கக்கன்
கக்கன் விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.
கக்கன் ஜூன் 18, 1907 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை படித்தார்.பள்ளிக் கல்வியைப் படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய் உதவித் தொகை அளித்தது. கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். வைத்தியநாத அய்யர் வழிகாட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். பல இன்னல்களை சிறையில் சந்தித்தார். ஒரு முறை பிரிட்டிஷ் அரசு இவரை சவுக்கால் அடித்து தோலை ரணமாக்கியது. குதிரையின் கால்களால் மிதிபட்ட கதையும் உண்டு.
1932 லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவப் பெண்ணைத் தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாகத் தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.
அதே போல, கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை,அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார்.மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக அதனைக் கண்டித்தார்.அவர் தம்பி விசுவநாதன் வேலை இல்லாமல் இருந்த காலத்தில், இவரது சிபாரிசு தேவைப் பட்டது. ஆனால், இது போன்ற காரியங்களுக்கு தனது பதிவியை சிபாரிசு என்ற பெயரில் துஷ் பிரயோகம் செய்ய மாட்டேன் என மறுத்து விட்டார்.
அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்தக் கோப்பை வாங்கி கிழித்துப் போட்டு விட்டு, " எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் இருக்க. இப்படி ஒரு இடம் தேவையா?" எனச் சாடினார். அவரது தம்பி விசுவநாதனுக்கு காவல் துறையில் வேலை கிடைத்தது அப்போது, "இது நேர்மையாக கிடைத்து இருந்தாலும் என் சிபாரிசால் தான் கிடைத்தது என்பார்கள்! அதனால் இந்த வேலை இவனுக்கு வேண்டாம்" எனத் தடுத்து விட்டார்.
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் . மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன. இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.
லஞ்ச ஒழிப்புத் துறையை தமிழகத்துக்கு கொண்டு வந்த பெருமை கக்கனைத் தான் சாரும்.தனது சொந்தப் பிள்ளைகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்தார்.கேட்டதற்கு என் சக்திக்கு என் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வைக்க முடியும் என்றாராம். விடுதலைப் போரில் ஈடுபட்டதர்க்காகத் தனக்கு கொடுத்த நிலத்தைக் கூட விநோபாபாவேவின் பூதான இயக்கத்திற்கு தந்து விட்டார். தேர்தலுக்கு தனது சொந்தப் பணத்தை செலவு செய்தார். எத்தனையோ முறை அரசு வாகனத்தில் செல்லாமல் பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போன வரலாறெல்லாம் இவர் வாழ்வில் அதிகம் உண்டு. இவ்வாறு எளிமைக்கு ஒரு உதாரணமான கக்கனை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். படிக்கும் இளம் வாசகர்கள் இப்படியும் ஒரு தலைவர் நம் நாட்டிலா வாழ்ந்தார்? என்று ஆச்சர்யப்படலாம். உண்மை தான் தமிழகம் பெற்றெடுத்த அந்த தவப் புதல்வனின் மரணம் பலருக்கு கண்ணீரை வரவழைக்கலாம்.
பிற்காலத்தில் முடக்கு நோயால் பாதிக்கப்பட்டார் கோட்டக்கல் சித்த மருத்துவ மனையில் கொண்டு போய் சேர்த்தனர், அங்கு வைத்தியம் பார்க்க பணம் இல்லை என்ற நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.ஜி .ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு பதறி அடித்துக் கொண்டு வந்தார் கக்கனை பார்த்துக் கலங்கினார். அந்த மூன்றேழுத்து வள்ளல் கக்கனுக்கு உதவி செய்ய காத்து இருந்தார். ஆனால், கக்கன் எம்.ஜி .ஆர் அவர்களிடம் "நீங்கள் என்னைப் பார்க்க வந்ததே போதும்" என்று அவரது உதவியைப் பெற மறுத்து விட்டார். அப்போது தான், அந்த அரசு மருத்துவ மனையில் உள்ளவர்களுக்கே தெரியும், வந்திருப்பது கக்கன் என்று. இறுதியில் அங்கேயே மடிந்து போனார் (கதி இன்றி).
