மா சே துங்
மா சே துங் (இந்த ஒலிக்கோப்பு பற்றி மாவ் ட்சேடுங், Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார்.இவர் சீன வரலாற்றையே மாற்றிப் போட்டவர்.சீன தேசத்தில் புதிய சித்தாந்தங்களுக்கு வழி வகுத்துக் கொடுத்தவர்.
மாவோ 1893 ஆம் ஆண்டில் சீனாவில் ஹூனான் மாகாணத்தின் ஷாவ்ஷான் என்ற கிராமத்தில் பிறந்தார். மா சே துங்கின் தந்தை பெயர் மா ஷென் செங், தாயாரின் பெயர் வென் குய்மெய். மாவோவின் தந்தை இரண்டு வருடங்களே பள்ளிக்குப் போனவர். ஆரம்பத்தில் ஏழை விவசாயியாக இருந்தார். ஏராளமான கடன்கள் ஆகி விட்டபடியால் ராணுவத்தில் போய்ச் சேர்ந்தார். பல வருடங்கள் இராணுவ சேவை செய்த பின் தன் கிராமத்துக்கு திரும்பி வந்தார். சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சிறு வியாபாரங்கள் செய்தார். அதன் மூலம், இழந்த நிலத்தைத் திரும்பப் பெற்றார். அவருடைய குடும்பமும் நடுத்தர விவசாயக் குடும்பம் என்ற நிலையை அடைந்தது. வெகு விரைவிலேயே மேலும் அதிக நிலங்களை வாங்கி பணக்கார விவசாயி என்ற நிலையை எட்டினார்.
அதிக நிலத்தில் விவசாயம் செய்வதால் கிடைத்த உபரி தானியத்தை பக்கத்து நகரங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தார். விவசாய வேலையைக் கவனிக்க ஒரு முழு நேரப் பண்ணையாளையும் நியமித்தார். அத்துடன் ஏழை விவசாயிகளிடமிருந்து தானியங்களை விலைக்கு வாங்கி அவற்றை நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்று வந்தார். ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் தேதியன்று அவருடைய கூலியாட்களுக்கு அரிசியும் முட்டைகளும் கொடுப்பார். ஆனால் இறைச்சி ஒரு போதும் அளித்ததில்லை.
மாவோவின் தந்தைக்கு ஆரம்பத்தில் தெய்வ பக்தி கிடையாது. அவருக்கு தர்மம் செய்வதே பிடிக்காது. மாவோவின் தந்தையிடம் பணம் சேரச் சேர அவர் கிராமத்திலிருந்து மற்ற நிலங்களை குத்தகைக்கு வாங்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் அவருடைய கையிருப்பு மூவாயிரம் டாலர் வரை இருந்தது. ஒரு முறை காட்டு வழியில் போய்க் கொண்டிருந்த போது புலியால் தாக்கப்படாமல் தப்பித்த நிகழ்ச்சிக்குப் பிறகு புத்தரைத் தொழ ஆரம்பித்தார்.
மாவோவின் தாயாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் பெருந்தன்மையும் ஈவிரக்கமும் கொண்ட அன்பான பெண்மணி. பஞ்ச காலங்களில் தங்களை நாடி வரும் ஏழைகளுக்கு அவர் அரிசியைத் தானமாகக் கொடுப்பதுண்டு. அவர் புத்தரை தினமும் தொழுவார். பிள்ளைகளையும் தெய்வ பக்தி உடையவராக்கினார்.
மா சே துங் , தனது அரசியல் வாழ்க்கையை இப்டித் தான் ஆரம்பித்தார் அதாவது அவர், எச்சரிக்கை தரும் வார்த்தைகள் (Words of Warning) என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்களையும் மேற்கத்திய நாடுகளின் வலிமையையும் தெரிந்து கொண்டார். அந்த நூலைப் படித்ததிலிருந்து பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டும் என்று ஆவல் மாவோவுக்கு ஏற்பட்டது. இதனால் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் உதவியால் படித்தார்.
இந்த நேரத்தில் சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுகளுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் அரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இது நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமையாளராக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார்.
ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி பல எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. 1927 ஆம் ஆண்டிலும், 1934 ஆம் ஆண்டிலும் இக்கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு மா-சே-துங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின் கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது. 1954 ஆம் ஆண்டில் அப்போது சியாங் கே ஷாக் தலைமையிலிருந்த தேசிய அரசை எதிர்த்து ஒரு பெரும் போரைத் தொடங்கும் அளவுக்குப் பொதுவுடைமைக் கட்சி வலிமைப் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
முப்பது ஆண்டுக் காலம் உள்நாட்டுப் போர்களினால் அலைக்கழித்த பின்னரே சீனா, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் மா-சே-துங்கின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது சீனாவில் வறுமை தலை விரித்தாடியது. நாடு வளர்ச்சியடையாமல் மிகவும் பின் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத குடியானவர்களாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது மா-சே-துங்- கிற்கு 56 வயது. புதிய சீனாவை உருவாக்கும் மாபெரும் பணி அவர் முன் மலைபோல் எழுந்து நின்றது.
'வலிமையும் வளமும் மிகுந்த சீனா' என்ற இலட்சிய இலக்கை பின்பற்றிய மாவோ , நவீன தொழில் முன்னேற்றம் அடைந்த நாட்டை நிறுவ முயன்றார். எனினும், ஆரம்ப காலங்களில் இவருடைய முக்கியத்துவம் வாய்ந்த சமூக-அரசியல் திட்டங்களின் காரணமாக சீனாவின் வளர்ச்சி முடங்கி, பொருளாதாரம் சீர்குலைந்து, சமூக கொந்தளிப்புகள் உருவாகி, பரவலான பட்டினி நிலை ஏற்பட்டது; மில்லியன் கணக்கில் மக்கள் மாண்டனர். இதனை சமாளிக்க மாபெரும் முன்னெடுப்பு என்று சொல்லிக் கொண்டு எழுபத்தி ஐயாயிரம் விவசாயிகளை கூட்டாக விவசாயம் செய்ய வைத்தார். ஆனாலும், வெள்ளங்கள், உற்பத்தி வீழ்ச்சி காரணமாக சீன மக்கள் முன் இவரது மதிப்பு வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வீழ்ந்த இவரது மதிப்பை அதிகரித்துக் கொள்ள, இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லைத் தகராறை சாதகமாக்கி தயாராக இல்லாத இந்தியாவை போரில் வென்றார். சீன இளைஞர்களுக்கு, இந்தியா மீது விரோதத்தை ஊட்டிய புண்ணியம் இவரைத் தான் சேரும் . அவர் போட்ட வெறுப்பின் விதை இன்று வரை தொடருகிறது.
கலாசாரப் புரட்சி என்ற பெயரில் நகரங்களில் சகல வசதிகளுடன் இருந்த இளைஞர்களை கட்டாயப்படுத்தி கிராமங்களை நோக்கி நகரச் செய்தார்.அங்கு அவர்கள் கடின வேலைக்கு ஆட்படுத்தப் பட்டனர்கள். பண்டைய சீனாவின் அடையாளங்கள் இவரால் அழித்து ஒழிக்கப்பட்டது. மீண்டும் பூர்ஷ்வா சக்திகள் முதலாளித்துவத்தை கொண்ட வர முயல்கின்றன என்று கூறி சந்தேகத்துக்கு உள்ளான பல்லாயிரக் கணக்கானோர் செம்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். மாவோ , தன் இறுதிக் காலம் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதற்கு அவரது அரசியல் சாதுரியமும் ஆளுமையும் உதவியது.
பிச்சை எடுப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்பட்டது. சோம்பேறிகள் வருங்கால சீனாவுக்கு தேவை இல்லை என்று முழங்கினார். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உள்நாட்டு பொருட்களை மட்டும் தான் சீன மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்தி சட்டம் இயற்றினார் . இதனால் சீன நாட்டின் இறக்குமதி குறைக்கப் பட்டது. ஆங்கில முறைக் கல்வியை ஒழித்து, சீன மொழியை கற்க வலியுறித்தினார். அனைவருக்கும் (சிறைச் சாலையில் உள்ள கைதிகள் உட்பட ) தொழிற் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அதன் காரணமாக சீன இளைஞர்கள் தங்கள் சொந்தக் கால்களில் கௌரவத்துடன் நிற்க கற்றுக் கொண்டனர். மேலும், அவர்கள் வேலை தேடுபவர்களாக மாறாமல் வேலைகளை உருவாக்குபவர்களாக மாறினார்கள். இதனால் பின்னாட்களில் சீன நாட்டின் ஏற்றுமதி அதிகரித்தது. சுருங்கச் சொன்னாள், சீனாவின் வலிமையான இன்றைய பாய்ச்சலுக்கான அடித்தளம் மாவோவில் இருந்தே துவங்கியது.
மாவோ மதிப்பீடு:
லெனின், மார்க்ஸ் போன்றோரும் கம்யுனிஸ்டுகள் தான், ஆனால் அவர்கள் உலகத்தில் உள்ள எல்லா தொழிலாளர்களுக்கும் சேர்த்தே குரல் கொடுத்தனர். ஆனால் மாவோ, அப்படி அல்ல. மாவோ தன்னாட்டுக்கும், தன் நாட்டு தொழிலாளர்களுக்கும் மட்டும் தான் நல்லவர்.
