மா சே துங் - 1

மா சே துங் - 1

bookmark

மா சே துங் (இந்த ஒலிக்கோப்பு பற்றி மாவ் ட்சேடுங், Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார்.இவர் சீன வரலாற்றையே மாற்றிப் போட்டவர்.சீன தேசத்தில் புதிய சித்தாந்தங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தவர்.

மாவோ 1893 ஆம் ஆண்டில் சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். மா சே துங்கின் தந்தை பெயர் மா ஷென் செங், தாயாரின் பெயர் வென் குய்மெய். மாவோவின் தந்தை இரண்டு வருடங்களே பள்ளிக்குப் போனவர். ஆரம்பத்தில் ஏழை விவசாயியாக இருந்தார். ஏராளமான கடன்கள் ஆகி விட்டபடியால் ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார். பல வருடங்கள் இராணுவ சேவை செய்த பின் தன் கிராமத்துக்கு திரும்பி வந்தார். சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சிறு வியாபாரங்கள் செய்தார். அதன் மூலம், இழந்த நிலத்தைத் திரும்பப் பெற்றார். அவருடைய குடும்பமும் நடுத்தர விவசாயக் குடும்பம் என்ற நிலையை அடைந்தது. வெகு விரைவிலேயே மேலும் அதிக நிலங்களை வாங்கி பணக்கார விவசாயி என்ற நிலையை எட்டினார்.

அதிக நிலத்தில் விவசாயம் செய்வதால் கிடைத்த உபரி தானியத்தை பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தார். விவசாய வேலையைக் கவனிக்க ஒரு முழு நேரப் பண்ணையாளையும் நியமித்தார். அத்துடன் ஏழை விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி அவற்றை நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தார். ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதியன்று அவருடைய கூலியாட்களுக்கு அரிசியும் முட்டைகளும் கொடுப்பார். ஆனால் இறைச்சி ஒரு போதும் அளித்ததில்லை.

மாவோவின் தந்தைக்கு ஆரம்பத்தில் தெய்வ பக்தி கிடையாது. அவருக்கு தர்மம் செய்வதே பிடிக்காது. மாவோவின் தந்தையிடம் பணம் சேரச் சேர அவர் கிராமத்திலிருந்து மற்ற நிலங்களை குத்தகைக்கு வாங்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் அவருடைய கையிருப்பு மூவாயிரம் டாலர் வரை இருந்தது. ஒரு முறை காட்டு வழியில் போய்க் கொண்டிருந்த போது புலியால் தாக்கப்படாமல் தப்பித்த நிகழ்ச்சிக்குப் பிறகு புத்தரைத் தொழ ஆரம்பித்தார்.

மாவோவின் தாயாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் பெருந்தன்மையும் ஈவிரக்கமும் கொண்ட அன்பான பெண்மணி. பஞ்ச காலங்களில் தங்களை நாடி வரும் ஏழைகளுக்கு அவர் அரிசியைத் தானமாகக் கொடுப்பதுண்டு. அவர் புத்தரை தினமும் தொழுவார். பிள்ளைகளையும் தெய்வ பக்தி உடையவராக்கினார்.

மா சே துங் , தனது அரசியல் வாழ்க்கையை இப்டித் தான் ஆரம்பித்தார் அதாவது அவர், எச்சரிக்கை தரும் வார்த்தைகள் (Words of Warning) என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்களையும் மேற்கத்திய நாடுகளின் வலிமையையும் தெரிந்து கொண்டார். அந்த நூலைப் படித்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டும் என்று ஆவல் மாவோவுக்கு ஏற்பட்டது. இதனால் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் உதவியால் படித்தார்.

இந்த நேரத்தில் சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுகளுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் அரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இது நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமையாளராக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார்.