எழுச்சிப் படலம் - 843
சேனை கங்கை யாற்றை ஒத்தது எனல்
தானையின் செலவுக்காட்சி
843.
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து. அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால்.
கங்கை யாறு கடுத்தது - கார் எனச்
சங்கு. பேரி. முழங்கிய தானையே.
சங்கு பேரி- சங்குகளும் பேரிகைகளும்; கார் என முழங்கிய -
மேகம் முழங்குவது போல முழங்கிய; தானை - அச்சேனையானது;
பொங்கு வெண்குடை - விளங்கும் வெண்ணிறக் குடைகளும்; சாமரை
- வெண்சாமரங்களும்; போர்த்தலால் - நிரம்பியிருப்பதால்; கங்கை
ஆறு - கங்கா நதியை; கடுத்தது - ஒத்தது; அம்கண் - அழகிய
இடமுள்ள; ஞாலத்து அரசு - நிலவுலகில் அரச சின்னங்கள்; மிடைந்த
- நெருங்கின.
சங்கும் பேரிகைகளும் முழங்குகின்ற அந்தச் சேனையில்
வெண்குடைகளும் வெண்சாமரங்களும் நெருங்கி எங்கும்
வெண்ணிறத்தோடு காட்சியளித்தமையால் அச்சேனை கங்கையாறு
போலத் தோன்றிற்று என்பது. 27
