எழுச்சிப் படலம் - 876

bookmark

பாணர் விறலியருடன் செல்லுதல்

பாணர் விறலியர் இசை
 
876.    

அறல் இயல் கூந்தல். கண் வாள்.
   அமுது உகு குமுதச் செவ் வாய்.
விறலியரோடு. நல் யாழ்ச்
   செயிரியர். புரவி மேலார்.
நறை செவிப் பெய்வது என்ன.
   நைவள அமுதப் பாடல்
முறை முறை பகர்ந்து போனார்.
   கின்னர மிதுனம் ஒப்பார்.
 
கின்னர    மிதுனம்  ஒப்பார்  -  கின்னர   மிதுனம்   என்னும்
தேவசாதியை  ஒப்பவர்களாகிய;  அறல்  இயல்  கூந்தல் - கருமணல்
போன்ற  கூந்தலையும்;   வாள்கண்  -  வாள் போன்ற கண்களையும்;
அமுது உகு  குமுதச்  செவ்வாய்  -  அமுதம்  சிந்தும்  செவ்வல்லி
போன்ற  சிவந்த  வாயையும்  உடைய; விறலியரோடு - விறலியரோடு;
நல்யாழ் செயிரியர்  -  நல்ல  யாழை  வாசிக்கும்  பாணர்கள்; புரவி
மேலார்  -  குதிரைகளின்மேல்  ஏறிக்கொண்டவர்களாய்;   செவிநறை
பெய்வது  என்ன -  செவியில்  தேனைச்  சொரிவது போல;  நைவள
அமுதப்   பாடல் -  நைவளம்  என்ற  பண்ணோடு  கூடிய   இனிய
பாடலை; முறைமுறை  பகர்ந்து  -  முறை  பிறழாது  பாடிய  வாறே;
போனார் - சென்றார்கள்.

பாணர்கள்     விறலியரோடு குதிரைமேல் ஏறிக் கொண்டு நைவளப்
பண்ணைப்  பாடியவாறே சென்றனர் என்பது.  அறல்   கருங்கூந்தலுக்கு
உவமை.                                                  60