காரல் மார்க்ஸ் - 1
உலகின் தலை சிறந்த காதல், நட்பு, சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால், அப்பெருமை காரல் மார்க்சுக்குத் தான் போய் சேரும். வறுமை, நோய், துண்டம், பசி, போராட்டம் என அனைத்தையும் வாழ்க்கை முழுவதும் சந்தித்த காரல் மார்க்ஸ், தனது கடைசி காலம் வரையில் பாட்டாளி வர்கத்துக்காகவே உழைத்தவர்.பாட்டாளிகளின் விடுதலைக்காக பாடுபட்டவர். காரல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். கார்ல் மார்க்சின் தந்தை யூதரான ஹைன்றிச் மார்க்சு கிறித்தவராக மதம் மாறினார். இவரது தந்தை வசதி படைத்த வழக்கறிஞர் , கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார்.மகன் காரல் மார்க்சுக்கு அதிகம் சுகந்திரம் அளித்தார் அவரது தந்தை ஹைன்றிச் மார்க்சு. காரல் மார்க்ஸின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.
1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். தமது புரட்சி மிக்க எழுத்துக்களால் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப் படுகிறார்கள் என்பதை எழுதி பாட்டாளிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தனது எழுத்துக்களால் ஐரோப்பாவில் அக்காலத்தில் நிலவிய முதலாளித்துவக் கொள்கைக்கு சவுக்கடி கொடுத்தவர் . ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.
ஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் ஜான் ஜாக் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "பொதுவுடமை அறிக்கை" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிரான்சு, பெல்சியம், ஜெர்மனி ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ், இலண்டன் சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.
மார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சு வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்சு கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்சு தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது.
