கார்முகப் படலம் - 776
காமன் மங்கையர்மேல் கணை தொடுத்தல்
மங்கையரின் மனநிலையும் வாய்மொழியும்
776.
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்.
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா.
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான்.
தூய தவங்கள்- புனிதமான தவங்களை;தொடங்கிய தொல்லோன்
- தொடங்கி முடித்த பழையவனான கோசிக முனிவனால்; ஏயவன் -
ஏவப்பெற்ற இராமன்; வல்வில் இறுப்பதன் முன்னம் - அந்த வலிய
வில்லைக் (கையில் எடுத்து முறிப்பதற்கு முன்பே; அனங்கன் -
மன்மதன்; சேயிழை மங்கையர் - செவ்விய அணிகள் பூண்ட
பெண்களின்; சிந்தை தொறு எய்யா - மனம் தோறும் (மலர்
அம்புகளை) எய்து; ஆயிரம் வில்லை - மிகப்பல விற்களை;
இறுத்தான் - முறித்தான்.
இராமன் சிவதனுசைக் கையில் எடுக்கச் சென்றபோது பார்த்த
மங்கையர் பலரும் காமதேவனின் மலர்க் கணைக்கு இலக்காயினர்
என்பது.
தொடங்கிய பெருந் தவங்களை விடாது செய்து முடித்து முழு
வெற்றியும் பெற்ற முதியோன் ஆதலின் ‘தூய தவங்கள் தொடங்கிய
தொல்லோன்’ என்றார். 27
