் என - (இச் சீதையை)  மணந்து
கொள்க    என்று;    கொடுப்பதை    அல்லால்   -   (அவளை)
கொடுப்பதை   விட்டு;  வெள்ளம் அணைத்தவன் - கங்கையைத் தன்
சடையிலே  தாங்கிய  சிவனது;  வில்லை  எடுத்து - வில்லை எடுத்து
வந்து; இப் பிள்ளைமுன் இட்டது - (அதை நாணேற்றி வளைக்குமாறு)
இந்தக் குமரன் முன்னே வைத்தது; பேதைமை என்பார் - அறிவீனமே
என்று சொல்வார் சிலர் (மாதர்).

சீதையின்   மணத்தை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் சனகனுக்கு
இருந்திருந்தால்  தக்க  வரன் வந்தபோது அவளை அவனுக்கு  மணம்
முடிக்க  வேண்டும்.  அதைவிட்டுச்  சிவவில்லை வளைக்க  வேண்டும்
என்பது   முறையற்றது.   இதனால்  ஒன்று  அவனுக்குச்    சீதையின்
திருமணத்தில்  விருப்பம்  இல்லாதிருக்க வேண்டும். அல்லது.  அவன்
அறிவற்ற மூடனாக இருக்கவேண்டும்.

வள்ளல்  -   இராமனைக்   குறிப்பதாகக்   கொண்டும்   பொருள்
கூறலாம்.                                                 30