கார்முகப் படலம் - 764

bookmark

சானகியின் வரலாறு

764.    

‘கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ?
வார் சடை அரன் நிகர் வரத! நீ அலால்.
யார் உளர் அறிபவர்? இவற்குத் தோன்றிய
தேர் முக அல்குலாள் செவ்வி கேள்’ எனா.
 
கார்முக     வலியை- இந்த வில்லின் வலிமையை; யான் கழறல்
வேண்டுமோ - நான் எடுத்துக் கூற வேண்டுமோ?; வார் சடை அரன்
- நீண்ட சடைமுடியுடைய சிவபிரானை; நிகர்வரத - ஒத்த முனிவனே!;
நீ  அலால்  -  உன்னையல்லாமல்;  அறிபவர் - (இதன் வலிமையை)
உண்மையாக  அறியக்  கூடியவர்;  யார்  உளர் - யார் இருக்கின்றார்
(யாருமில்லை);   இவற்கு  -  இந்தச்  சனகராசனுக்கு;  தோன்றிய -
(மகளாகப்)  பிறந்த;  தேர்முக  அல்குலாள் - தேர்த்தட்டுப் போன்ற
அல்குலையுடைய   சீதையின்;   செவ்வி   -  வரலாற்றை;  கேள் -
கேட்பாயாக; எனா - என்று சொல்லி.

கார்முக     வலியை நான் சொல்ல வேண்டுவதில்லை. ? ஏனெனில்.
அதை   அறுபதினாயிரம்   பேர்   சுமந்து   வந்ததை   நீரே  நேரில்
கண்டதால்  அதன்  வலிமை  உமக்குத்  தெரியும்.  வில்லை  அளித்த
சிவபெருமான்   அனைய   நீயே     அவ்வில்லை   வளைப்பிக்கவும்.
சானகியின்    திருமணத்தை    நிறைவேற்றி     வைக்கவும்   அருள்
புரியவேண்டும்   என்பது.   ‘வார்சடை  அரன்  நிகர்   வரத’  என்ற
விளியால் உணர்த்தப் பெறுகிறது - கருத்துடையடைகொளியணி.     15