எழுச்சிப் படலம் - 855
பிடியின்மேற் சிந்தரும் போதல்
சிந்தர்தம் செலவு
855.
வாம மேகலையாரிடை. வாலதி
பூமி தோய் பிடி. சிந்தரும் போயினார் -
காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள்.
ஆமைமேல் வரும் தேரையின் ஆங்குஅரோ.
காமர் தாமரை- அழகிய தாமரையின்; நாள் மலர்க் கானத்துள்-
அன்று பூத்த பூங்காட்டில்; ஆமைமேல் வரு - ஆமை மேல்
வருகின்ற; தேரையின் - தேரையைப் போல; வாலதி பூமி தோய்-
வால்கள் பூமியில் படியக்கூடிய; பிடி - பெண் யானைகளில்; வாமம்
மேகலையாரிடை - அழகிய மேகலையணிந்த பெண்களோடு; சிந்தரும்
போயினார் - சிந்தரும் சென்றார்கள்.
தாமரைக் காடு மகளிர்க்கும். ஆமை பெண் யானைக்கும். தேரை
சிந்தர்க்கும் உவமையாயின என்பது. சிந்தர்: மூன்றடி உயரமுள்ளவர்
- அந்தப்புரத்தில் மெய்க்காப்பாளராவார். பெண்யானைக்கு வால்
பூமியில் தோய்தல் உத்தம இலக்கணமாகும். 39
