எழுச்சிப் படலம் - 872
மகளிரைக் கண்டு ஆடவர் அகலுதல்
மகளிர்க்கு வழிவிட்டு ஆடவர் விலகுதல்
872.
முருக்கு இதழ் முத்த மூரல்
முறுவலார் முகங்கள் என்னும்
திருக் கிளர் கமலப் போதில்
தீட்டின கிடந்த கூர் வாள்.
‘நெருக்கு இடை அறுக்கும்; நீவிர்
நீங்குமின் நீங்கும்’ என்று என்று.
அருக்கனில் ஒளிரும் மேனி
ஆடவர் அகலப் போவார்.
முருக்கு இதழ் - கல்யாண முருங்கைப் பூவைப் போன்ற
உதட்டையும்; முத்தம் மூரல் - முத்துப் போன்ற பற்களையும்;
முறுவலார் - புன்சிரிப்பையும் உடைய மகளிர்; முகங்கள் என்னும்-
(தம்முடைய) முகங்கள் என்கின்ற; திருக் கிளர் கமலப் போதில்-
அழகுமிக்க தாமரைப் பூவில்; தீட்டின கிடந்த - தீட்டியனவாய்க்
கிடந்த; கூர்வாள் - கூரிய வாட் படைகள் (கண்கள்); நெருக்கு- நாம்
நெருங்கியுள்ளதை; இடை அறுக்கும் - ஊடுருவிச் சென்று நீக்கும்;
நீங்கள் - (ஆதலால். ஆடவரே) நீங்கள்; நீங்குமின் நீங்கும் -
விலங்குகள் விலகுங்கள்; என்று என்று - என்று தெரிவித்தபடி;
அருக்கனில் ஒளிரும் மேனி - கதிரவனைப் போல் விளங்கும்
உடம்பைப் படைத்த; ஆடவர் - ஆண்கள்; அகலப் போவார் -
வழிவிட்டுச் செல்வார்.
நெருங்கிச் செல்லும் ஆடவர் மகளிர் கூட்டத்தைக் கண்டு நாம்
நெருக்கிச் சென்றால் தீட்டிக் கிடக்கின்ற வாள்கள் அறுத்துவிடும்.
விலகுங்கள். விலகுங்கள் என்று சொல்லிக் கொண்டே விலகினர்
என்பது.
நீங்குமின் நீங்கும் - அடுக்கு. விரைவுப் பொருளது - மின். உம்
என்ற இரண்டும் ஏவல் பன்மை விகுதிகள். 56
