எழுச்சிப் படலம் - 862

bookmark

மகளிர் கண்களைக் கண்ட ஆடவர் மகிழ்ச்சி
 
862.    

தெண் திரைப் பரவைத் திரு அன்னவர்.
நுண் திரைப் புரை நோக்கிய நோக்கினை.
கண்டு இரைப்பன. ஆடவர் கண்; களி
வண்டு இரைப்பன. ஆனை மதங்களே.*
 
தெண்திரைப்  பரவை- தெளிந்த அலைகளோடு கூடிய பாற்கடலில்;
திரு  அன்னவர் - தோன்றிய திருமகளைப் போன்ற  பெண்கள்; நுண்
திரை   -   மெல்லிய  திரைச்  சீலையிலுள்ள;  புரை  நோக்கிய  -
துளையினால் பார்க்கின்ற; நோக்கினை - பார்வையை; கண்டு - கண்டு;
ஆடவர் கண் இரைப்பன - காளையரின் கண்கள் மகிழ்ந்து ஆரவாரம்
செய்தன;   யானை  மதங்கள்  -  யானைகளின்  மதநீரைக்  கண்டு;
களிவண்டு  -  களிப்புள்ள  வண்டுகள்; இரைப்பன - (மகிழ்ச்சியான)
ஆரவாரம் செய்தன.

மகளிர்     சிவிகையில்   போகும்      பொழுது     திரையிட்டுச்
செல்கின்றார்கள். திரையின் துளையால்  வெளிப்படும்   அப்பெண்களின்
கண்களைக்   கண்டு   ஆடவரின்   கண்கள்     மகிழ்ந்தன  என்பது.
யானையின்   மதநீரைக்   கண்டு   வண்டுகள்    மகிழ்வதும்.  மகளிர்
கண்களைக் கண்டு ஆடவரின் கண்கள் மகிழ்வதும்   சேனையில் நிகழக்
கூடியன. இவ்விரண்டையும்  தனித்தனியே  ஒன்றுபடக் கூறியது தொடர்
முழுதும் உவமையணியாகும்.                                  46