எழுச்சிப் படலம் - 846

bookmark

இளைஞர் செயல் கூறுவன (846-851)

காதல் நாடகம்
 
846.    

வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான். நெறி; அந்தரில் சென்று. ஒரு
மூரி மா மத யானையை முட்டினான்.
 
வார்குலாம்    முலை- (ஒரு பெண்ணின்) கச்சணிந்த  தனங்களில்;
வைத்த   கண்  -  பதித்த  கண்களை;  வாங்கிடப்  பேர்கிலாது -
(அவற்றை)  விட்டு  வாங்காமல்; பிறங்கு - விளங்கும்; முகத்தினான் -
முகத்தையுடைய  ஒருவன்;  நெறி தேர்கிலான் - (தான் செல்லும்) வழி
அறிய  முடியாதவனாய்; அந்தரில் சென்று - குருடர் போலச் சென்று;
ஒரு மூரி மா மதம் - ஒப்பற்ற வலிய பெரிய மதமுள்ள; யானையை -
யானையின் மேல்; முட்டினான் - முட்டிக் கொண்டான்.  

மகளிர்     தனங்களில்   அழுந்திய தன் கண்ணை மீட்க  முடியாத
ஒருவன்  போகும்வழியில்  ஒரு மத யானைமீது  மோதிக்  கொண்டான்
என்பது.  வாங்கிட  -  செய்து  என்  எச்சம் ‘செய’ எனத்    திரிந்தது.
காமத்தால்  கண்  கெடுதல்  இயல்பாதலின்   அந்தரில்  சென்று  என
இருபக்கமும் பொருந்திய உவமையைத் தந்தார்.                  30