எழுச்சிப் படலம் - 881
சுமித்திரை செல்லுதல்
881.
விரி மணித் தார்கள் பூண்ட
வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர்த் தடங் கண் நல்லார்
ஆயிரத்து இரட்டி சூழ.
குரு மணிச் சிவிகைதன்மேல்.
கொண்டலின் மின் இது என்ன.
இருவரைப் பயந்த நங்கை.
யாழ் இசை முரல. போனாள்.
விரி மணித் தார்கள்- விரிந்த கிண்கிணி மாலைகளை; பூண்ட -
அணிந்த; வேசரி வெரிநில் - கோவேறு கழுதைகளின் முதுகில்;
தோன்றும்- காணப்படுகின்ற; அரி மலர்த்தடங்கண் - செவ்வரி பரந்த
தாமரை போன்ற விசாலமான கண்களையுடைய; நல்லார் - பெண்கள்;
ஆயிரத்து இரட்டி சூழ - இரண்டாயிரவர் (தன்னைச்) சூழ்ந்து வர;
இருவரைப் பயந்த நங்கை - (இலக்குமணன் சத்துருக்கனன் ஆகிய)
இருவரையும் மக்களாகப் பெற்ற சுமித்திரை; கொண்டலின் மின் -
மேகத்தில் தோன்றும் மின்னல்; இது என்ன - இவ் உருவம் என்று
பார்த்தவர் கருதும்படி; குருமணி சிவிகைதன்மேல் - நீல இரத்தினம்
இழைக்கப் பெற்ற பல்லக்கின்மேல்; யாழ் இசை முரல - யாழ் இசை
ஒலிக்க; போனாள் - சென்றாள்.
நீலமணிப் பல்லக்கில் இருக்கும் சுமித்திரைக்கு மேகத்தில்
தோன்றும் மின்னல் உவமையாயிற்று. பல்லக்கில் சுமித்திரை செல்ல.
மங்கையர் இரண்டாயிரவர் கோவேறு கழுதையின் மேல் சென்றனர்
என்பது. 64
