எழுச்சிப் படலம் - 847

bookmark

847.    

சுழி கொள் வாம் பரி துள்ள. ஒர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை. ஒர் வள்ளல்தான்.
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்;
தழுவி நின்று ஒழியான்; தரைமேல் வையான்.
 
சுழிகொள்- நற்சுழிகளையுடைய; வாம்பரி -  தாவும்  குதிரையானது;
துள்ள  -  துள்ளிப்  பாய; ஒர்   தோகையாள் - (அஞ்சிய) மயிலைப்
போன்ற    சாயலையுடையவளாகி;     வழுவி     வீழலுற்றாளை  -
(குதிரையிலிருந்து நழுவி விழுந்தவளை; ஒர் வள்ளல் தான்  - இரக்கப்
பண்புள்ள   ஒரு  வீரன்;  எழுவின்-  கணைய  மரம்  போன்ற;  நீள்
புயத்தால்-  நீண்ட  கையால்;  எடுத்து  ஏந்தினான் - வாரி எடுத்துத்
தாங்கியவனாக; தரைமேல்  வையான்  -  தரைமேல்  வையாதவனாய்;
தழுவி நின்று ஒழியான் - (அவளை) தழுவியபடியே நின்றுவிட்டான்.

குதிரை    துள்ளிப் பாய. அதன்மேல் இருந்த ஒருத்தி தவறிக் கீழே
விழ  அப்போது  பக்கத்திலிருந்த  வீரன்  அவளைத் தன்   கைகளால்
தழுவிக்  கொண்டு  நின்றான்.  அவளை  நிலத்தின்மேல்   விடவில்லை
என்பது.                                                   31