கார்முகப் படலம் - 775
இராமன் எழுதல்
கலி விருத்தம்
775.
பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
‘அழிந்தது. வில்’ என. விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள். முப் பகை வென்றார்.
பொழிந்த நெய்- ஒருசேரச் சொரிந்த நெய்யாகிய;ஆகுதி வாய்வழி
- ஆகுதி வீழ்ந்த இடத்திலிருந்து; பொங்கி எழுந்த - பொங்கி மேல்
எழுந்த; கொழுங்கனல் என்ன - நன்றாக எரிகின்ற நெருப்புப் போல;
எழுந்தான் - (இராமன் சிவதனுசு வைத்துள்ள இடம் நோக்கி)
செல்லலானான்; விண்ணவர் - (அப்போது) தேவர்கள் (இராமன்
வில்லை முறிப்பது உறுதி என்ற துணிவால்); வில் அழிந்தது என -
சிவதனுசு முறிந்து விட்டது என்று; ஆர்த்தார் - ஆரவாரம்
செய்தார்கள்; முப்பகை வென்றார் - (காமம். வெகுளி. மயக்கம்என்ற)
மூன்று உட்பகைகளையும் வென்ற முனிவர்; ஆசிகள் -
(இராமனுக்கு) வாழ்த்துக்களை; மொழிந்தனர் - கூறினார்கள்.
முனிவனது குறிப்பு தன் வீரத்தைத் தூண்டியதும் அந்த வில்லை
நோக்கிய இராமன் உடனே எழுந்தான் என்பது. வேள்வி நெருப்பில்
ஒருசேரப் பொழியப்பெற்ற நெய்யின் ஆகுதி. இராமனது வீரக்
கனலைத் தூண்டிய முனிவரது குறிப்பு நோக்கத்திற்கு ? ஏற்ற
உவமையாயிற்று. ‘நெய்பெய் தீயின் எதிர்கொண்டு’ - குறுந். 106.
வேள்விக் கனல் உவமையால் தூய்மையும் நன்மையும் தொனிக்கும்.26
