ஆர்யா
வாழ்க்கை வரலாறு
தற்காலம் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படம் அனைவருக்கும் தெரியும். அதனை வரைந்தவர் இந்த பாஷ்யம் எனும் ஆர்யா. சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கின்றோம் அல்லவா, அங்கு வானுயர எழும்பியிருக்கும் கொடிமரத்தையும் பார்த்திருக்கலாம். இந்த கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. இன்று யார் யாரெல்லாமோ ‘மாவீரன்’ என்ற பட்டப் பெயரைத் தாங்கிக்கொண்டிருந்தாலும், நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த இந்த மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை.
பிறப்பு
பாஷ்யம் என்கிற ஆர்யா என அழைக்கப்படும் இவர் மன்னார்குடிக்கு அருகிலுள்ள சேரங்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்ககூடியது. சேரங்குளத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தார் பாஷ்யம்.
ஆரம்ப வாழ்க்கை
‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்த ஏ.ரங்கசாமி ஐயங்கார் இவரது உறவினர். மன்னார்குடியில் கல்வி பயின்றார். தன் 11ஆம் வயதில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொைலையினால் ஆவேசம் கொண்டார். நீடாமங்கலம் சென்று அங்கு நடந்த காந்திஜியின் சொற்பொழிவைக் கேட்டார். தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி பூண்டார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மன்னார்குடியில் முடித்தபின் திருச்சி சென்று தேசியக் கல்லூரியில் பயின்றார். அங்கு படித்த காலத்தில் இவர் படித்த நூல்கள் பாடப்புத்தகங்களைக் காட்டிலும் தேசபக்தி நூல்களே அதிகம்.
தனித் திறமைகள்
சிறந்த ஓவியரான பாஷ்யம் அரசியல் கருத்துப் படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், புத்தகங்களுக்கான முகப்புப் படங்கள் என பல்வகை ஓவியங்களை ஆர்யா என்ற புனைப் பெயரில் வரைந்து வந்தார். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படம் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945ல் முழு நேர ஓவியரானா பாஷ்யம். ‘யுனைடெட் ஆர்ட்ஸ’ என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காந்தி, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். காந்தியின் உருவச்சிலையையும் இவர் வடித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதையும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அர்ப்பணித்த பாஷ்யம் போன்ற எத்தனையோ தியாகிகளின் தேசியப் பற்றுத்தான் இன்று நம்மை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்துள்ளது.
சுதந்திர போராட்டத்தில் இவரின் பங்கு
இங்கிலாந்திலிருந்து ‘சைமன்’ என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் இந்தியா வந்தது. காங்கிரசார் அதனை கருப்புக்கொடி காட்டி திரும்பிப்போ என்று போராடினர். சைமன் கமிஷன் திருச்சி வந்தது. அங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். முன் வரிசையில் தேசியக் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்குத் தலைமை பாஷ்யம். முதல்வர் சாரநாதன் காட்டிய கருணையால் அவர் படிப்பு இடையூறு இன்றி தொடர்ந்தது. எனினும் தேசவிடுதலை இவரை அழைத்துக் கொண்டது. பயங்கரவாத அமைப்புகள் இவரை கைநீட்டி வரவேற்றன. புதுச்சேரி சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். பாரதமாதா சங்கம் போன்ற சங்கத்தில் உறுப்பினராகி, காளி படத்தின் முன் ரத்தக் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
சென்னை வந்த இந்துஸ்தான் சேவாதளத் தலைவர் டாக்டர் ஹார்டிகார் தனது சேவாதளத் தொண்டராக சேர்த்துக் கொண்டார். தனது தொண்டர்களுக்கு பகல்கோட் என்ற இடத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அப்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன எனவே தனது சேவாதளத்தை கலைத்த ஹார்டிகார் தொண்டர்களை போராட்டத்தை தொடரும்படி கூறி அவர் அவர் பகுதிக்கு அனுப்பி வைத்தார். ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திரதினமாக கொண்டாடும்படி பண்டித நேரு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தனக்காக விடுத்த அழைப்பாக எண்ணி தானே ஜனவரி 25 மாலை 7 மணியளவில் பெரிய தேசியக் கொடியொன்றை தயாரித்து அதன் நடுவில் மையினால் ராட்டை வரைந்து அதன் கீழ் இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது என்று எழுதி எடுத்துக் கொண்டு சுப்பிரமணிய சிவாவின் மருமகனும் தனது நண்பருமான வேணுகோபாலை அழைத்துக் கொண்டு சினிமா பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு காவலர் உடையில் கோட்டையின் தென்புற வாயில் வழியாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார், கலங்கரை விளக்க ஒளிபடும் நேரத்தில் தன்னை கம்பத்தில் மறைத்துக் கொண்டு ஏறி யூனியன் ஜாஜ் என்ற ஆங்கிலேயரின் கொடியை இறக்கிவிட்டு தான் மறைத்துக் கொண்டு வந்த இந்திய தேசியக் கொடியை ஏறிவிட்டு தப்பியோடிவிட்டார். காலையில் பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடியை பார்த்த ராணுவத்தினர் பதட்டமடைந்து கவர்னருக்கு செய்தி அனுப்பினர். இதனைச் செய்தவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அரசாங்க ஆவணங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் தனது சகோதரர் வீட்டில் தங்கி இருந்த போது போலீஸ் கண்காணிப்பையும் மீறி கதர் ஆடை அணிந்து அந்நியத்துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தபடி கதர் துணிகளை விற்பனை செய்தார். இதனால் கோபம் கொண்ட கடைக்காரர்கள் வெற்றிலை எச்சிலை இவர் மீது துப்பினர். மேலும் சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினர். இதேபோல் ஐஸ்ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட போது கள்ளுக்கடைக்காரர் இவர் மீது கள்ளுப் பானையைப் போட்டு உடைத்தார்.
