கார்முகப் படலம் - 774
விசுவாமித்திரன் முகக்குறிப்பை அறிந்த இராமன்
வில்லினை நோக்கி எழுதல்
774.
நினைந்த முனி பகர்ந்த எலாம்
நெறி உன்னி. அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கி.
போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
வனைந்தனைய திருமேனி
வள்ளலும். அம் மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து. அந்த
நெடுஞ் சிலையை நோக்கினான்.
அம் முனி - அந்தச் சதானந்த முனிவன்; நினைந்து -
ஆலோசித்து; பகர்ந்த எலாம் - கூறியவற்றை யெல்லாம்; அறிவனும் -
ஞானியான கோசிகனும்; நெறி உன்னி - முறைப்படி சிந்தித்து; தன்
சடை புனைந்த முடி - (சதானந்தன் கூறிய சொல்லுக்கு உடன்
பட்டதைக் குறிப்பிக்குமாறு) அழகிய தன் சடைமுடியை; துளக்கி -
அசைத்தவனாய்; போர் ஏற்றின் - போர் செய்ய வல்ல காளை
போன்ற இராமனது; முகம் பார்த்தான் - முகத்தை (இந்த வில்லை நீ
முறிப்பாயாக என்னும் குறிப்பில்) நோக்கினான்; வனைந்தது அனைய
- ஓவியத்தில் எழுதியது போன்ற; திருமேனி வள்ளலும் - திருமேனிப்
பொலிவுள்ள அந்த இராமனும்; அம் மாதவத்தோன் - பெருந்தவத்தை
யுடையவனான விசுவாமித்திரன்; நினைந்த எலாம் - எண்ணிய மனக்
குறிப்பையெல்லாம்; நினைந்து - தானும் கருதி (பிறகு); அந்த
நெடுஞ்சிலையை - நெடிய அந்தச் சிவதனுசை; நோக்கினான் -
பார்த்தான்.
‘நினைந்து முனி பகர்ந்த எலாம் நெறியுன்னி’ என்றது தெய்வ
இயல்பு வாய்ந்தவள் சனகன் மகள் என்பதனையும் அவளை
அடைவதன் அருமைகளையும் ‘இவன் ஏற்றின் நன்று’ என்று
சதானந்தர் கூறியதையும் உட்கொண்டு. வனைந்தனைய - வனைந்தது
அனைய. அல்லது வனைந்தால் அனைய எனலாம். வில்லை
நோக்கியது - இந்த வில்லை எந்த இடத்தில் பற்றி எடுக்கலாம் என்ற
ஆலோசனையால் ‘போரேறு’ - ‘புட்குழிஎம் போரேற்றை’ - (பெரிய
திருமடல். 117). 25
