எழுச்சிப் படலம் - 880

bookmark

கஞ்சுக மாக்கள் கைகேயியைக் காத்துச் செல்லுதல்

மெய்காப்பாளர் காவல் புரிகை
 
880.    

காரணம் இன்றியேயும்
   கனல் எழ விழிக்கும் கண்ணார்.
வீர வேத்திரத்தார். தாழ்ந்து
   விரிந்த கஞ்சுகத்து மெய்யார்.
தார் அணி புரவி மேலார்.
   தலத்து உளார். கதித்த சொல்லார்.
ஆர் அணங்கு அனைய மாதர்.
   அடி முறை காத்துப் போனார்.
 
காரணம் இன்றியேயும் - காரணம் எதுவும் இல்லாமல்; கனல் எழ
விழிக்கும்  -  நெருப்புப்  பொறி  பறக்க  விழிக்கும்;  கண்ணார்  -
கண்ணகளையுடையவரும்; வீரம்  வேத்திரத்தார்  - வீரம் தோன்றும்
பிரப்பங்கோலை ஏந்தியவர்களும்;  தாழ்ந்து  விரிந்த  -  பாதம்வரை
தாழ்ந்து   பரவிய;  கஞ்சுகத்து  மெய்யார்  -  சட்டையைத்  தரித்த
உடம்புடைய  கஞ்சுக மாக்கள்; தார் அணி புரவிமேலார் - கிண்கிணி
மாலை  யணிந்த குதிரைகளின் மேல் இருப்பவர்களும்; தலத்து உளார்
-  தரையில் நடப்பவர்களும்;  கதித்த சொல்லார் - பிறரை வருத்தும்
கடுஞ்சொற்களை யுடையவருமாகி; ஆர் அணங்கு அனைய - தெய்வப்
பெண்களையொத்த;  மாதர் - மகளிரின்; அடி - பாதங்களை; முறை -
முறைப்படி; காத்துப் போனார் - பாதுகாத்துச் சென்றார்கள்.

கனல்     விழிக்கும் கண் முதலியவற்றையுடைய கஞ்சுக    மாக்கள்
குதிரைமேல்  இவர்ந்தும்.  தரையில்  நடந்தும்   அரசன் தேவியருக்குக்
காவலாகச் சென்றனர்.                                       67