எழுச்சிப் படலம் - 869
வழிநடையில் மகளிர் நீர்ப்பூக்களைப் பறித்துத்
தரவேண்டுதல்
869.
செய்களின் மடுவில். நல் நீர்ச்
சிறைகளில். நிறையப் பூத்த
நெய்தலும். குமுதப் பூவும்.
நெகிழ்ந்த செங் கமலப் போதும்.
கைகளும். முகமும். வாயும்.
கண்களும். காட்ட. கண்டு.
‘கொய்து. அவை தருதிர்’ என்று.
கொழுநரைத் தொழுகின்றாரால்.
செய்களில் - வயல்களிலும்; மடுவில் - மடுவிலும்; நல் நீர்ச்
சிறைகளில் - நல்ல நீருள்ள குளங்களிலும்; நிறையப் பூத்த - நிறைய
மலர்ந்துள்ள; நெய்தலும் - நெய்தற் பூவும்; குமுதப் பூவும் - குமத
மலரும்; நெகிழ்ந்த செங்கமலப் போதும் - மலர்ந்த செந்தாமரைப்
பூவும் (ஆகிய இவை தம்முடைய); கைகளும் - கைகளையும்; முகமும்
- முகத்தையும்; வாயும் - வாயையும்; கண்களும் - கண்களையும்;
காட்ட - காட்ட; கண்டு - (அவற்றை) பார்த்து; இவை - இந்த நெய்தல்
முதலியவற்றை; கொய்து தருதிர் - பறித்துத் தாருங்கள்; என்று -
என்று; கொழுநரை - (தம்) கணவரை; தொழுகின்றார் - வணங்கிக்
கேட்டார்கள்.
நெய்தல் பூக்கள் கண்களுக்கும். குமுதம் வாய்க்கும் கமலம் கை.
முகம் என்பவற்றுக்கும் உவமையாகும். எதிர் நிரல் நிரையணி.
நெய்தல் முதலியன தம் உறுப்புகளை ஒத்தலின் அவற்றைப் பறித்துத்
தாருங்கள் என்று அவற்றின் வீறு கெடுக்கும் நோக்கில் வேண்டினர்
என்பது. 53
