உண்டாட்டுப் படலம் - 1080

bookmark

தூதுபோக்கிய ஒருத்தி கணவன் வரக் கதவடைத்தது

1080.

பந்து அணி விரலினாள் ஒருத்தி. பையுளாள்.
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்;
‘வந்தனன்’ என. கடை அடைத்து மாற்றினாள்;
சிந்தனை தெரிந்திலம்; சிவந்த. நாட்டமே.
 
பந்து   அணிவிரலினாள்   ஒருத்தி  பையுளாள் (பந்தாடுகையில்
ஏந்திய)  பந்துக்கு   அழகு  செய்யும்  விரலுடையாள்  ஒருத்தி. பிரிவுத்
துயரம்  உடையவளாய்; சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள் -
கட்டழகில்  ஒப்பற்றவனாகிய   தன்  கணவனிடம்  (தோழியைத்)  தூது
அனுப்பினாள்;  வந்தனன்   எனக்  கடை அடைத்து மாற்றினாள் -
அவன் வந்தானாக வாயிற்கதவை அடைத்துத்(உள்ளே வர இயலாதவாறு)
தடுத்தாள்; சிந்தனை தெரிந்திலம்;  நாட்டம்  சிவந்த  -  (அவளது)
எண்ணம்   இன்னதென  யாம்  அறிய  இயலவில்லை. (அவள்) கண்கள்
(மட்டும்) (வெகுளியால்) சிவந்த வண்ணம் இருந்தன.

‘தூது   வந்தால்  அன்றி. வர இயலாதோ?’ எனக் கணவன் மாட்டுச்
சினத்தாள்  போலும்.  இல்லம்  தன்  சாம்ராச்சியம் ஆதலின் தலைவன்
தன்  மாட்டு  அன்பில்லாத  எதிரி  எனக்கருதி.  மன்னர்  கோட்டைக்
கதவை யடைத்துத் தாழிடல்  போல. தன்  இல்லக்கதவினை  யடைத்துத்
தாழிட்டாள்   என்க.   உண்மை    அன்பு    இல்லையென்று  குற்றம்
சுமத்தியபடி.   நுணுகியுணரவேண்டிய   புலவி   இது   வாதலின்  இது
புலவிநுணுக்கம்.                                            34