காரல் மார்க்ஸ் - 2
கார்ல் மார்க்சின் பிறந்த இடம் - டிரையர். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.
அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் எதிரிகளுக்குப் புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். மனித வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.
மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.
