உத்தம் சிங் - 3

உத்தம் சிங் - 3

bookmark

மூன்றாண்டுகள் மைக்கேல் ஓ டையரைக் கொலை செய்யும் திட்டத்துடன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1933- ல் காஷ்மீர் சென்று ஜெர்மனிக்குத் தப்பிவிட்டார். அவர் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934- ல் லண்டனை அடைந்தார். மைக்கேல் ஓ டையரைக் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1940- ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது. மைக்கேல் ஓ டையர் அதில் ஒரு பேச்சாளர். சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் டையர் மேடையை நோக்கிச் செல்லும் போது இருமுறை சுட்டார். டையர் உடனே இறந்துவிட்டார். மீண்டும் சுட்டதில் ஜெட்லாந்து, லூயிஸ்டேன், லார்டு லாமிங்க்டன் ஆகியோர் காயமுற்றனர். சிங் தப்பிக்க முயற்சி செய்யவில்லை.

உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார். 1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்காட்லாந்துயார்டு அருங்காட்சியகத்தில் அவரது கத்தி, ஆயுதம், டைரி, துப்பாக்கிக்குண்டுகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை .ஆனால், வழக்கம் போல் காந்திஜி என்ற ஒரே ஒரு இந்தியர் மட்டும் தான் அவரது செயலைக் கண்டித்தார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் 1942- ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு உத்தம் சிங்கால் ஏற்பட்ட உணர்ச்சி மிகவும் உதவியது என்று கூறுகின்றனர்.