எழுச்சிப் படலம் - 861
மகளிர் கூட்டம் செல்லுதல்
861.
நுண் சிலம்பி வலந்தன நுண் துகில்.
கள் சிலம்பு கருங் குழலார் குழு
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்.
புள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே.
நுண் சிலம்பி- சிறிய சிலந்திப் பூச்சி; வலந்தன - பின்னியது
போன்ற; நுண் துகில் - மெல்லிய ஆடைகளையணிந்த; கள் சிலம்பு -
வண்டுகள் (மொய்த்து) ஒலிக்கின்ற; கருங் குழலார் - கரிய
கூந்தலையுடைய மகளிரின்; குழு - கூட்டம்; சிலம்பு உள் சிலம்ப -
(அடிகளில் பூண்ட) சிலம்புகள் உள்ளே உள்ள பரல்கள் ஒலிக்க;
ஒதுங்கலால் - நடந்து செல்வதால்; புள் சிலம்பிடு - பறவைகள்
ஒலிக்கின்ற; பொய்கையும் - தடாகத்தையும்; போன்றது - ஒத்தது.
மெல்லிய ஆடையணிந்த மகளிர் கூட்டம் அலைபரந்த நீரையுடைய
பொய்கைக்கு ஒப்பாயிற்று. அவர்தம் காற் சிலம்பொலி
பொய்கையிலுள்ள அன்னப் பறவைகளின் ஒலிக்கு ஒத்தாயிற்று. 45
