கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

bookmark


கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும், பாடகரும் ஆவார். நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்து விட்டுப் போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து எரிந்து, திரையுலகில் ஒரு புதுமையைப் படைத்தவர் அவர்.

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக இவரது இளமைப் பருவம் மிகவும் ஏழ்மை நிலையில் கழிந்தது. பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். 'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதம் பூத்தது!

தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததை மறைத்தே டி.ஏ.மதுரத்தை மணந்தார் என்.எஸ்.கே கலைவாணருக்கு ஏற்கெனவே திருணமான விஷயத்தை அவரது குழுவில் இருந்த புளிமூட்டை ராமசாமி என்பவர் மதுரத்திடம் போட்டு உடைக்க, இதனால் சில நாட்கள் கலைவாணரிடம் மதுரம் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு இருவரும் சமரசம் ஆனார்கள்.

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர்.

காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார். நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி டிரக் என்பதை முத்ன முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர்.

தான் செய்யும் நகைச்சுவை 999 பேரை சிரிக்க வைத்து ஒரே ஒருவரை புண்படுத்தி அழ வைத்தாலும், அது நகைச்சுவையே இல்லை என்பது இவரது கருத்து. 1957– ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை எதிர்த்து நின்றவர், ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல டாக்டரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்? இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர். நகைச்சுவையில் கூட இன்றைய சில நகைச்சுவை நடிகர்களைப் போல ஆபாச வார்த்தைகளை சினிமாவில் ஒரு போதும் பேசியது கிடையாது அவ்வளவு நல்ல குணம் கொண்ட ஒரு நல்ல ஆத்மா.

என்.எஸ். கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர். ராதாவை வில்லனாகப் போடாமல் போய் விடவே, அவரைக் கொல்ல துப்பாக்கியை தயார் செய்து கொண்டு இருந்த விஷயம் தெரிந்து என்.எஸ். கே நேரிலே வந்து, " ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ? அதான் போடலை" என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச் சுடச் சொன்னாராம் ராதா.

சோதனையும், வேதனையும் இந்த உலகத்தில் யாரையும் விட்டு வைக்க வில்லை .என். எஸ்.கே மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?. அவருக்கும் ஒரு சோதனை காலம் வந்தது. இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைதானார்கள் லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். 'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்து அன்று கோவையில் காருக்கு பெட்ரோல் போட்டதுக்கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார்!' – கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போது எல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பார்!. அந்த வழக்கில் இருந்து தான் வெளிவர, என். எஸ்.கே, தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பாதிக்கு மேலான சொத்துக்களை செலவு செய்ய வேண்டி இருந்தது. அவை யாவும் என். எஸ்.கே வாழ்க்கையில் மனம் நொந்து போன நாட்கள்.

பிற்பாடு சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே. சம்பந்தம் முதலியார் ஆவார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்.

அவரது நடிப்பையும், நகைச்சுவை உணர்வையும் பார்த்த மக்கள் அவரைப் பல விதங்களிலும் பாராட்டினார்கள். ஆனால், என்.எஸ்.கே. எந்த சூழ்நிலையிலும் தன்னடக்கத்துடன் தான் இருந்துள்ளார். என்.எஸ்.கே. தன்டைக்கமாக சொல்லுவார், " சிலர் என்னை தமிழ்நாட்டு சார்லி சாப்ளின் என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்'' என்று.

ஒரு முறை பத்திரிகை நண்பர்கள். " அதிசிய மனிதர் ஈ .வே.ரா வரிசையில் இப்போது கலைவாணர்" என்று எழுதிவிட இதைப் பற்றி சில நிருபர்கள் பெரியாரிடமே கேட்டும் விட்டார்கள். அதற்குப் பெரியார், " தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்த கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும் போது அழுகிய முட்டையும், நாற்காலியையும் வீசி எறிகிறார்கள் ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு கொடுத்துட்டுக் கை தட்டிட்டு போறாங்க. அந்த வகையில என்னை விட அவரு உசந்துட்டாரு."என்றாராம்.

"தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும் " என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல். தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நின்றார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது, ஒரு வெள்ளி கூஜா. இறைவனுக்கு ஒரு கூறி, அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றாராம்.

நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது. சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர் இன்றும் எல்லோர் மனதிலும் வாழ்கிறார்.