எழுச்சிப் படலம் - 838

bookmark

யானைகளின் செலவு

838.    

மாறு எனத் தடங்களைப் பொருது. மா மரம்
ஊறு பட்டு இடையிடை ஒடித்து. சாய்ந்து. உராய்.
ஆறு எனச் சென்றன - அருவி பாய் கவுள்.
தாறு எனக் கனல் உமிழ் தறுகண் யானையே.
 
அருவி  பாய் கவுள்- அருவிபோல மதநீர் பாயும் கன்னத்தையும்;
தாறு  எனக்  கனல் உமிழ் - அங்குசம் என்ற சொல்லைக் கேட்டதும்
தீயைக்  கக்குகின்ற; தறுகண் யானை - அஞ்சாமையுடைய  யானைகள்;
மாறு  என  -  தமக்குப் பகையென்று கருதி; தடங்களைப் பொருது-
இரு  கரைகளை  மோதி இடித்து; மாமரம் - பெரிய மரங்களை;  ஊறு
பட்டு  இடைஇடை  -  முடியும்படி  நடுநடுவே;  ஒடித்து - ஒடித்தும்;
சாய்த்து  -  கீழே  முறித்துச்  சாய்த்தும்;  உராய் -  (அம்மரங்களின்
மேல்)  உரசியும்; ஆறு என - ஓர் ஆறு செல்வது போல; சென்றன -
போயின.

கரைகளோடு  மோதுதல். மரங்களை ஒடித்தல். சாய்த்துத்  தள்ளுதல்.
உராய்தல்  - இவை  யானைக்கும்.  ஆற்றுக்கும்  ஒத்துள்ளன. அதனால்
யானை செல்வது ஆறு செல்வது போன்றது என்றார்.

பொருது.     ஒடித்து. சாய்த்து. உராய்  என்னும்  வினையெச்சங்கள்
யானைக்கும்  ஆற்றுக்கும்  பொருள்படுமாறு   பொதுவாக  அமைந்தன.
தாறு - குத்துக் கோல். அங்குசம்.                              22