கார்முகப் படலம் - 765

bookmark

765.    

‘இரும்பு அனைய கரு நெடுங் கோட்டு
   இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து.
   அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் - கலப்பை
   வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு இல் நிலம். வேள்விக்கு.
   அலகு இல் பல சால் உழுதேம்.
  
வேள்விக்கு   - வேள்வி செய்யும் பொருட்டு; இரும்பு அனைய -
இரும்பை ஒத்த (வலிய); கரு நெடு - பெரிய நீண்ட; இணைக் கோட்டு
-  இரு  கொம்புகளையுடைய;  ஏற்றின்  -  காளையின்; பணை ஏற்ற
பெரும்  பியலில் -  பருத்த பெரும் பிடரியின் மேல்; பளிங்கு நுகம்
பிணைத்து  -  பளிங்கால் இழைத்த நுகத்தடியைப் பூட்டி;  அதனோடு
அணைத்து - அதனோடு சேர்க்கப்பட்டு; ஈர்க்கும் - இழுத்துக்கொண்டு
போகப்படுகின்ற;  வரம்பு  இல்  மணி  -  எண்ணற்ற இரத்தினங்கள்
பதித்த; பொன் கலப்பை- பொன் கலப்பையில்; வயிரத்தின் கொழு -
வயிரத்தால் ஆகிய கொழுவை; மடுத்திட்டு - சேர்த்து; உரம் பொருவு
இல் - உரவளத்தில் ஒப்பு இல்லாத; நிலம் - பூமியை; அலகு இல் பல
சால்  -  அளவற்ற  பல  சால்கள்;  உழுதேம் - (பன்முறை) நாங்கள்
உழலானோம்.

வேள்வி  செய்வதற்காக    நிலத்தை    உழுத   பாங்கு    இதிற்
சொல்லப்படுகிறது. சால்: வயலில் ஒரு முறை நீள உழுதல்.         16