எழுச்சிப் படலம் - 868

bookmark

மதநீர் வழுக்கில் மகளிரை அழைத்துச் செல்லல்

மங்கையர் ஆடவர் மகிழ்ந்துசெல் காட்சி
 
868.    

கேடகத் தடக் கையாலே.
   கிளர் ஒளி வாளும் பற்றி.
சூடகத் தளிர்க் கை. மற்றைச்
   சுடர் மணித் தடக்கை பற்றி.
ஆடகத்து ஓடை யானை
   அழி மதத்து இழுக்கல் ஆற்றில்.
பாடகக் காலினாரை.
   பயப் பயக் கொண்டு போனார்.
 
(அங்கே  சென்ற வீரர்கள்) கேடகத் தடக் கையாலே-  கேடகத்தை
ஏந்திய  பெரிய  கையில்;  கிளர்  ஒளி  வாளும்  -  ஒளி விளங்கும்
வாளையும்;  பற்றி  -  பிடித்துக்  கொண்டு;  மற்றைச்  சுடர் மணி -
விளங்கும்  இரத்தினக்  கடகங்களை  அணிந்த;  தடக்  கை - பெரிய
மற்றொரு  கையிலே;  பாடகக்  காலினாரை  - பாடகம் அணிந்த தம்
மனைவியரை;  சூடகத்   தளிர்க்  கை  பற்றி  -  சூடகம்  என்னும்
அணிபூண்ட  தளிர்  போன்ற கைகளைப் பற்றிக் கொண்டு;  ஆடகத்து
ஓடை  -  பொன்னால்  செய்யப்பட்ட  நெற்றிப் பட்டத்தை  அணிந்த;
யானை அழி மதத்து - யானைகளின் மத நீரால்; இழுக்கல் ஆற்றின்
-  உண்டாகிய  வழுக்குகின்ற  வழியில்; பயப்பய - மெல்ல; கொண்டு
போனார் - அழைத்துச் சென்றார்கள்.

யானையின்     மதநீரால் வழுக்குகின்ற  வழி   ஆயிற்று.  வீரர்கள்
வலக்கையிலுள்ள  வாளை  இடக்   கையில்  கேடயத்தோடு  சேர்த்துப்
பிடித்துக்  கொண்டு  வலக்கையிலே தம்   மனைவியரைப் பற்றி மெல்ல
அழைத்துச்  சென்றனர் என்பது. பையப் பைய  என்பது  பயப்பய  என
விகாரமாயிற்று.  கேடகம்:  பலகை.  தோல். பாடகம்:  காலில்  அணியும்
ஒருவகை அணி. சூடகம்: வளையல்.                            52