உத்தம் சிங்

bookmark


பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட் ஆகியோர் தலைமையில் உருவான சுதேசி (ஹோம்ரூல்) இயக்கம், மகாத்மா காந்தி தலைமையிலான போராட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் முனைப்புற்றன. 1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது.

பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட உந்துதலை எழுச்சியை ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர். சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது. இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.

ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது. மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் கடையடைப்பு நடந்தது. அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர்.

மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை.

ஏப்ரல் 13 வைசாகி நாள். அன்றுதான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அம்ரித்சரில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு.

இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான். திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும்.

அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயப்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது. பஞ்சாபின் துணை ஆளுநர் சேர் மைக்கல் ஓ'ட்வையர் "ஜெனரல் டையரின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு உடன்பாடானவையே" என டையருக்குத் தந்தி அனுப்பினார்.

பஞ்சாப் படுகொலைகளை விசாரிக்க ஹண்டர் என்பவர் தலைமையில் ஒரு குழுவை வைசிராய் நியமித்தார். டையர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது:

“    நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.”

1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாக பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்.

அவர் பல்வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1920- ல் ஆப்பிரிக்காவிற்கும் 1921- ல் நைரோபிக்கும் சென்றுவிட்டு 1924- ல் இந்தியா திரும்பினார். ஐக்கிய அமெரிக்கா சென்றார். சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங் சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ்பிஹாரி கோஷ் போன்றோரால் உருவாக்கப்பட்ட கதர் கட்சியில் இணைந்தார். கதர் கட்சி வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார். 1927- ல் பகத் சிங் அழைத்ததால் இந்தியா திரும்பினார். 1927- லேயே அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும் கதர் கட்சி பிரசுரங்கள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். 1931- ல் விடுதலை ஆனார்.

மூன்றாண்டுகள் மைக்கேல் ஓ டையரைக் கொலை செய்யும் திட்டத்துடன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1933- ல் காஷ்மீர் சென்று ஜெர்மனிக்குத் தப்பிவிட்டார். அவர் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934- ல் லண்டனை அடைந்தார். மைக்கேல் ஓ டையரைக் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1940- ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது. மைக்கேல் ஓ டையர் அதில் ஒரு பேச்சாளர். சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் டையர் மேடையை நோக்கிச் செல்லும் போது இருமுறை சுட்டார். டையர் உடனே இறந்துவிட்டார். மீண்டும் சுட்டதில் ஜெட்லாந்து, லூயிஸ்டேன், லார்டு லாமிங்க்டன் ஆகியோர் காயமுற்றனர். சிங் தப்பிக்க முயற்சி செய்யவில்லை.

உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார். 1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்காட்லாந்துயார்டு அருங்காட்சியகத்தில் அவரது கத்தி, ஆயுதம், டைரி, துப்பாக்கிக்குண்டுகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை .ஆனால், வழக்கம் போல் காந்திஜி என்ற ஒரே ஒரு இந்தியர் மட்டும் தான் அவரது செயலைக் கண்டித்தார். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் 1942- ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு உத்தம் சிங்கால் ஏற்பட்ட உணர்ச்சி மிகவும் உதவியது என்று கூறுகின்றனர்.

நேதாஜி சிங்கின் செயலை வரவேற்றார். R.C. ஜாகர்வாரா தனது "CONSTITUTIONAL HISTORY OF INDIA AND NATIONAL MOVEMENT" என்ற நூலில் சிங்கின் தீரச்செயல் இந்திய சுதந்திரத்திற்குப் புத்துணர்வு ஊட்டியது என்று எழுதியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் இரகசிய குறிப்பு, ஆளுநர் டையரின் கொலை மக்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்று கூறுகிறது. உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுகூர்ந்து மைக்கேல் ஓ டையர்தான் இதற்குப் பொறுப்பாளி என்று எழுதின. டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற பத்திரிக்கை உத்தம்சிங் சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவரது செயல் ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு என்றும் எழுதியது.

1940- ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை 21- ஆவது நினைவு காங்கிரஸ் கூட்டத்தில் உத்தம் சிங் மிகவும் போற்றப்பட்டார். பஞ்சாப் காங்கிரஸ் டையருக்கு அஞ்சலி செலுத்தவும் உத்தம் சிங் செயலைக் கண்டிக்கவும் மறுத்துவிட்டது. அக்காலத்தில் ரோம் நகரில் அதிகம் வெளியான பெர்கெரெட் (BERGERET) என்ற பத்திரிக்கை சிங்கின் செயலை தீரச்செயல் என்று பாராட்டியது . ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது.

நேருஜி 1962-ல் சிங்கின் செயலைப் பாராட்டி அவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார். 1974- ல் சாதுசிங் திண்ட் என்ற சுல்தான்பூர் லோதி வேண்டுகோளுக்கிணங்கி இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் பிரிட்டிஷ் அரசு உத்தம் சிங்கின் சவப்பெட்டியை அனுப்ப சம்மதித்தது. சாதுசிங் திண்ட் சென்று உத்தம் சிங்கின் சவப்பெட்டியை வாங்கிவந்தார். அதனை காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதல்வர் ஜைல் சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பிரதமர் இந்திரா காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது சொந்த கிராமமான சுனாம் கிராமத்தில் அவரது உடல் எரியூட்டப்பெற்று சட்லஜ் நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.

15. மா சே துங்

மா சே துங் (இந்த ஒலிக்கோப்பு பற்றி மாவ் ட்சேடுங், Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார்.இவர் சீன வரலாற்றையே மாற்றிப் போட்டவர்.சீன தேசத்தில் புதிய சித்தாந்தங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தவர்.

மாவோ 1893 ஆம் ஆண்டில் சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். மா சே துங்கின் தந்தை பெயர் மா ஷென் செங், தாயாரின் பெயர் வென் குய்மெய். மாவோவின் தந்தை இரண்டு வருடங்களே பள்ளிக்குப் போனவர். ஆரம்பத்தில் ஏழை விவசாயியாக இருந்தார். ஏராளமான கடன்கள் ஆகி விட்டபடியால் ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார். பல வருடங்கள் இராணுவ சேவை செய்த பின் தன் கிராமத்துக்கு திரும்பி வந்தார். சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சிறு வியாபாரங்கள் செய்தார். அதன் மூலம், இழந்த நிலத்தைத் திரும்பப் பெற்றார். அவருடைய குடும்பமும் நடுத்தர விவசாயக் குடும்பம் என்ற நிலையை அடைந்தது. வெகு விரைவிலேயே மேலும் அதிக நிலங்களை வாங்கி பணக்கார விவசாயி என்ற நிலையை எட்டினார்.

அதிக நிலத்தில் விவசாயம் செய்வதால் கிடைத்த உபரி தானியத்தை பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தார். விவசாய வேலையைக் கவனிக்க ஒரு முழு நேரப் பண்ணையாளையும் நியமித்தார். அத்துடன் ஏழை விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி அவற்றை நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தார். ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதியன்று அவருடைய கூலியாட்களுக்கு அரிசியும் முட்டைகளும் கொடுப்பார். ஆனால் இறைச்சி ஒரு போதும் அளித்ததில்லை.

மாவோவின் தந்தைக்கு ஆரம்பத்தில் தெய்வ பக்தி கிடையாது. அவருக்கு தர்மம் செய்வதே பிடிக்காது. மாவோவின் தந்தையிடம் பணம் சேரச் சேர அவர் கிராமத்திலிருந்து மற்ற நிலங்களை குத்தகைக்கு வாங்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் அவருடைய கையிருப்பு மூவாயிரம் டாலர் வரை இருந்தது. ஒரு முறை காட்டு வழியில் போய்க் கொண்டிருந்த போது புலியால் தாக்கப்படாமல் தப்பித்த நிகழ்ச்சிக்குப் பிறகு புத்தரைத் தொழ ஆரம்பித்தார்.

மாவோவின் தாயாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் பெருந்தன்மையும் ஈவிரக்கமும் கொண்ட அன்பான பெண்மணி. பஞ்ச காலங்களில் தங்களை நாடி வரும் ஏழைகளுக்கு அவர் அரிசியைத் தானமாகக் கொடுப்பதுண்டு. அவர் புத்தரை தினமும் தொழுவார். பிள்ளைகளையும் தெய்வ பக்தி உடையவராக்கினார்.

மா சே துங் , தனது அரசியல் வாழ்க்கையை இப்டித் தான் ஆரம்பித்தார் அதாவது அவர், எச்சரிக்கை தரும் வார்த்தைகள் (Words of Warning) என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்களையும் மேற்கத்திய நாடுகளின் வலிமையையும் தெரிந்து கொண்டார். அந்த நூலைப் படித்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டும் என்று ஆவல் மாவோவுக்கு ஏற்பட்டது. இதனால் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் உதவியால் படித்தார்.

இந்த நேரத்தில் சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுகளுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் அரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இது நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமையாளராக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார்.

ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி பல எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. 1927 ஆம் ஆண்டிலும், 1934 ஆம் ஆண்டிலும் இக்கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு மா-சே-துங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின் கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது. 1954 ஆம் ஆண்டில் அப்போது சியாங் கே ஷாக் தலைமையிலிருந்த தேசிய அரசை எதிர்த்து ஒரு பெரும் போரைத் தொடங்கும் அளவுக்குப் பொதுவுடைமைக் கட்சி வலிமைப் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

முப்பது ஆண்டுக் காலம் உள்நாட்டுப் போர்களினால் அலைக்கழித்த பின்னரே சீனா, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் மா-சே-துங்கின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது சீனாவில் வறுமை தலை விரித்தாடியது. நாடு வளர்ச்சியடையாமல் மிகவும் பின் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத குடியானவர்களாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது மா-சே-துங்- கிற்கு 56 வயது. புதிய சீனாவை உருவாக்கும் மாபெரும் பணி அவர் முன் மலைபோல் எழுந்து நின்றது.

'வலிமையும் வளமும் மிகுந்த சீனா' என்ற இலட்சிய இலக்கை பின்பற்றிய மாவோ , நவீன தொழில் முன்னேற்றம் அடைந்த நாட்டை நிறுவ முயன்றார். எனினும், ஆரம்ப காலங்களில் இவருடைய முக்கியத்துவம் வாய்ந்த சமூக-அரசியல் திட்டங்களின் காரணமாக சீனாவின் வளர்ச்சி முடங்கி, பொருளாதாரம் சீர்குலைந்து, சமூக கொந்தளிப்புகள் உருவாகி, பரவலான பட்டினி நிலை ஏற்பட்டது; மில்லியன் கணக்கில் மக்கள் மாண்டனர். இதனை சமாளிக்க மாபெரும் முன்னெடுப்பு என்று சொல்லிக் கொண்டு எழுபத்தி ஐயாயிரம் விவசாயிகளை கூட்டாக விவசாயம் செய்ய வைத்தார். ஆனாலும், வெள்ளங்கள், உற்பத்தி வீழ்ச்சி காரணமாக சீன மக்கள் முன் இவரது மதிப்பு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வீழ்ந்த இவரது மதிப்பை அதிகரித்துக் கொள்ள, இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லைத் தகராறை சாதகமாக்கி தயாராக இல்லாத இந்தியாவை போரில் வென்றார். சீன இளைஞர்களுக்கு, இந்தியா மீது விரோதத்தை ஊட்டிய புண்ணியம் இவரைத் தான் சேரும் . அவர் போட்ட வெறுப்பின் விதை இன்று வரை தொடருகிறது.

கலாசாரப் புரட்சி என்ற பெயரில் நகரங்களில் சகல வசதிகளுடன் இருந்த இளைஞர்களை கட்டாயப்படுத்தி கிராமங்களை நோக்கி நகரச் செய்தார்.அங்கு அவர்கள் கடின வேலைக்கு ஆட்படுத்தப் பட்டனர்கள். பண்டைய சீனாவின் அடையாளங்கள் இவரால் அழித்து ஒழிக்கப்பட்டது. மீண்டும் பூர்ஷ்வா சக்திகள் முதலாளித்துவத்தை கொண்ட வர முயல்கின்றன என்று கூறி சந்தேகத்துக்கு உள்ளான பல்லாயிரக் கணக்கானோர் செம்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். மாவோ , தன் இறுதிக் காலம் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதற்கு அவரது அரசியல் சாதுரியமும் ஆளுமையும் உதவியது.

பிச்சை எடுப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்பட்டது. சோம்பேறிகள் வருங்கால சீனாவுக்கு தேவை இல்லை என்று முழங்கினார். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உள்நாட்டு பொருட்களை மட்டும் தான் சீன மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றினார் . இதனால் சீன நாட்டின் இறக்குமதி குறைக்கப் பட்டது. ஆங்கில முறைக் கல்வியை ஒழித்து, சீன மொழியை கற்க வலியுறித்தினார். அனைவருக்கும் (சிறைச் சாலையில் உள்ள கைதிகள் உட்பட ) தொழிற் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அதன் காரணமாக சீன இளைஞர்கள் தங்கள் சொந்தக் கால்களில் கௌரவத்துடன் நிற்க கற்றுக் கொண்டனர். மேலும், அவர்கள் வேலை தேடுபவர்களாக மாறாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக மாறினார்கள். இதனால் பின்னாட்களில் சீன நாட்டின் ஏற்றுமதி அதிகரித்தது. சுருங்கச் சொன்னாள், சீனாவின் வலிமையான இன்றைய பாய்ச்சலுக்கான அடித்தளம் மாவோவில் இருந்தே துவங்கியது.

மாவோ மதிப்பீடு:

லெனின், மார்க்ஸ் போன்றோரும் கம்யுனிஸ்டுகள் தான், ஆனால் அவர்கள் உலகத்தில் உள்ள எல்லா தொழிலாளர்களுக்கும் சேர்த்தே குரல் கொடுத்தனர். ஆனால் மாவோ, அப்படி அல்ல. மாவோ தன்னாட்டுக்கும், தன் நாட்டு தொழிலாளர்களுக்கும் மட்டும் தான் நல்லவர்.