கார்முகப் படலம் - 770

bookmark

770.    

‘வல் வில்லுக்கு ஆற்றார்கள்.
   மார வேள் வளை கருப்பின்
மெல் வில்லுக்கு ஆற்றாராய்.
   தாம் எம்மை விளிகுற்றார்;
கல் வில்லோடு உலகு ஈந்த
   கனங் குழையைக் காதலித்து.-
சொல் வில்லால் உலகு அளிப்பாய்!-
   போர் செய்யத் தொடங்கினார்.
 
சொல்    வில்லால் - சொல்லாகிய வில்லைக்   கொண்டு;  உலகு
அளிப்பாய்  - உலகத்தைப் பாதுகாப்பவனே!; வல் வில்லுக்கு - இந்த
வலிய   வில்லை;   ஆற்றார்கள்  -  வளைக்கும்  ஆற்றல்  இல்லாத
அரசர்கள்; மாரன் வேள் - மன்மதனது; வளை கருப்பின் - வளைந்த
கரும்பாகிய;  மெல்  வில்லுக்கு - மெல்லிய வில்லைத் தாங்குவதற்கும்;
ஆற்றாராய்  - வலிமையற்றவராய்;  கல் வில்லோடு - மலை போன்ற
இந்த  வில்லோடு;  உடன்வந்த  - சேர்ந்து  வந்த; கனங்குழையை -
குழை பூண்ட சீதையை; காதலித்து - விரும்பி;  தாம் - அவ்வரசர்கள்;
எம்மை   விளிகுற்றார்  -  எங்களை  அழைத்துப்  போர்  செய்யத்
தொடங்கினார்கள்.

பணயமாக    வைத்த வில்லை அசைக்கவும் முடியாத அவ்வரசர்கள்
பெண்ணின்  மையலாலும்  பட்ட  அவமானத்தாலும்   சினம் கொண்டு
ஒன்று     கூடிப்      போர்புரியலாயினர்     என்பது.    வரத்தால்
விருப்பமானவர்க்கு  அருள்  புரிந்தும்.    சாபத்தால்  மாறானவர்க்குத்
தீங்கு   விளைத்தும்  தம்  சொல்  வலிமையைக்    காட்டுபவராதலின்.
விசுவாமித்திரனைச் ‘சொல் வில்லால் உலகளிப்பாய்’ என்றார்.       21