கார்முகப் படலம் - 771

bookmark

771.    

‘எம் மன்னன் பெருஞ் சேனை
   ஈவதனை மேற்கொண்ட
செம் மன்னர் புகழ் வேட்ட
   பொருளேபோல் தேய்ந்ததால்;
பொம்மென்ன வண்டு அலம்பும்
   புரி குழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை. தமது
   ஆசைபோல் ஆயிற்றால்.
 
இம் மன்னன்- இந்தச் சனகனது; பெருஞ்சேனை -  பெரிய படை;
ஈவதனை மேற்கொண்ட- (இடைவிடாது புரிந்த போரினால்) கொடைத்
தொழிலை  மேற்கொண்டுள்ள;  செம்மன்னர்  -  நீதியுள்ள அரசரின்;
புகழ்வேட்ட -  புகழையே  விரும்பிய; பொருளே போல் - செல்வம்
போல; தேய்ந்தது  -  வரவரக்  குறையலாயிற்று;  பொம்மென்ன  -
(ஆயினும்)  ‘பொம்’  என்னும்  ஒலியுண்டாக;  வண்டு  அலம்பும்  -
வண்டுகள்  ஒலிக்கப்  பெற்றதும்;  புரிகுழலை - கடை  குழன்றதுமான
கூந்தலையுடைய  சீதையை;  காதலித்த  -  விரும்பிய; அம்  மன்னர்
சேனை  - (பகை) அரசர்களின் சேனை; தமது ஆசை போல் - தமது
ஆசை போல; ஆயிற்று - பெருகிற்று.  

வேந்தர்   பலர் கூடி இடைவிடாது செய்த போர்களாதலால் தனித்து
நின்ற  சனகனது  படை  சுருங்கியது.  பகைவர்  சேனைகள்  பெருகின
என்பது.                                                  22