எழுச்சிப் படலம் - 877
களிற்றில் மொய்த்தவண்டுகள் பிடியொடும் தொடர்தல்
மதயானைகளின் போக்கு
877.
அருவி பெய் வரையின் பொங்கி.
அங்குசம் நிமிர. எங்கும்
இரியலின் சனங்கள் சிந்த.
இளங் களிச் சிறு கண் யானை.
விரி சிறைத் தும்பி. வேறு ஓர்
வீழ் மதம் தோய்ந்து. மாதர்
சுரி குழல் படிய. வேற்றுப்
பிடியொடும் தொடர்ந்து செல்ப.
அங்குசம் நிமிர- பாகன் கையிலுள்ள அங்குசம் ஓங்கிஎழ; அருவி
பெய் வரையின் - அருவி நீரைப் பொழியும் மலை போன்ற
தோற்றத்தோடு; பொங்கி - கிளர்ந்தெழுந்து; இரியலின் - நிலைகெட்டு
ஓடுவதால்; எங்கும் சனங்கள் - எல்லா இடத்திலும் மக்களை; சிந்த -
சிதறச் செய்கின்ற; இளங்களிச் சிறுகண் - இளமையையும்.
மதக்களிப்பையும். சிறிய கண்களையும் உடைய; யானை -
யானையிலிருந்து; விரி சிறைத் தும்பி - விரிந்த சிறகுகளையுடைய
வண்டுகள்; வேறு ஓர் வார் மதம் - வேறொரு (யானையின்) பெருகும்
மதநீரில்; தோய்ந்து - படிந்து; மாதர் சுரிகுழல் படிய - பெண்களின்
சுருண்ட கூந்தலில் தோயுமாறு; வேற்றுப் பிடியொடும் - வேறு ஒரு
பெண் யானையை; தொடர்ந்து செல்ப - தொடர்ந்து செல்வன வாயின.
பாகன் தன் கையிலிருந்த அங்குசத்தை ஓங்க. அதனால்
கிளர்ந்தெழுந்து நிலைகெட்டு ஓடுவதால் எல்லாவிடத்தும் மக்களைச்
சிதற அடிக்கும் யானையிடமிருந்து சிறைத் தும்பிகள் நீங்கி வேறொரு
பெண் யானையின் மீது அமர்ந்து வரும் பெண்களின் கூந்தலில்
படியுமாறு சென்றன என்பது. 61
