எஸ்.எஸ்.இராசேந்திரன்

எஸ்.எஸ்.இராசேந்திரன்

bookmark

ஆரம்பகால வாழ்க்கை:

சே. சூ. இராசேந்திரன் சேடபட்டியில் தொடக்கக் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்க அடுத்துள்ள நகரப் பள்ளிக்குப் போக வேண்டும். குறைந்த வயதுடையவராக இராசேந்திரன் ஓராண்டு வீட்டிலேயே இருந்தார். அப்பொழுது அவர் தந்தைக்கு நண்பரான சுப்பு ரெட்டியார் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.

பின்னர், "பாய்ஸ் நாடகக் கம்பெனி"யில் குழந்தை நடிகராகச் சேர்ந்தார். பின்னர் தி. க. சண்முகம் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபாவில் துணை நடிகராக நுழைந்து கதாநாயகனாக உயர்ந்தார்.பின்னர் அக்குழுவில் இருந்து வெளியேறினார்.

திரைப்படத் துறையில் இவரின் பயணம் :

ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சே.சூ.இராஜேந்திரன், ஜி. இராமநாதனின் இசையமைப்பில் பின்னணிப்பாடகராக திரையுலகில் நுழைந்தார். கலைஞர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் கருணாநிதியின் அம்மையப்பன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த முதலாளி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஏரிக்கரை மீது போறவளே பெண்மயிலே.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1958-இல் இவர் நடித்த "தை பிறந்தால் வழி பிறக்கும்" வெற்றிகரமாக ஓடியது.

எம்.ஜி.ஆருடன் சிறந்த நட்பினைப் பேணி வந்தார். எம்.ஜி.ஆர். இரண்டு வேடங்களில் தோன்றி நடித்த ராஜா தேசிங்கு (1960) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சாரதா என்னும் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கே. எஸ். கோபாலகிருட்டிணனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் நாடகத்தின் தொடர்பை சே.சூ.இரா.விட்டுவிடவில்லை. எஸ்.எஸ்.ஆர்.நாடக சபா என்னும் அமைப்பின் வழியாக பல நாடகங்களை நடத்தினார். அதன் வழியாக பின்னாளில் திரைவுலகில் புகழ்பெற்ற மனோரமா, ஷீலா ஆகியோரை நடிகர்களாக அறிமுகம் செய்தார்.

சில காலம் திரையுலகைவிட்டு ஒதுங்கிய இவர் 1982ஆம் ஆண்டில் இரட்டை மனிதன் என்னும் படத்தில் நடித்தார். அதன் பின்னர் சில படங்களில் கெளரவ வேடமிட்டார். ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். பின் இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.

அரசியல் பயணம்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இராசேந்திரன் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1958 ஆம் ஆண்டில் தி.மு.க. அறிவித்த பிரதமர் நேருவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தின் பொழுது முன்னெச்சரிகை நடவடிக்கையாக சே. சூ. இரா. கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் 12 நாள்கள் அடைக்கப்பட்டார். 1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக திமுக-வின் சார்பில் 1970 ஏப்ரல் 3 ஆம் நாள் முதல் 1976 ஏப்ரல் 2 வரை பணியாற்றினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக 1980 இல் போட்டியிட்டு ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார்.

1984 ஆம் ஆண்டில் ம.கோ.இரா. மருத்துவமனையில் இருந்த பொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ம.கோ.இரா. நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார். 1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

மறைவு:

மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் அக்டோபர் 24, 2014 காலை 11 மணிக்கு சென்னையில் காலமானார்.