எழுச்சிப் படலம் - 837

bookmark

ஊடிய மகளிர் செல்லுதல்

ஊடிய மகளிரின் போக்கு
 
837.    

ஊடிய மனத்தினர். உறாத நோக்கினர்.
நீடிய உயிர்ப்பினர். நெரிந்த நெற்றியர்;
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்;
ஆடவர் உயிர் என அருகு போயினார்.
 
ஊடிய     மனத்தினர்-  (தம்   கணவர்மீது)  பிணக்கு கொண்ட
மகளிரும்;  உறாத  நோக்கினர் - (தம் கணவர்மீது)  கண்பார்வையைச்
செலுத்தாதவர்களும்; நீடிய உயிர்ப்பினர் - பெருமூச்சு  விடுபவர்களும்;
நெரிந்த     நெற்றியர்   -    (கோபத்தால்)    புருவம்    நெரிந்த
நெற்றியையுடையவர்களும்; தோடு அவிழ் கோதையும் - இதழ் விரிந்த
மலர்   மாலையையும்;   துறந்த   கூந்தலர்   -   துறந்த  கூந்தலம்
உடையவர்களாகிய  மகளிர்;  ஆடவர்  உயிரென - ஆண்களது உயிர்
பெண்ணுருக்  கொண்டதுபோல  என்று சொல்லுமாறு; அருகு - (அந்த
ஆடவரின்) பக்கத்திலே; போயினார் - சென்றார்கள்.

முன்பு     ஊடின  பெண்கள்  இராமனது    திருமணச்    செய்தி
கேட்டவுடன்.  அவ்  ஊடல் நீங்கித் தத்தம் கணவரோடு   அவர்களின்
உயிர்போலச் சென்றனர் என்பது. தன்மை நவிற்சியணி.             21