எழுச்சிப் படலம் - 867
தூளி எழுதல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
867.
குசை உறு பரியும். தேரும்.
வீரரும். குழுமி. எங்கும்
விசையொடு கடுகப் பொங்கி
வீங்கிய தூளி விம்மி.
பசை உறு துளியின் தாரைப்
பசுந் தொளை அடைத்த. மேகம்.
திசைதொறும் நின்ற யானை
மதத்தொளை செம்மிற்று அன்றே.
(ப. ரை) குசை உறு பரியும் - கடிவாளம் பூண்ட குதிரையும்;
தேரும் வீரரும் - தேரும் வீரர்களும்; எங்கும் குழுமி - எல்லா
இடத்திலும் கூடி; விசையொடு கடுக - வேகமாக விரைந்து செல்ல;
பொங்கி வீங்கிய - (அதனால்) மிகுதியாக மேல் எழுந்த; தூளி-
புழுதியானது; விம்மி - பெருகி; மேகம் பசையுறு - மேகத்தின் ஈரம்
பொருந்திய; துளியின் தாரை - நீர்த்துளியின் தாரைகள்; பசுந்
தொளை - (வெளிப்படுவதற்கு உரிய) பசிய தொளைகளை; அடைத்த
- தூர்த்தன; திசைதொறும் நின்ற - (அல்லாமலும்) (எட்டுத்)
திக்குகளில் காவலாகி நிற்கின்ற; யானை - திசை யானைகளின்; மதம்
தொளை - மதநீர் ஒழுகுகின்ற தொளைகளிலும் சென்று; செம்மிற்று -
தூர்த்து விட்டன.
குதிரை. தேர். வீரர் எல்லாம் கூடி விரைந்து செல்வதால் புழுதி
மிகுதியாக எழுந்து வானத்திலும். எட்டுத் திக்குகளிலும். பரவிற்று
என்பது. இத்தூளி மேகத்தின் துளியின் தாரைப் பசுந்துளையையும்.
திசை யானைகளின் மதத்துளையையும் தூர்த்தன - உயர்வு
நவிற்சியணி. 51
