எழுச்சிப் படலம் - 873

bookmark

நங்கையர் நடக்க மாட்டாது நிற்றல்

873.    

நீந்த அரு நெறியின் உற்ற
   நெருக்கினால் சுருக்குண்டு அற்று.
காந்தின மணியும் முத்தும்
   சிந்தின. கலாபம் சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்தம்
   பரிபுரம் புலம்பு பாதப்
பூந் தளிர் உறைப்ப. மாழ்கி.
   ‘போக்கு அரிது’ என்ன நிற்பார்.
 
நீந்த அரு -  கடப்பதற்கு  அரிய; நெறியின் உற்ற  -  வழியிலே
உள்ள; நெருக்கினால் - (மக்கள்) நெருக்கத்தால்; சுருக்குண்டு  அற்று
-(மணிவடங்கள்)   சுருக்கேறி அறுந்து கிடக்கும்; காந்தின  மணியும் -
ஒளிவிடும்  இரத்தினங்களும்;  முத்தும்  -  முத்துக்களும்;  சிந்தின -
சிதறிக்   கிடப்பவை;  கலாபம்  சூழ்ந்த  -  பதினாறு   கோவையணி
சூழ்ந்துள்ளதும்;   பாந்தளின்     அல்குலார்     -      பாம்பின்
படம்போன்றதுமான  அல்குலையும்  உடைய  மகளிர்; தம்  பரிபுரம் -
தம் காற்சிலம்பு; புலம்பு பாதம் - ஒலிக்கின்ற பாதங்களாகிய; பூந்தளிர்
உறைப்ப - தளிர்களிலே உறுத்த; மாழ்கி - தடுமாறி; போக்கு - (இனி)
அவர்கள்  நடந்து செல்வது; அரிது என்ன - இயலாது என்று; நிற்பார்
- நிற்பார்கள்.

மக்களின்     நெருக்கத்தால்   முத்தாரமும். மணியும்   சுருக்குண்டு
அற்றுச்   சிதறிக்   கிடக்கின்றன;   அவை   தளிர்போன்ற  மெல்லிய
பாதங்களில்  உறுத்துகின்றன; அதனால் இனிப் போக  முடியாது என்று
மகளிர்  அங்கேயே நிற்பார் என்பது. - தற்குறிப்பேற்ற  அணி. கலாபம்
- பதினாறு கோவையுள்ள மாதரின் இடையணி.                   57