எழுச்சிப் படலம் - 860

bookmark

படைகளின் ஒலியால் உரை கேளாமை

860.    

குரைத்த தேரும். களிரும் குதிரையும்.
நிரைத்த வார் முரசும். நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால். இடை. யாவரும்
உரைத்த உணர்ந்திலர்; ஊமரின் ஏகினார்.
 
குரைத்த   தேரும்- ஒலித்த தேர்களும்; களிறும் -  யானைகளும்;
குதிரையும் -  குதிரைகளும்;  நிரைத்த  வார் முரசும் - வரிசையான
நீண்ட முரசு வாத்தியமும்; எங்கணும் - எல்லா இடத்தும்;    நிமிர்ந்து
இரைத்த - மிகுந்து ஒலித்த; பேரொலியால் -  பேரொலியால்;  இடை
- (அந்த)  இடத்திலே (செல்லுகின்ற) ; யாவரும் -  எவரும்;  உரைத்த
உணர்ந்திலர் -  (ஒருவர்  சொல்ல  மற்றவர்)  அறிய  மாட்டாதவராகி;
ஊமரின் ஏகினார்  -  ஊமைகள் போலப் பேசாமல் சென்றார்கள்.

தேர்     முதலியன செல்வதாலும். முரசு  முழங்குவதாலும்    மிகப்
பேரொலி   தோன்றுகிறது.   அவ்வோசையால்   ஒருவர்    சொல்வது
மற்றொருவர்க்குக்   கேட்கவில்லை.  ஆதலால்.   ஒருவரோடு   ஒருவர்
பேசுவதை ஒழித்து ஊமையர்போலச் சென்றார்கள் என்பது.         44