உத்தம் சிங் - 4
நேதாஜி சிங்கின் செயலை வரவேற்றார். R.C. ஜாகர்வாரா தனது "CONSTITUTIONAL HISTORY OF INDIA AND NATIONAL MOVEMENT" என்ற நூலில் சிங்கின் தீரச்செயல் இந்திய சுதந்திரத்திற்குப் புத்துணர்வு ஊட்டியது என்று எழுதியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் இரகசிய குறிப்பு, ஆளுநர் டையரின் கொலை மக்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்று கூறுகிறது. உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுகூர்ந்து மைக்கேல் ஓ டையர்தான் இதற்குப் பொறுப்பாளி என்று எழுதின. டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற பத்திரிக்கை உத்தம்சிங் சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவரது செயல் ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு என்றும் எழுதியது.
1940- ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை 21- ஆவது நினைவு காங்கிரஸ் கூட்டத்தில் உத்தம் சிங் மிகவும் போற்றப்பட்டார். பஞ்சாப் காங்கிரஸ் டையருக்கு அஞ்சலி செலுத்தவும் உத்தம் சிங் செயலைக் கண்டிக்கவும் மறுத்துவிட்டது. அக்காலத்தில் ரோம் நகரில் அதிகம் வெளியான பெர்கெரெட் (BERGERET) என்ற பத்திரிக்கை சிங்கின் செயலை தீரச்செயல் என்று பாராட்டியது . ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது.
நேருஜி 1962-ல் சிங்கின் செயலைப் பாராட்டி அவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார். 1974- ல் சாதுசிங் திண்ட் என்ற சுல்தான்பூர் லோதி வேண்டுகோளுக்கிணங்கி இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் பிரிட்டிஷ் அரசு உத்தம் சிங்கின் சவப்பெட்டியை அனுப்ப சம்மதித்தது. சாதுசிங் திண்ட் சென்று உத்தம் சிங்கின் சவப்பெட்டியை வாங்கிவந்தார். அதனை காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதல்வர் ஜைல் சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பிரதமர் இந்திரா காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது சொந்த கிராமமான சுனாம் கிராமத்தில் அவரது உடல் எரியூட்டப்பெற்று சட்லஜ் நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.
