உத்தம் சிங் - 2

உத்தம் சிங் - 2

bookmark

“    நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.”

1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாக பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்.

அவர் பல்வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1920- ல் ஆப்பிரிக்காவிற்கும் 1921- ல் நைரோபிக்கும் சென்றுவிட்டு 1924- ல் இந்தியா திரும்பினார். ஐக்கிய அமெரிக்கா சென்றார். சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங் சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ்பிஹாரி கோஷ் போன்றோரால் உருவாக்கப்பட்ட கதர் கட்சியில் இணைந்தார். கதர் கட்சி வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார். 1927- ல் பகத் சிங் அழைத்ததால் இந்தியா திரும்பினார். 1927- லேயே அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும் கதர் கட்சி பிரசுரங்கள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். 1931- ல் விடுதலை ஆனார்.