எழுச்சிப் படலம் - 875
நீர்நிலையில் யானைகள் துளைதல்
நீர் நிலைகளில் படிந்த யானை
875.
கால் செறி வேகப் பாகர்
கார்முக உண்டை பாரா.
வார்ச் செறி கொங்கை அன்ன
கும்பமும் மருப்பும் காணப்
பால் செறி கடலில் தோன்றும்
பனைக் கை மால் யானை என்ன.
நீர்ச் சிறை பற்றி. ஏறா
நின்ற - குன்று அனைய வேழம்.
குன்று அனைய வேழம்- மலையைப் போன்ற யானைகள்;
நீர்ச்சிறை பற்றி - நீர்நிலையிலே இறங்கி; பாகர் கால் செறி -
பாகர்களின் காற்றை யொத்த; வேகம் கார்முகம் உண்டை -
வேகமுள்ள வில்லால் எறியப்பட்ட மண் உருண்டையையும்; பாரா -
பொருட்படுத்தாமல்; வார்சிறைக் கொங்கை அன்ன - கச்சாகிய
சிறைக்குள்ளிருக்கும் தனங்களையொத்த; கும்பமும் மருப்பும் காண -
(தம்) மத்தகமும் கொம்பும் வெளியில் தெரியும்படி; பால் செறி கடலில்
- பாற்கடலில்; தோன்றும் பனைக்கை - தோன்றிய பனைமரம்
போன்ற கையினையுடைய; மால் யானை என்ன - பெரிய ஐராவதம்
என்னும் யானையைப் போல; ஏறா நின்ற - கரையேறாமல் நின்றன.
யானைகள் வழியில் நீர்நிலையில் இறங்கிப் பாகனுடைய
வில்லுண்டையையும் பொருட்படுத்தாமல் பாற்கடலில் இறங்கி
வெளிப்பட்ட ஐராவதம் போல நின்றன என்பது. 59
