கார்முகப் படலம் - 777
மாதர்கள் கூற்று (777-780)
777.
‘காணும் நெடுஞ் சிலை கால் வலிது’ என்பார்;
‘நாணுடை நங்கை நலம் கிளர் செங் கேழ்ப்
பாணி. இவன் படர் செங் கை படாதேல்.
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள்’ என்பார்.
(சில மாதர்) காணும் - காணப்படுகின்ற; நெடுஞ்சிலை - நீண்ட
இந்த வில்; கால் வலிது என்பார் - அடிப் பகுதி வலிமையுடையது
என்றுசொல்வார்கள்; நாண் உடை நங்கை - (சில மாதர்)
நாணத்தையுடைய சீதையின்; நலம்கிளர் - அழகு விளங்கும்;
செங்கேழ்ப் பாணி - சிவந்த கையில்; இவன் படர் செங்கை - இந்த
இராமனது நீண்ட கைகள்; படாதேல் - பற்றாமல் போனால்;
(இராமன் சீதையைப் பாணிக் கிரகணம் செய்யா விட்டால்); வாள்
நுதல் நங்கையும் - ஒளியுள்ள நெற்றி படைத்த சீதையும்; வாழ்வு
இலள் - (இனி) வாழ்வு அற்றவளே; என்பார் - என்று சொல்வார்கள்.
நங்கையும் - உம்மை இராமனும் வாழ்வு இலன் என்பதைக்
குறிக்கும். நங்கை வாழ்விலள் என்பதற்கு - சீதை மணமின்றிக்
கன்னியாகவே இருக்க வேண்டியவள்தான் என்ற கருத்துப் புலனாகும்.
இதுவரை ஆற்றல் மிக்க அரசர் பலரும் தோற்றோடிய செயலை
அறிந்தவராதலால் இந்தக் குமரனும் அத்தகையவன் ஆவனோ என்று
மாதர் இரங்கிக் கூறினர். 28
